கடலை விற்பனை செய்கின்ற தள்ளு வண்டில்களும், சிறுபான்மை மக்களின் மதஸ்தலங்களும் இந்த நாட்டில் கிட்டத்தட்ட சமன்
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_895.html
தலைநகரில் இலைக்கஞ்சி விற்கின்ற அல்லது கிராமப்புறங்களில் கடலை விற்பனை செய்கின்ற தள்ளு வண்டில்களும், சிறுபான்மை மக்களின் மதஸ்தலங்களும் இந்த நாட்டில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் கையாளப்படுகின்றன.
இலைக்கஞ்சி அல்லது கடலை விற்பவன் எங்கோ வீதி ஓரத்தில் தனது வண்டிலை நிறுத்தி வைத்துவிட்டு தனது வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டிருப்பான். இது வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்ணில் பட்டுவிட்டால், உடனடியாக அங்குவந்து வண்டிலை அகற்றச் சொல்லி சட்டம் பேசுவார்கள். இனி என்னசெய்வது - அவனும் ஜனசஞ்சாரமற்ற ஒரு மூலைக்கோ, பொலிஸாரின் கண்ணிலிருந்து மறையும் தூரத்திற்கோ தள்ளித்திரிவான்.
சரியாக இதே மாதிரியான மரியாதையே முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு சமகாலத்தில் கிடைக்கப் பெறுகின்றது. தகரத்தினால் அமைக்கப்பட்ட தொழுகை நடாத்துமிடமாக இருந்தாலும் சரி, தங்கத் தூண்களினால் அமையப் பெற்ற பள்ளிவாசலாக இருந்தாலும் சரி 'சொல்பவர்கள் சொன்னால்' ஒரு கடலை வண்டிலைப் போல வேறு எங்காவது ஒரு இடத்திற்கு இடம்நகர்த்தியே தீரவேண்டியுள்ளது.
போக்குவரத்து பொலிஸார் என்போர் முஸ்லிம்களின் கதையில் - அபிவிருத்தித் திட்டமாகவும், பாதை நிர்மாணமாகவும், புனித பூமியாகவும் வந்து தொலைக்கின்றார்கள். ஒரு காலமிருந்தது. காலையில் எழுந்தால் எங்காவது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்திய செய்தி அல்லது நூற்றுக் கணக்கானோர் குண்டுவெடிப்பில் பலியான செய்திதான் தேனீருக்கு முன்னமே வந்துசேரும். இப்போது காலையில் எழுந்தால்...
கடும்போக்கு அமைப்புக்கள் பள்ளிவாசலுக்குள், தேவாலயத்திற்குள், கோவிலுக்குள் புகுந்து அராஜகம் புரிந்த செய்திகளே சுடச்சுட கிடைக்கின்றன. இதுகாலவரைக்கும் விடுதலைப் புலிகள் மட்டுமே நமது நிகழ்காலத்தின் சாபக்கேடு என்றும் புலிகளை அழித்துவிட்டால் எல்லாம் நூற்றுக்குநூறு வீதம் சுமுகமாகி விடும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் பயங்கரவாதத்தை விட மிகவும் ஆபத்தானதும் நாசம் விளைவிப்பதுமான இனவாதம் இத்தனை 'புலிக் காய்ச்சலுக்கு' மத்தியிலும் சிங்கள ராஜ்ஜியத்தின் பின்வாசல்களில் செழித்து வளர்ந்திருக்கின்றது என்பது கடந்த இரண்டு வருடமாகவே புரிந்து கொண்டிருக்கின்றது.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் தம்புள்ளை கைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டன. உடனடியாக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. நேரடி விஜயம் என்ற பெயரில் இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் செல்பவர்களை போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்பள்ளிக்கு சென்று நிலைமைகளை அவதானித்து வந்து, அறிக்கை விட்டனர்.
