விசாரணைகள் தொடர்பாக பான் கீ மூன் என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கத்தின் நி்லைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_327.html
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கத்தின் நி்லைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் சாதாரண ஒரு விடயமாகவே பார்க்கின்றது. இந்தியாவில் புதிய அரசாங்கம் வந்துள்ளதன் காரணமாக இவ்வாறு சந்திப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வர விசா வழங்கப்படாவிட்டாலும் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். அவர் இன்னும் 10 நாட்களில் ஓய்வுபெறவுள்ளதால் இவ்வாறு கூறுகின்றார் என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை பற்றி?
பதில்: இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பல வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்கின்றார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்புக்கான சந்தர்ப்பத்தை இந்தியாவிடம் கேட்டிருக்கும். இந்திய அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியிருக்கும். இதனை நாங்கள் ஒரு விடயமாகவே பார்க்கின்றோம்.
ஆனால் இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகளில் முக்கிய பங்கை வகிக்கும் சுப்ரமணியம் சுவாமி கடந்த சில தினங்களாக இலங்கையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். அவர் அதில் முக்கிய சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். எமது நாட்டின் அரசியல் மற்றும் ஏனைய நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அதனடிப்படையில் செயற்பட்டுவருகின்றோம். சில வாரங்களுக்கு முன்னர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இலங்கை வந்திருந்தனர். இதன்போது இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக கூறியிருந்தனர்.
கேள்வி; கூட்டமைப்பின் இந்திய விஜயத்தினால் அரசியல் தீர்வு விடயத்தில் ஏதாவது அழுத்தங்கள் இலங்கைக்கு வருமா?
பதில்: எதிர்காலத்தில் நடக்கப்போவதாக எதனையும் மதிப்பிட்டு என்னால் கூற முடியாது. அது சந்திப்பு இடம்பெற்ற பின்னர் வரும் நிலைமைகளை பொறுத்து ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
கேள்வி: அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல் உள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளாரே?
பதில்: அது அவரின் கருத்து. அதேபோன்று அதற்கு மாறான கருத்துக்களை கூறுகின்றவர்களும் உள்ளனர். எப்படியிருப்பினும் அரசியலமைப்பு விவகாரம் குறித்து இறுதியாக வியாக்கியானம் கூறும் உரிமை உயர்நீதிமன்றத்துக்கே உள்ளது. எவ்வாறெனினும் இந்த விடயங்கள் குறித்து நாம் முன்கூட்டி கதைப்பதில் அர்த்தம் இல்லை. காரணம் அரசியலமைப்பின்படி அடுத்த தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது.
கேள்வி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளாரே?
பதில்: ஐ.நா. விசாரணை செயற்பாடுகள் தொடர்பில் பான் கீ மூன் என்னதான் கூறினாலும் இலங்கை அரசாங்கத்தின் நி்லைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் மாறாது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது. ஆனால் அதேயளவிலான மக்கள் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ இல்லை. இதுதான் வித்தியாசம்.
கேள்வி: இலங்கைக்கு வருவதற்கு அனுமதியக்காவிடினும் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளாரே?
பதில்: அவர் இன்னும் 10 நாட்களில் ஓய்வுபெறப்போகின்றார். எனவே ஓய்வுபெறப்போகின்ற நிலையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வழமையாகும்.