ராஜபக்ஷ குடும்பம் முட்டாள்களின் கூடாரம் - சரத் பொன்சேகா
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_538.html
ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷவினரின் குடு்ம்பம், முட்டாள்களின் கூடாரம் என சரத்பொன்சேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, பதுளையில் ஜனநாயக தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ராஜபக்ஷ குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னொரு காலத்தில் இலங்கை ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான நாடாக விளங்கியது. நாடு அபிவிருத்திப் பாதையில் சென்றது.
இன்று நாடு பின்தள்ளப்பட்டுவிட்டது. ஆசியாவின் வறுமை மிகுந்த நாடுகள் வரிசையில் கடைசி ஐந்து இடங்களுக்குள் இலங்கை தள்ளப்பட்டு விட்டது.
இன்றைய நிலையில் நாடு பொருளாதாரத்தில் சீரழிந்து கொண்டிருக்க, ராஜபக்ஷ குடும்பம் மட்டும் பொருளாதாரத்தில் செழித்துக் கொண்டிருக்கின்றது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் மிக முட்டாள்தனமான துறைமுகங்களில் ஒன்றாகும். அதனை உருவாக்கியவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில் இருப்பவர்கள் தான்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கை மாற்றப்படாவிட்டாலும் பரவாயில்லை. கேவலமான பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தாலே போதுமானது என்றும் சரத் பொன்சேகா தனது உரையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவேட்பாளர் மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும்!- சரத் பொன்சேகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் பெயருக்கு வேட்பாளர் என்றில்லாமல் மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்கள் ஏற்றுக்கொண்டால், எவரும் பொதுவேட்பாளராக நியமிக்கப்படலாம்.
நிச்சயமாக அவர், மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே தமது கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவை வழங்கும் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் அவர் தமது பதவியை விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவருக்கு பொதுமக்களின் பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் தமது அதிகாரத்தை பிழையாக பயன்படுத்தி வருகிறார் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.