கடைசியில் ஒருவாறாக மேலிடத்து தலையீட்டினால் இம்முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டன. இப்போது அதனை மீண்டும் தூக்கிப் பிடித்துள்ளனர் இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர். அபிவிருத்தித் திட்டங்களின் பெயர் சொல்லி தம்புள்ளைப் பள்ளிக்கு கொள்ளி வைத்துவிட்டு அதில் தமது உடற்குளிரை தணித்துக் கொள்ளப் பார்க்கின்றது இனவாதம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்புள்ளை கைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொல்லைப்புறத்தில் நிற்கின்ற செடியை பிடுங்கி எறிவது போல் யாருக்கும் தெரியாமல் இப்பள்ளியை சில நிமிடங்களிலேயே தரைமட்டமாக்கி விடலாம் என்று சுமங்கல தேரரும் அவரது கூட்டாளிகளும் கணக்குப் போட்டிருப்பார்கள். ஆனால் அது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல என்பதை அவர்களது புல்டோசர்கள் பின்னோக்கி நகர்ந்த வேளையில் உணர்ந்திருப்பார்கள். அரச மர நிழலில் தியானம் கொள்கின்ற மிகச்சிறிய புத்தர் சிலைக்கும் கனதியான மரியாதையை செலுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த இக்குழுவினர் கனரக வாகனங்கள் சகிதம் மாற்று மதத்தின் வழிபாட்டுத்தலம் ஒன்றை அடியோடு அழிக்க திட்டம் தீட்டியமை எவ்வளவு மோசமான முன்னுதாரணம்?!
தம்புள்ளை விகாரையின் சுற்றுச் சூழலில் பெரஹர மாவத்தை என்றொரு வீதியை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. இவ்வீதி நிர்மாணப் பணிகளுக்கென கடந்த வருடமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் கூட இடையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படாமையால் குறித்த நிதி திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.
இப்போது இடைநிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தியை இப்போது செய்துமுடிக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினரும் முயற்சிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பள்ளிவாசல் உத்தேச பெரஹர மாவத்தை வீதிக்கு குறுக்கே இடைஞ்சலாக இருப்பதாக காரணம் சொல்கின்ற இனவாத சக்திகள், எனவே அதனை அகற்றி பாதை பயணிக்க இடம்தர வேண்டுமென பிடிவாதமாய் கோரி நிற்கின்றன.
காரணங்களும் கற்பிதங்களும்
கொலை, கொள்ளை செய்பவனிடமும் கற்பளிப்பவனிடமும் போதைப் பொருள் கடத்துபவனிடமும் பாடசாலைகளில் மாணவிகளையும் ஆசிரியைகளையும் பாலியல் இச்சைக்கு இரையாக்கும் ஆசிரியர்களிடமும் லஞ்சம் வாங்கும் பொலிஸாரிடமும் மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளிடமும்... தாம் செய்த தவறுகளுக்காக காரணம் இருக்கவே செய்கின்றது.
அல்லது தாம் அகப்பட்ட பிறகு சொல்வதற்கு ஏதேனும் ஒரு கற்பிதத்தை தயார் செய்து வைத்திருப்பார்கள். எனவே, இங்கு காரணங்கள் ஒரு பொருட்டல்ல. குறித்த செயலின் விளைவாக நாட்டில் ஏற்படப் போகின்ற சமூக எதிர்விளைவுகள், பிணக்குகள் பற்றியே சிந்திக்க வேண்டும். வீதிக்காக ஒரு தேசத்தின் விதியை மாற்றிவிடத் தேவையில்லை.
இன்னும் விலாவாரியாகச் சொன்னால் - இந்த நாட்டில் தனியீழம் கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகளும் காரணங்களை வைத்திருந்தார்கள். தமது நிலைப்பாட்டையும் காரியங்களையும் நியாயப்படுத்த அவர்களிடமும் சொந்த நியாயங்கள் இருந்தன. புலிகளிடம் காரணங்கள் இருக்கின்றன என்பதற்காகவோ அல்லது அவர்களது நியாயங்களை ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதற்காகவோ புலிகள் செய்வதெல்லாம் செய்துவிட்டுப் போகட்டும் என்று அரசாங்கம் சும்மா இருக்கவில்லை.
