முஸ்லிம்களை அழிக்க துடிக்கும் பேரினவாதிகள்
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_3317.html
தனி மனித வாழ்வில் ஒரு நாளை கடப்பதற்கு மனிதன் எத்தனை வகை வகையான போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கின்றான். இவ்வாறு தனி மனித வாழ்வு மூலம் துவங்கும் இப்போராட்டமானது தன் குடும்பம், சுழவுள்ள பிரதேசம், தொகுதி, மாவட்டம், மாகாணம் மற்றும் தேசியம் என படர்ந்து கொண்டு செல்கின்றது.
இவ்வாறு படரும் போராட்டத்தில் தனது இனத்தினையும் அதன் கலாச்சார விழுமியங்களையும் காத்துக் கொள்வதற்கு பங்கெடுக்க வேண்டிய நிலையும் மனிதனுக்கு ஏற்படுகின்றது. பலம் பெற்ற ஒரு மனிதன் தன்னைவிட பலம் குறைந்த மனிதனை தனது ஆளுகைக்குக் கீழ் வைத்துப் பார்க்க முனைவது புது விடயமாகப் பார்க்க வேண்டியதில்லை.
இலங்கையில் சிங்களவர்கள் பேரினமாகக் காணப்படுகின்றனர் என்பதை இதைப் பார்ப்போர்களுக்கு அழுத்தமாகக் கூறி புரியவைக்க முயல்வதெதற்கு? பெரும்பான்மை என்பதால் நாட்டை ஆளும் வாய்ப்பை தொடர்ந்தும் சிங்களவர்களே பெற்றுவருகின்றார்கள். இந்நாட்டில் சிங்களர்களுடன் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்தியத் தமிழர்கள், பேகர், மலே மற்றும் ஏனையோர்கள் என பல்லின சமூகங்களும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் ஆட்சிக்கு இவ்வினங்கள் ஒவ்வொன்றும் தத்தமது ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டு வருகின்றன.
சிங்கள சமூகம் இந்நாட்டின் பேரினமாக திகழ்ந்தாலும் கூட பெரும்பான்மை என்ற அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு சிங்களவர்கள் தவிர்ந்த ஏனைய இரண்டாம் மூன்றாம் பெரும்பான்மையினரின் பங்கு மிக அவசியமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பெரும்பான்மையினர்கள் தமது ஆதரவினை பெரும்பான்மையினருக்கு வழங்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மூன்றாம் பெரும்பான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் இல்லாமல் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள முடியும்.
இலங்கை தொகை மதிப்பு திணைக்களத்தினால் கடந்த 2012 இல் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி இலங்கையில் மொத்த சனத்தொகையாக 20,263,723 ஆக காணப்படுகின்றது. இதில் இன ரீதியாக சிங்களவர்கள் 14,222,844 ஆகவும் இந்துக்கள் 2,554,606 ஆகவும் இஸ்லாமியர்கள் 1,967,227 ஆகவும் றோமன் கத்தோலிக்கர்கள் 1,237,038 ஆகவும் கிறிஸ்தவர்கள் 272,568 ஆகவும் ஏனையார்கள் 9,440 ஆகவும் காணப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்களை இங்கு பார்வையிடலாம்.
1911ஆம் தொடக்கம் 1981ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குடிசன புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மத ரீதியான குடிசன அறிக்கை பின்வருமாறு காணப்படுகின்றது.
இனம் 1911 1953 1963 1971 1981
பௌத்தர்கள் 60.2 64.3 66.3 67.3 69.3
இந்துக்கள் 22.9 19.9 18.4 17.6 15.5
கிறிஸ்தவர்கள் 9.9 9.0 8.3 7.9 7.6
முஸ்லிம்கள் 6.9 6.7 6.9 7.1 7.5
ஏனையவர்கள் 0.1 0.1 0.1 0.1 0.1
என்ற வீதத்தில் காணப்பட்டது. இது தொடர்பான விரிவான புள்ளிவிபரங்களை சுகாதார மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 1996 இல்
வெளிடப்பட்ட இலங்கை சனத்தொகை புள்ளி விபரங்கள் என்னும் நூலில் பார்க்கலாம். நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசுடன் இணைந்துள்ள இனவாதத்தின் மூலம் சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சில அமைச்சர்கள் முஸ்லிம் சமூக்கத்திற்கு எதிராக கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதையாய் விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வினவாத விதைகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவைகளாக இருக்கக்கூடும். இவ்வமைச்சர்களின் தொடராக பௌத்த மதத் துறவிகள் சிலரும் முஸ்லிம்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை சிங்களவர்கள் மத்தியில் பகிரங்கமாக பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு இவர்களால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக அமைச்சரவையில் உள்ள சிங்கள அமைச்சர்களிடமிருந்தும் பௌத்த தேரர்களிடத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இவ்வாறு கருத்துக்களினால் வசைபாடிக் கொண்டிருந்த அவர்கள் காலப்போக்கில் சிங்கள ராவய, ஹெல உறுமய மற்றும் பொதுபலசேனா போன்ற சிங்கள பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொண்டு அமைப்பு ரீதியாக குழுவாக சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குவதற்கு பகிரங்கமாக தொடங்கியுள்ளார்கள்.
