பாரிஸில் கொள்ளையர்களிடம் 250,000 யூரோவை பறிகொடுத்த சவூதி இளவரசர்
http://newsweligama.blogspot.com/2014/08/250000.html
பிரான்ஸில் கொள்ளையர் குழுவொன்றினால் துப்பாக்கி முனையில் 250,000 யூரோ பணத்தை (சுமார் 4 கோடியே 32 இலட்சம் ரூபா) பறிகொடுத்த சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த் என பிரெஞ்சு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை ஆயுதமேந்திய குழுவொன்றினால் இப்பணம் சவூதி இளவரசர் ஒருவரிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இளவரசர் யாரெனத் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த்தான் அவர் என பிரெஞ்சு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர் 2005 ஆம் ஆண்டு காலம்சென்ற சவூதி அரேபிய மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் கனிஷ்ட புதல்வராவார்.
10 வாகனங்கள் கொண்ட வாகனத் தொடரணியொன்றில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட ஒரு குழுவினருடன் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த் சென்றுகொண்டிருந்தபோது ஹொலிவூட் திரைப்பட பாணியில் கொள்ளையர் குழுவொன்று வழி மறித்து 250,000 யூரோ பணத்தை கொள்ளையடித்து சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தனது பிரத்தியேக விமானத்தில் பயணம் செய்வதற்காக பாரிஸ் விமான நிலையமொன்றை நோக்கி இளவரசர் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த், ஒரு தடவை ஸ்பெய்னின் இபிஸா தீவிலுள்ள உணவு விடுதியொன்றில் 75,000 யூரோ பணத்தை (சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபா) டிப்ஸ் ஆக விட்டுச் சென்றிருந்ததாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.