ஏனென்றால் புலிகளின் நியாயங்களைக் காட்டிலும் அதன்மூலம் இலங்கையில் வாழும் தமிழர் உள்ளிட்ட சமூகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள் பாரதூரமானவையாக இருந்ததாக ஆட்சியாளர்கள் கருதினர். எனவே, புலிகளை அடக்கி ஒடுக்குவது என்ற இறுதி முடிவுக்கு வந்தனர் என்பதை இவ்விடத்தில் அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட விரும்புகின்றேன்.
தம்புள்ளைப் பள்ளிவாசல் 2008ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டதாகவும் அது ஒரு தகரக் கொட்டிலே அன்றி பள்ளிவாசல் அல்ல என்றும், பெரஹர பாதைக்கு குறுக்கேயுள்ள இதனை அகற்றி வழிவிட வேண்டுமென்றும் சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். நகர சபை, பிரதேச செயலகம், புத்தசாசன அமைச்சு ஆகியவற்றில் இக்கட்டிடம் சட்டவிரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குழப்பமடைந்திருக்கின்ற நிலையில், முஸ்லிம்களின் பூர்விகம் தெரியாத ஆனால் தாடிவைத்து – தொப்பிபோட்ட ஓரிருவர்; தேரருக்கு ஒத்திசைவான கருத்துக்களை முன்வைத்துள்ளமை அபத்தமானது. இப்பள்ளிவாசல் 2008ஆம் ஆண்டிலேயே 'வக்பு' சபையில் பதிவு செய்யப்பட்டிருப்பினும் கூட 1960 - 70களில் இருந்து இது ஒரு பள்ளிவாசலாக அல்லது குறைந்தபட்சம் ஒரு தொழுகை நடாத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்று வரலாற்றுக் குறிப்புக்களை மேற்கோள்காட்டி நண்பர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அப்படியானால், இவ்வளவு தொன்மையான ஒரு வழிபாட்டிடத்தை வீதி ஒன்றுக்காக அழிக்க முற்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு சட்டவிரோத கொட்டில் என்ற ஞானம் கடந்த 50 வருடங்களாக வராமல், இப்போது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அதேபோன்று தேரர் இதனை ஒரு 'கொட்டில்' என குறிப்பிட்டுள்ளமை பகிரங்கமான கண்டிப்பிற்குரியது. வீதியோரத்திலும் சந்து பொந்துகளிலும் வளைவுகளிலும் மரத்திற்கு கீழேயும் சிறியதொரு பெட்டி போன்ற அமைப்பிற்குள் இருந்தாலும் புத்தர் புத்தர்தான்.
அதற்கான மரியாதையை சிறுபான்மை மக்கள் கூட வழங்காமல் விட்டதில்லை. இப்படியிருக்கையில், தகரத்தினாலான ஒரு கட்டிடத்தில் இயங்குகின்றது என்பதற்காக ஒரு பள்ளிவாசலை கொட்டில் என்று வர்ணித்திருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டிற்கு பலம் சேர்க்க முயன்றுள்ளார் தேரர். வழிபாட்டுத் தலம் என்பது தகரத்தையோ கொங்கிறீட்டையோ வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அங்கு வழிபட வருபவர்களின் இறை நம்பிக்கையைப் பொறுத்தது. தெருவோர புத்தரை கும்பிட்டுவிட்டு செல்லும் சிங்கள சகோதரனினதும் தகரக் கொட்டிலில் தொழும் முஸ்லிமினதும் உணர்வுகள் வேறுபட்டவை அல்ல.
பிழையான தர்க்கவியல்
தம்புள்ளை விகாரையை சூழவுள்ள புனிதபூமி பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைய இடமளிக்கப் போவதில்லை. இதனை அகற்றுவதற்கு இடமளித்தால் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை வராது என்று சுமங்கல தேரர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார். இப்போது நல்லிணக்கம் பேசுகின்ற தேரர், பெரஹர மாவத்தை பாதைக்கான திட்டவரைபு தயாரித்த போது அதுபற்றி சிந்தித்திருக்க வேண்டும். பள்ளிவாசல் திடீரென முளைக்கவில்லை.