இலங்கையின் வரலாற்றிலேயே சிங்களவர்கள் கிராமங்களின் ஆட்சிக்காக கிராமப் பஞ்சாயத்துக்களை உருவாக்கினார்கள். இப்பஞ்சாயத்து முறைகள் விவசாயம் செய்யும் பொருட்டு கிராமங்களில் குடியேறிய மக்கள் மத்தியில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்காகவும் குளங்களுக்கு அணைக்கட்டுக்களை கட்டுவதற்காக மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும் ஒருவிதமான கிராமியச் சபைகளை உருவாக்கியிருந்தார்கள்.
இவற்றுக்கு திரிபே, கன்சபா என பெயரும் சூட்டினார்கள் என நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் முதலாம் பாகத்தில் 23ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக அமைப்புக்களை உருவாக்கி அச்சமூகம் பிளவுகளின்றி நீதியானதாச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் மக்கள் ஒன்று சேர்ந்து மக்களுக்குப் பயன்தரக்கூடிய பொது விடயங்களை செய்யவுமே புராதன கால இலங்கையில் மக்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்பது இதனூடாக தெளிவாகத் தெரிகின்றது.
ஆனால், இன்றைய சிங்கள கடும்போக்கு இனவாதிகள் சிலர், இலங்கையை தாய் நாடாகக் கொண்டுள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் நிந்திப்பதற்காகவும் துரத்துவதற்காகவும் குழுக்களாக சேர்ந்துகொண்டு பகிரங்கமான செயற்பாட்டில் ஈடுபடுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் தம்மை ஹீரோக்களாக காட்டிக்கொள்ளவேயன்றி வேறில்லை எனலாம்.
மேலும் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் இவர்கள் கொண்டுள்ள தவறான புரிதல், இஸ்லாத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் இஸ்லாத்தின் வளச்சி பற்றிய அச்சம் என்பவற்றைச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இவர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள பொறாமை எனவும் சொல்லலாம்.
சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் பௌத்த கடும்போக்காளர்கள் என்ற அமைப்பினர் கொழும்பில் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துள்ளன. இதனைக் கண்டிக்கும் வகையில் எதிர்வரும் 2012.12.22 சனிக்கிழமை பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் பௌத்த கடும்போக்காளர்கள் பாத யாத்திரிகை ஒன்றுக்கு பகிரங்க அழைப்பு விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள்.
அதேபோன்று இன்னுமொரு சிங்கள அமைப்பினர் இதே காலப்பகுதியில் கண்டி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் '2025 இல் இலங்கை சபகஸ்தானாகும். முஸ்லிம் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவோமா? என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால்,
(1) முஸ்லிம்களின் வளச்சி கண்டு அச்சம் கொண்டுள்ளமையும்
(2)முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முடக்க வேண்டும் என்ற இரு கருத்துக்களுமே வெளிப்படையாக தெரிகின்றது.
புராதான இலங்கை வரலாறு கி.மு.543 இல் விஜயனின் வருகையில் துவங்குகின்றது. இக்காலத்தில் துவங்கி கி.பி 1591 வரை இலங்கையை சுமார் 180 மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அத்துடன் கண்டி அரசர்களாக இருந்த முதலாம் விமலதர்மசூரியன், செனரத், இரண்டாம் இராஜசிங்கன், இரண்டாம் விமலதர்மசூரியன், நரேந்திர சிங்கன், விஜய இராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ, இராசாதி இராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரம இராசசிங்கன் என 1815ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் தலைவர்களாக இருந்த டி.டிஸ். சேனாநாயக்க முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014 வரை ஆட்சி செய்த நாட்டின் அனைத்து மன்னர்களிலும் (சர்ச்சைக்குரிய பெயர்கள் தவிர்ந்த) முஸ்லிம் ஒரு பெயரை கொண்டு இலங்கையை ஆட்சி செய்ததாக வரலாற்றில் காணவில்லை என்பது இம்மன்னர்களின் பெயர்களிலிருந்தும் தெரிகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் பூர்வீக குடிகளாக இருந்து வந்தாலும் கூட அவர்கள் நாட்டு மன்னர்களாக ஆட்சிபீடம் ஏறவில்லை என்பதிலிருந்து முஸ்லிம்கள் ஆட்சியைப் பிடிப்பவர்கள் அல்ல என்பதும் முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர்கள் என்பதுவும் தெளிவாகின்றது. இவ்வாறு இலங்கையின் நீண்ட வரலாற்றுச் சரித்திரத்திலே ஆட்சிப்பீடம் ஏற முனையாத முஸ்லிம்கள் 2025இல் முழு நாட்டையும் முஸ்லிமாக மாற்றிவிடுவதற்கு முனைகிறார்கள் என்ற கருத்தானது முஸ்லிம்கள் பற்றிய தவறான புரிதலையே உறுதிப்படுத்துகின்றது.
