பண்டிதனாவதற்கு இலகு வழி தேரவாதத்தைத் தாக்குவதே! - BBS அடிப்படை வாதம் அல்ல
https://newsweligama.blogspot.com/2014/08/bbs.html
எந்தவொரு கலாச்சாரமும் ஏதேனும் ஒரு மதத்திலேயே தங்கியிருக்கின்றது. எங்கள் நாட்டின் பௌத்த கலாச்சாரம் தேரவாத பௌதத்த்தில் தங்கியுள்ளது. தற்போது இலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பண்டிதர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் தேரவாத பௌதத்தை தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று பண்டிதர்களாவதற்கு மிக இலகுவழி தேரவாதத்தை தாக்குவதாகும். இன்று தேரவாதத்தை யாரேனும் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கினால் நாளைய நாள் அவர் பண்டிதரே.
தேரவாதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் தாக்குகின்றவர்களின் சில ஆக்கங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. அவற்றின் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் கொஞ்சம் வாசகர்களை மட்டும் கொண்டுள்ள சில சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகின்றன.
இவர்களுக்கு மகாவம்சம் ஒவ்வாது. துட்டகைமுனு மன்னனைத் தூற்றுகிறார்கள். இவர்கள் தற்போது வெளிப்படையாக மகாநாயக்க தேர்ர்களை மட்டும்தான் விமர்சிக்காமல் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு சிலநேரம் சோபித்த தேரர் தேவைப்படுவார். இவர்கள் பொதுபல சேனாவை அடிப்படைவாத இயக்கமாகக் காட்டுகிறார்கள்.
சிலர் மகாவம்சம் சிங்கள பௌத்தர்களின் 4 ஆவது பிடகமாக (திரிபிடகத்தின் ஒரு பிரிவாக) இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை.
பிரச்சினை என்னவென்றால், மகாவம்சம் இலங்கைக்கு என்னதான் கொடுத்திருக்கின்றது? என்பதுதான். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் இலங்கையிலிருந்த சிங்கள பௌத்தம் பற்றி பேச வேண்டியுள்ளது. அது என்னவென்றால், மகிந்த தேரர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கிருந்தது சிங்கள பௌத்தம். அந்த சிங்கள பௌத்தத்தில் இருந்த கலாச்சாரம் ஏனைய கலாச்சாரங்கள் அனைத்திற்கும் இடமளித்த சிறந்த கலாச்சாரம். கருணை, இரக்கம் எனும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து கலாச்சாரங்களுக்கும் இடமளித்த கலாச்சாரம். பண்டுகாபய மன்னனின் காலப்பிரிவை எடுத்துக்கொள்ளுங்கள். சகல மதங்களையும் போசித்த அவரது காலப்பிரிவானது, முழுமையாக நீதி நிலைநாட்டப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, மிகவும் உயர்வான முறையில் நீதி நிலைநாட்டப்பட்டது.
இக்கால கட்டத்தில்தான் விஜயன் உள்ளிட்டோர் இலங்கைக்கு வந்தார்கள். இக்கால கட்டம் பற்றி “வரிக பூர்ணி(க்)காவ என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.
மானேவே விமலரத்ன தேரர் இந்நூலில் இயக்கர்கள் (அரக்கர்கள்) குலத்தினர் பற்றிய தகவல்களைப் பெற்று, இப்போது நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியிலேயே எழுதியிருக்கின்றார்.
அரக்கர்களின் “கௌரான” மொழியும் கலாச்சாரமும் அன்றிருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற தூய சொற்களும் அந்த மொழியில் இருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற “செப்படவிஜ்ஜாவ” போன்ற சொற்கள் அந்தமொழியிலிருந்து பெறப்பட்டதாகவே கருதப்படுகின்றது. (தமிழில் “செப்படிவித்தை” என்ற சொல் இருப்பது இங்கு மனங்கொள்ளத் தக்கது.) அதேபோல, அக்கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்கள் இன்று பயன்படுத்துகின்ற சிங்கள மொழியிலும் கலந்துள்ளன.