ஆண்டாட்டு காலமாக அங்குதான் இருக்கின்றது. எனவே, குறித்த வரைபடத்தை வரைகின்ற போது பள்ளிவாசலுக்கு ஊடாக குறித்த பாதை செல்லாத வகையில் வரைந்திருக்கலாம். அல்லது அவ்வாறு தவறுதலாக வரையப்பட்டிருந்தாலும் அதனை தேரர் திருத்தியமைத்திருந்தார் என்றால் அதன்மூலம் தன்னுடைய மத சகிப்புத்தன்மையை வெளிக்காட்டியிருக்கலாம். ஆனால் அவரது இனவாத சிந்தனை அப்படியான ஒரு நல்ல வாய்ப்பை தவறச் செய்துவிட்டது.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. அதாகப்பட்டது – புனிதபூமி பிரதேசத்திற்குள் மாற்றுமத வழிபாட்டுத்தலம் அமையக்கூடாது என்ற கருத்துநிலை பற்றியதாகும். இது வெறும் கருத்தா அல்லது எழுதப்படாத விதியா அன்றேல் பௌத்த சாசனமா என்று தெரியவில்லை. ஆனால் கௌதம புத்தர் இதனை போதித்திருக்க மாட்டார் என்பதை மட்டும் கண்ணைமூடிக் கொண்டு சொல்ல முடியும்.
புனிதபூமி பிரதேசத்திற்குள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த விகாரை ஒன்றுக்கு கிட்டிய தூரத்தில் பள்ளிவாசலோ வேறு மதங்களின் வழிபாட்டு தலங்களோ அமையப்பெற்றிருப்பதால் என்ன 'புனிதம்' கெட்டுவிடப் போகின்றது என்பது நெடுங்கால கேள்வி. கதிர்காமம் என்பது மூவின வழிபாடுகளுக்கும் பொதுவானது. இங்கு விகாரையும் கோவிலும் பள்ளிவாசலும் மிக மிக நெருக்கமாகவே அமைந்திருக்கின்றன. இவ்வாறு நாட்டின் பல இடங்களிலும் மூவின மக்களின் வணக்கஸ்தலங்களும் கூப்பிடும் தூரத்தில் அமைந்துள்ளன. அங்கெல்லாம் இந்த ஒரே காரணத்திற்காக விகாரையின் 'புனிதம்' கெட்டுப் போகவுமில்லை, பிரச்சினைகள் உருவாகவும் இல்லை.
அதுமட்டுமன்றி - கொழும்பு பெரும்பாக பகுதிகளிலும் நாட்டின் வேறுபல நகரங்களிலும் எத்தனையோ பௌத்த விகாரைகளுக்கும் புத்தர் சிலைகளுக்கும் அருகில் சாராயத் தவறணைகள், இரவுக் களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்கள் போன்றவை அமைந்துள்ளன. இவ்வாறான சமூகச் சீரழிவு மையங்களால் கெட்டுப்போகாத விகாரைகளினதும் புனித பூமியினதும் புனிதத் தன்மையானது, பள்ளிவாசலில் இறைவனை தொழுவதால் மாத்திரம் கெட்டுப்போய் விடும் என்று சொல்வது தர்க்கவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளவியலாத கற்பிதங்களாகும்.
தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான இரண்டாம் கட்ட விவகாரத்தில் பொது பலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள் இதுவரை பகிரங்கமாக களமிறங்கவில்லை என்பது பல கோணங்களில் ஆரயப்பட வேண்டியதாகின்றது. அவ்வமைப்புக்கள் தலையிட்டால் முன்னமே பல பள்ளிவாசல்களையும் மத அடையாளங்களையும் பறிகொடுத்தது போல் கைரியா பள்ளிவாசலையும் பறிகொடுக்க நேரிடலாம். எனவே அப்படியான ஒரு இக்கட்டு ஏற்படுவதற்கு முன்னமே இவ்விடயத்தை சுமுகமாக தீர்த்துக் கொள்வது நல்லது.
