எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_90.html
இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிவீரர்கள் விமானிகளின் அறை ஒலிப்பதிவு கருவியை செவ்வாய்க்கிழமை கடலிலிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
கறுப்புப் பெட்டியின் முதலாவது பாகமான விமான தரவு பதிவு கருவி மீட்கப்பட்டதற்கு மறுநாளே இந்த கருவி மீட்கப்பட்டுள்ளது.
எயார் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசிய சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் பயணித்த வேளை காணாமல் போயிருந்தது.
மேற்படி விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்தவர்களது 48 சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஏனைய சடலங்கள் கடலின் அடித்தளத்தில் விமானத்தின் பிரதான உடல் பகுதிக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த வாரம் விமானத்தின் வால் பகுதி கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் விமானத்தின் பிரதான உடல் பகுதி உள்ளது.
மேற்படி விமானத்தின் பிரதான உடல் பகுதியை கண்டு பிடித்து மீட்பதற்கு இதுவரை திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுப்பிரியடி தெரிவித்தார்.
விமானத்தின் ஒலிப்பதிவு கருவி கடலின் கீழ் சுமார் 30 மீற்றர் ஆழத்தில் விமானத்தின் கனமான இறக்கை பாகமொன்றின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது எயார் ஏசியா விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை கண்டறிய உதவும் எனக் கூறப்படுகிறது.
தற்போது அந்த உபகரணம் ஜாவா கடலிலிலுள்ள இந்தோனேசிய பண்டா ஏக் போர்க் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி யொருவர் கூறினார்.