புலி ஆதரவாளர்களுடன் ஐ.தே.க. சேர்ந்து செயற்படுவது ஆபத்தான விடயம்: டலஸ்
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_161.html
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படுவது நாட்டுக்கே ஆபத்தான விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குதற்காக டெஸ்மன்ட் டீ சில்வா தலைமையிலான மூன்று நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் டெஸ்மன்ட் டீ சில்வா தொடர்பில் விமர்சன கட்டுரையை எழுதியுள்ளார்.
இதில் லண்டனில்; இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இறுதியுத்தத்தில் விடுதலைப் புலிகளை கொன்றமையினாலேயே நான்கு இலட்சத்து தமிழ் மக்களை காப்பாற்ற முடிந்தது. இதனையாரும் மறைக்க முடியாது என டெஸ்மன்ட் டீ சில்வா கூறியிருந்தார். இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவின் முக்கியஸ்தர் வலியுறுத்தி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இதனால் டெஸ்மன்ட் டீ சில்வா தமிழ் விரோதியாக பார்க்கப்பட்டு அவருக்கு எதிராக செயற்பட எத்தணிக்கின்றனர். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் தேசிய பாதுகாப்பு எதிராக செயற்படுவதன் பின்புலம் தெரியவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்றார்.