முன்னுள்ள தெரிவுகள்
இதில் மூன்று தெரிவுகள் உள்ளன. இந்தப் பள்ளிவாசலை அகற்றுவதற்கு சட்டம் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், சட்டத்தை மதித்து சிங்கள மக்களுடன் சுமுகமாகிப் போவதற்காக பள்ளிவாசலை தாரைவார்ப்பது முதலாவது தெரிவு. பௌத்த தேரர்களுடன் மல்லுக்கு நின்று முஸ்லிம்கள் தமது மத அடையாளத்தை பாதுகாக்க ஜனநாயக ரீதியில் போராடுதல் இரண்டாவது தெரிவு. மூன்றாவது தெரிவு என்னவென்றால் சம்பந்தப்பட்ட அதிகார தரப்பினருடன் பேசி குறித்த பள்ளிவாசலை ஊடறுக்காத விதத்தில் பெரஹர மாவத்தை வீதியை அமைத்தலாகும்.
இப்பள்ளியை வேறு இடத்தில் நிர்மாணிக்க நான்கு காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பள்ளியை நிர்மாணிக்க முடியும் என்று சுமங்கல தேரரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். எனவே முதலாவது தெரிவை மேற்கொள்ளலாம் என்று சிலர் அபிப்பிராயப்படலாம். ஆனால் அவ்வாறான முடிவு ஒன்றுக்கு வருவதற்கு முன்னால் ஆயிரம் தடவை சிந்திக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால், இந்தப் பள்ளியை அகற்ற இடம் கொடுத்தால் இனவாதமும் அத்துமீறல்களும் இத்தோடு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா என்று கேட்டால்... இல்லை என்பதை பதிலாக அமையும். ஆரம்பத்தில் இனவாதம் முஸ்லிம்களின் சமய அடையாளங்களை பறிக்க முற்பட்ட போது, முஸ்லிம்கள் பொறுமையின் பெயரால் அவற்றை விட்டுக் கொடுக்க தலைப்பட்டமையே இனவாதிகளுக்கு புதிய புதிய திட்டங்களை தீட்டுவதற்கான தைரியத்தை கொடுத்தது. ஆகவே இப்பள்ளிவாசலை விட்டுக்கொடுத்தால் இன்னுமொரு பள்ளிவாசலையும் விட்டுக் கொடுக்க நேரலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.
மறுபுறத்தில், நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பினும் அந்த இடத்தில் பள்ளிவாசல் அமைத்து தரப்படும் என்பதற்கோ அப் புதிய பள்ளிவாசலின் இருப்பு பாதுகாக்கப்படும் என்பதற்கோ எந்த உத்தரவாதத்தையும் யாரும் வழங்கவில்லை. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பிலும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற பின்னணியில் நோக்கும் போது, தம்புள்ளை கைரியா பள்ளியை அகற்ற இடமளிப்பது புத்திசாலித்தனம் என்று கூற முடியாது.
அடுத்த தெரிவான - இதற்கு எதிராக போராடுதல் என்பது இன்னும் சாத்தியமில்லாமலே இருக்கின்றது. முஸ்லிம்களுக்குள் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக வெளியுலகம் நம்பிக் கொண்டிருக்கின்றது. எவ்வாறிருப்பினும் யதார்த்தத்தில் இலங்கை முஸ்லிம்களிடையே ஆயுதம் பலம் மட்டுமன்றி ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒற்றுமை கூட இல்லை. ஜனநாயக அடிப்படையில் இனவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்க ஒரு பத்துப் பேரை தேடிப்பிடிப்பதே கல்லில் நார் உரிக்கின்ற காரியமாக இருக்கின்றது. இந்த லட்சணத்தில் ஜனநாயக ரீதியில் போராட ஏவராவது முன்வந்தால் கூட.... அவர் கைது செய்யப்படுவார் அல்லது முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்களால் காட்டிக் கொடுக்கப்படுவார்.
