முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் கூட்டம் நடாத்த தயாராகும் பொதுபல சேனா
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_126.html
பூஜை வழிப்பாடு என்ற போர்வையில் பொதுபல சேனா அமைப்பு, பாணந்துறையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திக்கல வீதியில் உள்ள பூர்வராம விகாரையில் முஸ்லிம் எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் குறைந்த வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களாகும்.
அத்துடன் ஜிலான் சென்றல் கல்லூரி மற்றும் பள்ளிவாசல் என்பன இந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளன.
திக்கல பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கோ, பௌத்தர்களுக்கோ தமது வழிப்பாடுகளை மேற்கொள்வதில் இதுவரை தடைகளோ தொந்தரவுகளோ ஏற்பட்டதில்லை.
இந்த நிலையில், பிரதேசத்தில் மத ரீதியான வெறுப்பை தூண்டி மக்கள் மத்தியில் இனவாத முறுகலை ஏற்படுத்த பொதுபல சேனா முயற்சித்து வருவதாக பிரதேசத்தில் உள்ள பௌத்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுபல சேனாவின் பூஜை வழிப்பாடுகளை நிறுத்துமாறு ஏற்கனவே பிரதேசவாசிகள் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
இதனடிப்படையில், வாகன பேரணியோ, ஊர்வலங்களோ செல்ல இடமளிக்க போவதில்லை என பாணந்துறை வடக்கு பொலிஸார் மக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
முடக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் முகநூல் பக்கம் மீள இயக்கம்
முடக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் முகநூல் பக்கம் மீள இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பின் ரசிகர் முகநூல் பக்கம் கடந்த ஜூன் மாதம் முடக்கப்பட்டிருந்தது.
குரோத உணர்வைத் தூண்டும் கருத்தக்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்து அமைப்பின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில தரப்பினர் நடத்திய சைபர் தாக்குதல்களினால் முகநூல் பக்கம் முடக்கப்பட்டதாக பொதுபல சேனா அறிவித்திருந்தது.
எனினும் தற்போது முகநூல் பக்கம் வழமை போன்று இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.