அதேபோல் இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சீரழித்து அதன்மூலம் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியான ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்ற தவறான கணிப்பினை இவர்கள் கொண்டு செயற்படுகின்றார்கள். இதுபோன்ற காரணங்களை காட்டி அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும் வளர்த்துச் செல்லும் செயலில் ஈடுபடுகின்றார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சி கண்டு காழ்ப்புனச்சி கொண்டு இந்த இனவாதிகள் கண்ட இலாபம் எதுவும் கிடையாது முஸ்லிம்களின் வர்த்தக மையங்களை நோக்கி தாக்கும் செயற்பாடுகளை சில பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுக்கள் செய்துவருகின்றனர்.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்ற பிரசாரத்தில் தொடங்கி முஸ்லிம் வர்த்தக நிலையம் தாக்கப்பட்டது. பின்னர் அண்மையில் அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது மற்றும் குருநாகலையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரையும் உடைமைகளையும் தாக்கியுள்ளார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவனெல்லை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயற்பாடுகளின் மூலம் முஸ்லிம்களை அச்சுறுத்தலாம் என்ற அவர்களின் கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை.
நாட்டில் முஸ்லிம்கள் குறிப்பிட்ட ஒருசிறு தொகையினராக இருந்தபோதும் இந்நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் மிகப்பெரிய பங்கினைக் கொண்டுள்ளார்கள் என்ற உண்மைகளை மக்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்து கொண்டுள்ளார்கள். இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தீவிர இனவாதப்போக்கு முஸ்லிம்கள் பெரிதாக மதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது. அதுமாத்திரமல்லாமல் பள்ளிவாசல்கள் உடைப்பு, ஹலால், ஹிஜாப் என்றெல்லாம் அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செல்கின்றன.
இவ்வினவாத அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கு எதிராக நவடிக்கைகளுக்கு அப்பால் இவர்கள் இஸ்லாத்தை நன்கு கற்றுக்கொண்டே சிங்கள மக்கள் மத்தியில் அவைகளைக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது பற்றி எதிர்காலம் தீர்மானிக்கும் என நம்புகின்றேன்.
பொதுபலசேனா அமைப்பின் போக்கு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து அரச நிறுவனங்கள் என்றும் அமைச்சுக்களுக்குள் புகுந்து சோதனை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க முற்படும் பொலிசாரைக்கூட இவர்கள் எச்சரிக்கும் அளவிற்கு சென்றுள்ளார்கள்.
பொதுபலசேனா அமைப்பினரை முளையிலேயே கிள்ளாததன் தவறே இவர்களின் நடவடிக்கைகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து செல்ல காரணமாக அமைந்திருக்கின்றது. இவர்களின் இத்துணிகர செயற்பாடுகளுக்கான பின்புலம் என்ன என்பது பற்றி அனுமானத்தின் மூலம் சொல்லிவிட முடியாது.
எது எப்படியிருந்தாலும் நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழலை கட்டுப்படுத்தி நாட்டு மக்களிடத்தில் அமைதியை பேணவேண்டிய பாரிய பொறுப்பு நாட்டின் தலைவருக்கும் ஆட்சியாளர்களுக்குமே உண்டு. இது தொடர்பாக இலங்கை அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது.
அதாவது, இலங்கையின் பிரதான சமயமாக பௌத்தம் பேணப்படும் அதேவேளை 10 மற்றும் 14(1)ந பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மற்றைய மதங்களும் அதைப் பின்பற்றுவோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக்கூறுகின்றது. ஆக இதை தவறும் ஒரு அரசு இலங்கை யாப்பிற்கிணங்கிய அரசாக இருக்க முடியாது என்பது சட்டமாகும். இது தொடர்பான மேலதிக விபரங்களை இங்கு பார்வையிடலாம்.
இந்நிலைமைகளை புரிந்து எதிர்காலத்தில் அரசை தீர்மானிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாக இருக்கின்றது என்பதை உணர்ந்து நடப்போமாக.
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
கல்முனை