மேலிடத்தின் தலையீடு
இப்பின்னணியில் கடைசி தெரிவு சாத்தியமாகக் கூடியது என்று கூறலாம். பிரதேச ரீதியாக பிக்குகளை சந்தித்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் 'மேலிடத்தில்' பேசுவதே விரைவான பலனை தரக் கூடியது. எல்லா தரப்பினருடைய மூக்கணாங்கயிறுகளும் அங்குதான் இருக்கின்றது. எனவே முஸ்லிம் அமைச்சர்கள் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும். அந்த வகையில் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியை சந்தித்துள்ளதை குறிப்பிட விரும்புகின்றேன்.
'இது விடயமாக முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் கவனம் செலுத்தி அப்பணிகளை நிறுத்த உத்தரவிடவுள்ளதாகவும'; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதியமைச்சரிடம் வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறான ஆறுதல்தரும் கருத்துக்கள்தான் முஸ்லிம்களிடையே இன்னும் நம்பிக்கையை மீதம் வைத்திருக்கின்றது. அதேவேளை அமைச்சர் றிசாட் பதியுதீனும் முஸ்லிம்களின் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இவர்களைப் போன்று தாம் மக்களுக்காக குரல்கொடுக்காது விட்டால் தம்முடைய 'தொழில்' படுத்துவிடும் என்ற பயத்தில் வேறு சில முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் தமக்கு மக்களில் அக்கறை இருப்பது போல் நடிக்க முற்பட்டு அடிக்கடி தோற்றுப் போகின்றனர். இன்னும் சிலர் இத்தனை நடந்த பிற்பாடும் இந்த 'சீனிலேயே' இல்லை.
தம்புள்ளை பிரதேசத்தில் முஸ்லிம் எம்.பி. ஒருவர் இல்லை என்பதால் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே அங்குள்ள மக்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். ஆனால் 'நாங்கள் எங்கள் ஊரில், எங்கள் தேர்தல் தொகுதியில் பிரச்சினை வந்தால் ஒரு கை பார்ப்போம். இது எங்களுக்கு வேண்டாத வேலை' என்ற தோரணையில் இப்பேர்ப்பட்டவர்கள் இருப்பதாக தோன்றுகின்றது. தமது அரசியல் எதிர்காலம் சூன்யமாவதை தடுப்பதற்காகவேனும் இவ்வாறானவர்கள் களத்தில் இறங்க வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக ஹக்கீமிடம் ஜனாதிபதி கூறியுள்ள இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி முஸ்லிம் எம்.பி.க்கள் அனைரும் ஆட்சித் தலைமையிடம் முஸ்லிம்கள் படும்பாட்டை ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும். கூட்டுக் கடிதங்களில் ஒப்பமிடத் தவறிவிட்டு வியாக்கியானம் கூறும் மக்கள் பிரதிநிதிகளையும் இக்குழுவில் மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனவாதத்தின் தாக்கங்கள், அழிவுகள், அதனை வழிநடாத்துவோர், அதற்கு ஊக்கமருந்து கொடுப்போர் என்று எல்லா விடயங்களையும் ஒரு அறிக்கையாக ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் கொஞ்சம் அர்ப்பணிப்பு, நெஞ்சுரம், தைரியம் என பல அடிப்படை தகுதிகள் வேண்டும். ஆயினும் - தன் பயணப் பைக்குள் 24 மணிநேரமும் 'கபனை' (மரணித்த பின் உடலைச் சுற்றும் சீலை) வைத்துக் கொண்டு உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட மறைந்த தலைவர் அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்த பலரும் தொடை நடுங்கிகளாக இருக்கின்றனர் என்பதை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.
இப்படியே போனால்......
கடலை வண்டில்கள் போல் தள்ளிக் கொண்டு திரியக்கூடிய நடமாடும் பள்ளிவாசல்களை நிர்மாணிக்க பழகிக் கொள்வதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.
-ஏ.எல்.நிப்றாஸ்-