எம்.எச். 370 விமானம் கடலில் இறக்கப்படுவதற்குமுன் ஒட்சிசன் இல்லாமல் பயணிகள் உணர்விழந்திருக்கலாம்
http://newsweligama.blogspot.com/2014/08/370.html
கடந்த மார்ச் மாதம் காணாமல் போன, மலேஷியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்370 விமானத்தின் பயணிகள், சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாத நிலைக்கு தலைமை விமானியால் தள்ளப்பட்டிருக்கலாம் எனவும் சுமார் 4 மணித்தியாலங்களின்பின் அவ்விமானம் இந்து சமுத்திர கடற்பரப்பில் இறக்கப்பட்டிருக்கலாம் எனவும் சிரேஷ்ட விமான விபத்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8 ஆம் திகதி மலேஷியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்று 239 பேருடன் எம்.எச்.370 விமானம் மர்மமாக காணாமல் போனது. பாரியளவிலான தேடுதல்கள் நடத்தப்பட்ட பின்னரும், அவ்விமானம் வேறெங்கும் தரையிறங்கியமை அல்லது விபத்துக்குள்ளாமைக்கான தடயங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், நியூஸிலாந்தைச் சேர்ந்த சிரேஷ்ட விமான விபத்து விசாரணை அதிகாரியான இவான் வில்ஸனும் ஜெவ் டெய்லரும் இணைந்து எழுதிய நூலொன்றில், தலைமை விமானியான அஹமமட் ஷா இவ்விமானத்தை காணாமல் போகக் செய்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அவ்விமானத்துக்கு என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்த பல்வேறு காரணங்களை ஆராய்ந்து அவற்றில் சாத்தியமில்லாதவற்றை ஒதுக்கிய நிலையில், இத்தீர்மானத்துக்கு தாம் வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவான் வில்ஸன் வெளியிட்டுள்ள கருத்தின்படி, தலைமை விமானியான அஹமட் ஷா, விமானத்தை 39000 அடி உயரத்துக்கு கொண்டு சென்றபின் பயணிகள் பகுதியில் காற்றுச்சீராக்கத்தை வேண்டுமென்றே நிறுத்தியிருக்கலாம். இதனால் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாத நிலையை பயணிகள் எதிர்நோக்கியிருப்பர்.
ஒட்சிசன் குறையும்போது பயணிகளின் ஆசனத்துக்குமேல் ஒட்சிசன் மூகமூடிகள் இறக்கப்படுவது வழக்கம். ஆனால் அதன் மூலம் சுமார் 20 நிமிடங்களே சுவாசிக்க முடியும். அதன்பின் பயணிகள் மயக்க நிலையை அடைந்திருப்பர். அது இரவு நேரப் பயணமாகையால் உறக்கத்திலிருந்த பயணிகள் ஒட்சிசன் முகமூடிகளை பொருத்திக்கொள்ளாதிருந்தால் சில விநாடிகளிலேயே அவர்கள் உணர்விழந்திருப்பர்.
இணை விமானியான பாரிக் அப்துல் ஹமீட்டை ஓய்வெடுக்குமாறு கூறி, விமானியின் அறையிலிருந்து வெளியே செல்லவைத்துவிட்டு தலைமை விமானி அஹமட் ஷா உட்புறமாக தாளிட்டுக்கொண்டபின் இந்நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருக்கலாம். இதனால் இணை விமானியாலும் பயணிகளுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
தலைமை விமானி அஹமட் ஷா, தன்னைத் தவிர ஏனைய அனைவரும் மயக்கமடைந்த நிலையில் சுமார் 4 மணித்தியாலங்கள் விமானத்தை இந்து சமுத்திரத்திற்கு மேலாக செலுத்திச் சென்று கடலில் விமானத்தை இறக்கியிருப்பார். அவ்விமானம் சிதைவடையாமல் ஒரே அலகாக கடலடிக்கு சென்றிருக்கும். அதனால்தான் விமானத்தின் சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மேற்படி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானத்தை வேறு யாரும் கடத்துவதற்கு முயன்றிருந்தால், ட்ரான்ஸ்பொண்டர் எனும் குறியீட்டு சமிக்ஞைகள் மூலம் அதை உடனடியாக கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவித்திருக்க முடியும்.
அவ்வாறான சமிக்ஞை எதுவும் கிடைக்காததால் இது பெரும்பாலும் விமானிகள் அல்லது ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட யாரேனும் செய்த வேலையாக இருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.