மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக் குறி?
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_33.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை அடுத்து, நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், வர்த்தக ரீதியிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
மஹிந்தவின் கோட்டையான ஹம்பாந்தோட்டை மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விமானம் நிலையத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்நிலையில் மத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை விரைவில் இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்தல் விமான நிலையத்திற்கான விமான போக்குவரத்தை மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்டுள்ள பாரிய செலவினத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறவனம் 51,029.6 மில்லியன் ரூபாவை நட்டமாக சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்தல விமான நிலையத்தின் ஊடாக நான்கு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தமது சேவை நடத்தி வருகின்றன. சிறிலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா, பிளேடுபாய், ரொட்டனாஜெட் என்பன அதில் அடங்கும்.
மத்தல விமான நிலையம் பொருத்தமில்லாத இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பத்திலிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையம் 2000 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்டது. இதன் நிர்மாணப்பணிக்காக 27 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. சீன அரசாங்கம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.