உயர்தர பரீட்சைக்குச் சென்று கொண்டிருந்த 19 வயதான மாணவி ரயில் மோதி மரணம்
http://newsweligama.blogspot.com/2014/08/19.html
கண்டியிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலால் பாடசாலை மாணவி ஒருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 9.35 மணியளவில் தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அண்மித்தான பகுதியில் ஹெலிரூட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் 12.30 மணிக்கு இடம்பெறவிருந்த புவியியல் உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வீட்டிலிருந்து 7.30 மணிக்கு பாடசாலை சீருடையுடன் தலவாக்கலைக்கு இந்த மாணவி வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த மாணவி ரயிலில் மோதியபோது படுங்காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன் பின்னர் ரயிலின் சாரதிகள் அவரை நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போது நானுஓயா புகையிரத நிலைய அதிகாரிகள் குறித்த மாணவியை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதித்தபோது மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த மாணவி திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த வெள்ளசாமி பிரியா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.