அந்தக் காலகட்டத்தில்தான் விஜயன் இலங்கைக்கு வருகின்றான். அப்போது இலங்கையில் பௌத்தம் இருந்தது மட்டுமன்றி, சிலர் அதில் உயர்நிலையும் அடைந்திருந்தனர்.
மகாவம்சம் ரத்னவல்லியை தேவதையாக்குகின்றது. வரலாற்றை நாங்கள் எங்கள் தேவைக்கேற்ப எழுதுகின்றோம். சென்ற பல வருடங்களின் வரலாற்றைக் கூட நாங்கள் எங்கள் தேவைக்கேற்பவே எழுதுகின்றோம்.
விஜயனின் பின்னர் இயக்க கௌராணிக கலாச்சாரத்தில் இல்லாதவை… சிறு ஆக்கிரமிப்பு ஏற்படுகின்றது. அக்காலப் பகுதியில் அதனைத் தற்பாதுகாப்பு எனவும் சொல்லலாம். அதற்கு முன்னர் பழைமையான கலாச்சாரங்கள் எதுவும் இருக்கவில்லை.
விஜயனின் பின்னர் இந்நாட்டுக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் முக்கியத்துவமும் அதுவே. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் இந்நாட்டுக்குள் வந்தபோதும் ஆட்டம்காணாது, தென்னிந்தியாவிலிருந்து எவ்வளவுதான் ஆக்கிரமிப்புக்கான தலையீடுகள் வந்தபோதும், காலிங்க மாகனிலிருந்து சேன குத்திக்க, எல்லாளன் போன்றோரின் ஆக்கிரமிப்புக்களுக்கும் நாங்கள் அசையவில்லை. அவ்வாறு அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்தால் நாங்கள் வைதீக இந்து கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டிருக்கக் வேண்டியிருக்கும்.
மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், அவர் கொண்டுவந்த மூன்றாவது “சங்காயனா” பௌத்த சமயத்தில் இருந்த குறித்ததொரு வகை ஆன்மீகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு இலங்கையில் இருந்த தற்பாதுகாப்பு உதவிபுரிந்தது. சொல்லும் விடயங்களுக்கும் மேலாக தற்காப்பு மிக முக்கியமானது. இந்து, கிறிஸ்தவ மதங்களைப் போல பெரும்பாலும் இல்லாவிட்டாலும் மிகச் சிறியளவில் மகிந்த தேரர் கொண்டுவந்த புத்த சமயத்தில் இந்த குணாம்சங்கள் இருந்தன. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களில் இருக்கின்ற ஆன்மீகக் கொள்கைகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புத் தன்மையுள்ளது.
மகிந்த தேரர் புத்த சமயத்தை இலங்கைக்குள் கொண்டுவந்ததும் இந்தக் குணாம்சங்கள் இருந்தன. அறிவின் இலட்சணம் இருந்தது. முகங்கொடுக்க வேண்டும் என்ற குணாம்சம் இருந்தது. தர்மவாதம் உதவி புரிந்தது. விஜயனின் பின்னர் இந்த தற்காப்புக் குணாம்சம் ஏதேனும் ஒருவகையில் உதவிபுரிந்தது. மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது. அப்போது கிறிஸ்தவ கலாச்சாரம் மடைதிறந்து வரத் தொடங்கியது.
மகாசேன மன்னன் சிங்கள பௌத்த மன்னனாக இருந்து மகாவிகாரையை சீர்செய்து உழுந்து பயிரிட்டார். மகாசேனனின் அரசியல் தோல்வியோடு சிங்கள பௌத்த தேரவாதம் நிலையானது. அங்கு முன்னர் இருந்த சிங்கள பௌத்த கலாச்சாரமும் ஓர் அங்கமாக இருந்தது.
சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நூற்றுக்கு 75 – 80 வீதம் சிங்கள பௌத்த இலட்சணங்கள் இருந்தன. ஆக்கிரமிப்புடன் கூடிய தற்பாதுகாப்பு பண்பும் இருந்தது. தற்போது பண்டிதர்கள் போல இருப்பவர்களுக்கு அதனைச் சகிக்க முடியவில்லை.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போதும், அவர்களால் இந்த கலாச்சாரப் பண்புகளை இல்லாதொழிக்க முடியவில்லை. ஒல்லாந்தருக்கும் முடியவில்லை. ஆங்கிலேயருக்கும் முடியவில்லை.
முஸ்லிம்கள் இலங்கைக்கு 9 ஆம் நூற்றாண்டில் வந்ததாக கதையளக்கின்றார்கள். இது பச்சைப் பொய். அறபிகள் முஸ்லிம்களாவதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். எகிப்திலிருந்து இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் வியாபாரம் பற்றிக் கற்றுக் கொள்வது போன்ற விடயங்களுக்காகத்தான் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். உண்மையில் இந்நாடு கல்வியில் கேந்திர நிலையமாக அன்று இருந்திருக்கின்றது… நாலந்தா, தக்ஷிலா, மற்றும் பல்கலைக் கழகங்கள் உருவாவதற்கும் முன்னர் இலங்கை கல்வியில் உயரிய இடத்தை எட்டியிருந்திருக்கின்றது. சிலர் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள். சீனர்களும் சேது பாலத்தன் வழியாக வணிகர்களாக இலங்கை வந்திருக்கின்றார்கள். சேது பாலத்தின் வழியில் சீனர்களும் அறாபியர்களும் பண்டமாற்றம் செய்து கொண்டது இலங்கையில்தான். இந்நாட்டுக்கு வருகைதந்த அறேபியர் அந்நாட்டிலிருந்து பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இலங்கைப் பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டார்கள். அவர்களின் பாட்டிமாரும், மாமிமார் எல்லோரும் சிங்களத்தில்தான் கதைத்தார்கள். அவர்கள் தமிழில் கதைக்க வாய்ப்பில்லை.
அதன் பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு வந்தது போலவே மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் சென்றிருக்கின்றார்கள். இவர்களுக்கும் முதலில் இலங்கைக்கு வந்த முஸ்லிம்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.
இவ்வாறாக இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் பிரதானமாக இரு முறை வந்திருக்கின்றார்கள். இந்த முஸ்லிம்கள் பற்றிய வரலாறு “இலங்கை முஸ்லிம்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ள லோனா தேவராஜா என்ற வரலாற்று ஆசிரியைக்குத் தெரியாது. கருத்துக்களைத் தேடியெடுப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் அவருக்குத் தெரியவில்லை.
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த இந்த முஸ்லிம்கள் ஆரம்பத்தில் அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம்களை விட பெரிதும் வேறுபட்டார்கள்.
இந்தியாவில் அன்றிருந்த சில செயற்பாடுகளினாலேயே 13 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த முஸ்லிம்கள் கலாச்சார செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்து வந்த முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் பேசக் கூடியவர்களாக மாறிவிட்டார்கள்.
அவர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் சிங்களவர்களாவதற்கோ பௌத்த மதத்தைத் தழுவுவதற்கோ எவ்வித தலையீடுகளும் இருக்கவில்லை.
சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்தேய நாடுகள் சூட்சுமமான முறையில் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைகின்றது. அதற்கு மேலாக இந்தப் பிரச்சினையை தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாக்க் காட்டுவதற்கு முழு மூச்சுடன் செயற்படுகின்றது. அதனைத் தவறான எண்ணக்கருத்தாகவே நான் கருதுகின்றேன்.”
