தோல்வியிலும் இனவாதம் பேசுகிறார் முன்னாள் ஜனாதிபதி': NFGG

ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ‘நடந்து முடிந்த ேர்தலில் மக்களின் தீர்ப்பானது, இனவாதத்தினைத் தோற்கடிக்கும் தீர்ப்பாகவே அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், மக்களால் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தோல்வியிலும் இனவாதம் பேசுவது கவலையளிக்கிறது’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அப்துர்ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது..

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இந்நாட்டை இன, மொழி, மத பேதங்கள் கடந்த ஒர் ஐக்கிய தேசமாக கட்டியெழுப்பக் கூடிய ஒர் பொன்னான வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்ததிருந்தது. ஆனால் அவர் அந்த தேசியக் கடமையினை செய்யவில்லை. தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்நாட்டில் இனவாதத்தை, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் ஊடாக அவர் திட்டமிட்டு வளர்த்தார்.

இந்த இனவாதம் இந்நாட்டிற்கும் இந்நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திய சேதங்களை மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.இந்நிலமை தொடர்ந்தால், நாட்டின் எதிர்காலம் எவ்வளவு தூரம் பயங்கரமானதாக அமையும் எனவும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். அதன் காரணமாகவே கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக பெரும்பான்மையான நாட்டு மக்கள் வாக்களித்து அவரை தோற்கடித்தனர்.

இந்நிலையில் தனது தோல்விக்குக் காரணம் ஈழத்தமிழ் மக்களும் முஸ்லிம்களுமே என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இதனை தென்னிலங்கையில் அவர் தெரிவித்துள்ள விதமானது, இனவாதத்தைத் தூண்டுகின்ற கருத்தாகவே இருக்கிறது. உண்மையில் அவரை தோற்கடிப்பதற்கான அதிகூடிய வாக்குகளை பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களே வழங்கியுள்ளனர். 2010ம் ஆண்டு அவர் பெற்றுக்கொண்ட அதிகப்படியான வாக்குகளையும் இந்தத் தடவை அவரது தோல்விக்கு காரணமான வாக்கு வித்தியாசத்தினையும் பார்க்கும்போது, இது தெளிவாகிறது.

கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை விடவும் ஏறத்தாள 1850000 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்றிருந்தார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இவர் 450000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். ஆக முன்னைய தேர்தலையும் நடந்து முடிந்த தேர்தலையும் ஒப்பிடும்போது, ஏறத்தாள 23 லட்சம் மக்களின் வாக்குகளை இவர் இழந்திருக்கிறார். இந்த 23 லட்சம் வாக்குகளில் மிகப்பெரும்பான்மையானவை சிங்கள வாக்காளர்களின் வாக்குகளே என்பதினை இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் தெரிந்து கொள்ளமுடியும்.

கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையும் மாவட்ட ரீதியாக ஒப்பிடும்போது, 2010ம் ஆண்டுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய 284000 வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வென்றிருந்தார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இவர் 4000 வாக்கு வித்தியாசத்தில் கம்பஹாவில் தோற்றிருக்கிறார். ஆக இரண்டு தேர்தல்களுக்குமிடையில் 288000 வாக்காளர்களை அவர் இழந்திருக்கிறார். ஆனால் கம்பஹா மாவட்டம் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு மாவட்டம் அல்ல. அது போலவே கொழும்பு, குருணாகல, கண்டி, களுதற, பொலன்னறுவை மற்றும் அஅனுராதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் பெருந்தொகையான வாக்குகளை அவர் கடந்த இரு தேர்தல்களுக்குமிடையில் இழந்திருக்கிறார். கம்பஹாவைப்போலவே இந்த மாவட்டங்களும் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் அல்ல.

அதுபோலவே இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்ற சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களை எடுத்துக்கொண்டாலும் கூட கடந்த 2010ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும்போது அவர் அதிகப்படியாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் 2010ம் ஆண்டு தேர்தலில் 121551 வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். இந்தத்தேர்தலில் இந்த மாவட்டத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவர் பெற்றுக்கொண்ட அதிகப்படியான வாக்குகள் 104587 ஆகும். ஆக தனது சொந்த மாவட்டத்திலும் கூட தனது செல்வாக்கினை அவரால் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை என்பதே யதார்த்தமாகும். அது போலவேதான் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலும் இவருக்கு எதிராக மக்கள் கணிசமாக வாக்களித்துள்ளனர்.

அந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே பெரும்பான்மையாக இம்முறை வாக்களித்திருக்கிறார்கள். அவர் தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இனவாத சூழ்நிலைகள்தான் இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். இதனை இன்னமும் புரிந்து கொள்ளாத அவர், தமிழ் முஸ்லிம் மக்கள்தான் என்னை தோற்கடித்தார்கள் என தென்னிலங்கையில் கூறி வருகிறார். இவ்வாறு தனது தோல்வியிலும் இனவாதம் பேசுகின்ற முன்னாள் ஜனாதிபதியின் கருத்து கவலையளிக்கிறது”

Related

உள் நாடு 2717912207749105586

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item