“அப சரணய்” என்பது என்ன? இதோ விளக்கம்

சிங்களத்தில் “அப” (Aba) என்பதன் பொருள் கடுகு என்பதாகும். சமூகத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத, பழைய ஆயுர்வேத மருத்துவத்தைச் செய்யக் கூடியவர்கள் பயன்படுத்திய ஒரு சொல்லாக “அப சரணய்” என்ற சொல் விளங்குகின்றது.

“அப” என்ற சொல்லை நேரடியாக மொழிபெயர்க்க முடியுமாக இருக்கின்ற போதும், “அப சரணய்” என்று எவ்வாறு மொழி பெயர்ப்பது என்று நானும் தலையைப் பீய்த்துக் கொண்டேன். சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள, சிங்கள - ஆங்கில, ஆங்கில - சிங்கள பல அகராதிகளையும் புரட்டினேன். ருகுணு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவரைக் கேட்டேன்.. “அப” என்பதற்குப் பொருளைத்தான் கண்டேனே தவிர “அப சரண” என்பதற்குப் பொருள் தெளிவாகவில்லை.

பிறகு சிங்களம் கற்பிக்கும் இரண்டு, மூன்று ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் அதற்கு “அப” (Apa) என்பது வாய்தவறி அவருக்கு “அப” (Aba) சரணம் என்றாகி இருக்கும் என்றனர். “துன் சரணய்” என்றால் மும்மணிகளின் சரணம் (அபயம்) என்று பொருள். அவ்வாறாயின் “அப சரணய்” என்றால் எங்கள் சரணம் அல்லது நாங்கள்தான் அவர்களுக்கு கதி என்று பொருள் கொள்ளலாம்.

சிங்களத்தில் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்ற சில சொற்கள் சமூகத்தில் ஓரிருவரால் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் பின்னர் அது புழக்கத்தில் வந்து விடுகின்றது. இந்தவகையில், “அப சரண” என்பதற்கு தெரண “ஜனதா ஹண்ட” விடை கண்டிருக்கின்றது.

ஞானசாரர் பல இடங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். பேருவளை நிகழ்வுக்குப் பின்னர் சர்வ சாதாரணமாக “அப சரண”வைப் பயன்படுத்துகின்றார். ஓரிடத்தில் “அமெரக்காவடத் கியன்ன தியன்னே அப சரணய் கியல” அமெரிக்காவுக்கும் “அப சரணய்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்கிறார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிந்திருக்கவில்லை. அவர் இதுதொடர்பில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிடும்போது,

“அப சரணய் என்பது என்ன? எனக்கு துன் சரணய் என்றால் அல்லது புது சரணய் என்றால் என்னவென்று மட்டுந்தான் தெரியும். யாரேனும் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் கதைத்தாலும் இறுதியில் நான் “புது சரணய்” என்று சொல்வதுதான் வழக்கம். “அப சரணய்” என்று யாரும் எனக்குச் சொல்லவும் இல்லை.

“அப சரணய்” தொடர்பில் “அத தெரண” அதன் வரலாற்றை ஆராய்ந்துள்ளது. கடுகுப் பயிர்ச்செய்கை விவசாயிகளின் எதிர்பார்ப்புடைய ஒரு தொழிலாக இருந்தபோதும், சாதாரண மக்கள் அதனை அழிவுக்குள்ளாக்கும் குறியீடாகவே காண்கின்றனர்.

வலகம்பா காலப்பகுதியில் அநுராதபுர மகா விகாரையை அழித்து அங்கு கடுகு பயிரப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களக் கவிதைகளில் பெரும்பாலும் சிறிய அளவைக் குறிப்பிட கவிஞர்கள் “அப மல் ரேணுவ” கடுகு மலரது மகரந்தம் போல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த குமார தலுப்பொத்த என்ற ஆய்வாளரிடம் இது பற்றிக் கேட்டபோது, கிராம மக்களுக்கு கைம்மருந்து முறையொன்று உள்ளது. நோய் ஏற்படும்போது, விசேடமாக புழு நோய்கள் (புழுக் கடிகள்) ஏற்படும்போது, வாய்பேசாமல் - யாருக்கும் தெரியாமல் செய்கின்ற புழுக்களை முற்று முழுதாக அழித்தொழிக்கின்ற (“கெம்”) கடுகு மருந்துக்கு “அப சரணய்” என்று சொல்லப்படுகின்றது. அதாவது, ஒன்றை முற்று முழுதாக அழிப்பதற்கு “அப சரணய்” என்று சொல்லலாம்.

“அப சரணய்” என்று ஒருவரைப் பார்த்துச் சொன்னால் அது “அழிந்து போ” என்று சாபமிடுவதா என அவரிடம் கேட்டதற்கு,

“அபசரணய்” என்பது அழிந்து போ எனக் குறிப்பதுதான் எனக் குறிப்பிட்டார். இவ்வாறு பௌத்த மதகுரு ஒருவர் சொல்வது தகுமா? பரவலாகப் பேசப்படுகின்ற இந்தச் சொல் இன்று பௌத்த மத அறிஞர்கள் பலரிடத்தும் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளது என்பதுவே உண்மை.

இது தொடர்பில் பௌத்த தேரர் ஒருவர் கருத்துரைக்கும்போது,

“பௌத்த தேரர் ஒருவருக்கு நிறையப் பணிகள் உள்ளன. தர்மத்தைப் போதிக்க வேண்டும், நாட்டு மக்கள் - நாடு பற்றி தெளிவுறுத்த வேண்டும், பிறருக்கு தங்களால் எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவதான் ஒரு பௌத்த துறவியின் செயற்பாடாக இருக்க வேண்டும். அதுதான் சிறந்த வழிமுறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்சொன்ன ஆய்வாளரினதும், பௌத்த துறவியினதும் கூற்றுக்களை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரரின் “அப சரண”வுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, அவரது “அப சரண” எங்கள் சரணம் என்பதிலிருந்து முற்று முழுதாக விலகி, “அவர்கள் அழிந்து நாசமாகக் கடவது” என்று பொருள் கொள்ளத் தக்கதாக இருக்கின்றது.

இங்கு மற்றொருவிடயம் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சிலர் எதனைப் பேசினாலும் சமயோசிதமாகப் பேசி, பின்னர் அவர்கள் பற்றி பிறர் குறை காணும்போது, அதிலிருந்து விலகுவதற்கு அவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கை கொடுக்கின்றது. ஞானசார தேரரும் சிங்கள மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவர் என்பதை அவர் பல இடங்களில் கூறியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது.

-கலைமகன் பைரூஸ்

Related

Articles 1312608321149349750

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item