அளுத்கமையில் புனரமைக்கப்பட்ட 55 வீடுகள் கையளிக்கப்பட்டன
https://newsweligama.blogspot.com/2014/08/55.html
அளுத்கமை,பேருவளை பிரதேச வன்முறையில் சேதமடைந்த வீடுகளில் 55 வீடுகள் முழுமையாக புனரமைக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
அளுத்கமை பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்ட 211 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 139 வீடுகள் சிறியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரியளவில் பாதிக்கப்பட்ட 72 வீடுகளில் 55 வீடுகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 55 வீடுகளில் 42 வீடுகள் இராணுவத்தினராலும் 13 வீடுகள் கடற்படையினராலும் புனரமைக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், வன்முறைகளின் போது சேதமடைந்த 82 வியாபார நிலையங்களில் 28 வியாபார நிலையங்கள் சிறு சேதமடைந்துள்ளதுடன் 56 வியாபார நிலையங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் 13 வியாபார நிலையங்கள் புணரமைக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 4 வியாபார நிலையங்கள் இராணுவத்தினராலும் 1 வியாபார நிலையம் கடற்படையினராலும் 8 வியாபார நிலையங்கள் விமானப்படையினராலும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 34 வியாபார நிலையங்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் - DC