இலங்கையில் 253 விகாரைகள் மூடப்பட்டுள்ளதாக ஒரு பத்திரிகையில் நான் படித்தேன். இதுபற்றி யார்தான் கதைத்தார்கள்? பாடசாலைகளை மூடினால் பேசுவார்கள்.
கிராமப்புற மக்கள் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்பவதனாலேயே பாடசாலைகள் மூடப்படுகின்றன. விகாரைகள் மூடப்படுவற்குரிய காரணங்கள் வேறு. 253 விகாரைகள் மூடப்பட்டிருப்பதன் அர்த்தம் என்னவென்றால், சிங்கள பௌத்தர்களிடம் இருந்த அந்த தற்பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்பதே.
ஆனால் முஸ்லிம் பள்ளிவாயல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் பாரம்பரிய கத்தோலிக்க, எங்க்லிக்கன் எனும் மெதோதிஸ்த தேவாலயங்கள் அல்ல. காளான்கள் முளைப்பது போல எழுகின்ற அமெரிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள். இவ்வாறு பள்ளிவாயல்களும், தேவாலயங்களும் உருவாகும் போது விகாரைகள் மூடப்படுமாயின் ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. கிராமம் கிராமமாக பள்ளிகள் கட்டப்படாதவிடத்தும் கிராமங்கள் பலவற்றுக்கேனும் ஒரு பள்ளிவாசல் எழும்பத்தான் செய்கின்றது.
இப்போது பௌத்தர்கள் என்னதான் செய்கிறார்கள். பௌத்தர்களின் தற்காப்புக் கருதியே மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கின்றார். அதற்காகவே முயற்சிசெய்திருக்கின்றார். இவ்வாறு பௌத்த விகாரைகள் மூடுவதற்கு இடமளித்தால் கடைசியாக எங்களுக்கு புகழ்மிக்க குறித்த சில விகாரைகள் மட்டுமே எஞ்சும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. கிராமத்திலுள்ள விகாரையைப் பாதுகாப்பது தேவைப்பாடாக உள்ளது.
மியன்மார், தாய்லாந்து, லாஓஸ் போன்ற நாடுகளில் போன்ற நாடுகளில் தேரவாத பௌத்தம் நின்று நிலைப்பதற்குக் காரணம், பாதுகாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் இலங்கையிலிருந்து பௌதத்தை அந்நாடுகளுக்குக் கொண்டுசென்றதனாலாகும். இலங்கையிலிருந்து மன்னர்கள் அந்நாடுகளை ஆக்கிரமித்து பௌதத்தை அங்கு பரப்பவில்லை. போர்த்துக்கேயர் இந்நாட்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பியது போல பலாத்காரமான முறையில் அந்நாடுகளில் பௌத்த மதம் பரப்பப்படவில்லை. எங்கள் தேரவாத பௌதத்தில் இருந்த மகாவம்சம் உறுதிப்படுத்திய தற்காப்பினாலேயே தேரவாதம் இன்று இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றது.. உலகில் தேரவாதம் நிலை கொண்டிருக்கின்றது.
நான் பொதுபல சேனா உறுப்பினன் அல்லன். என்றாலும் நான் பொதுபல சேனாவினர் அடிப்படைவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. பௌத்தர்களுக்கு இருக்கின்ற தற்காப்புக்கேற்ப பௌதத்தைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கின்றார்கள். அப்படிக் குரல் கொடுப்பதற்குப் பெயர் அடிப்படைவாதமோ இனவாதமோ அல்ல. எங்கள் மகாவம்சம் இல்லையென்றால் உலகில் தேரவாதமே இல்லை.
சிங்கள பௌத்த கலாச்சாரத்தை இந்நாட்டில் பாதுகாக்க முடியாது விட்டால் எங்கேதான் பாதுகாக்கப்படும் என்றுதான் கேட்க வேண்டும்.
சிங்களத்தில் - சரத் பெரேரா
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நன்றி - “சிலுமின”