குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_708.html
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் பகுதியில் உள்ளதாக கூறப்படும் மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை விரைவில் தீர்மானிக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் தொல்பொருள் நிபுணர் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்தது.
எனினும் சட்ட வைத்திய அதிகாரி வருகைதராமையால் இன்று அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யவுள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடி விரைவில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குருக்கள்மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக விசாரணை நவம்பர் மாதம் 24 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடியில் தமது அமர்வினை நடத்தியபோது குருக்கள்மடத்தில் உள்ளதாக கூறப்படும் மனிதப் புதைகுழி தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.