ஜனாதிபதிக்கு ஐ.நா.அழைப்பு ; திரும்பப் பெற வலியுறுத்து

உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஐ.நா. சபையில் உரையாற்ற ராஜபக்ஷ்வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜபக்ஷ்வுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. சபையில் உரையாற்ற அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும் என அவர் கூறியுள்ளதாக ஹிந்து தெரிவித்துள்ளது.
த ஹிந்துவுக்கு இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: “இலங்கையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்பாதகங்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அவர்களது போராட்டத்தின் பயனாக படையினரின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆணையிடப்பட்டது.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், அதற்கு ஒத்துழைக்க முடியாது என்று இலங்கை அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பல்வேறு அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்து விட்ட நிலையில், மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் இவ்விசாரணைக்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு அளிக்கும்படி கடந்த 19ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார்.
அதேநாளில் வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த இலங்கை ஜனாதிபதி, “எந்த விசாரணையையும் ஏற்க முடியாது. ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார். இலங்கை ஜனாதிபதியின் இந்த திமிர் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் அதன் முடிவையும், அதன் துணை அமைப்புகளின் முடிவையும் ஏற்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு பிடிவாதம் பிடிக்கிறது; மனித உரிமை ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கே களங்கம் விளைவிக்கிறது; மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறது.
இதற்குப் பிறகும் ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பான் கி மூன் விடுத்த வேண்டுகோளை ராஜபக்ஷ் நிராகரிக்கிறார். இலங்கையின் இத்தகைய செயல்பாடுகள் ஐ.நா. அமைப்புக்கு மட்டுமின்றி, அதில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.
இத்தகைய சூழலில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் உரையாற்ற ராஜபக்ஷ் அழைக்கப்பட்டிருக்கிறார். கூட்டத்தின் முதல் நாளிலேயே பிற்பகல் அமர்வில் முதல் ஆளாக உரையாற்ற அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பையும், அதன் பொதுச் செயலாளர் பான்.கி.மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோரையும் அவமதித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும்.
அதைவிடுத்து ராஜபக்ஷ்வுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. சபையில் உரையாற்ற அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும்.
ஐ.நா. சபையில் ராஜபக்ஷ் உரையாற்றுவதற்கு உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜபக்ஷ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் உரையாற்றும் நாளில் நியுயோர்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்திருக்கிறது.
எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஐ.நா. மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதிப்பை காப்பாற்றும் வகையிலும் ஐ.நா. பொது அவையில் உரையாற்ற ராஜபக்ஷ்வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்; ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒப்புக்கொள்ளும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஐ.நா.விடம் வலியுறுத்தும்படி இந்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வு கொண்ட அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Related

உள் நாடு 7471928697051927059

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item