சமகால இஸ்லாமிய உலகில் மிதவாத அரசியல் போக்கின் வெற்றிகள்

சமகால இஸ்லாமிய அரபு நாடுகளின் அரசியல் அவலங்களை எழுத வேண்டும் என்றால் பல நூல்கள் எழுத முடியும்.அந்தளவு அரசியல் ரீதியாக சமூக அவலங்களை ஏற்படுத்தி உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் நாடுகளாக அரபு இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இஸ்லாமிய அரசியலை சரியான பண்பாட்டு ஒழுங்கில் நோக்காத காரணமே அரபு இஸ்லாமிய நாடுகள் எதிரிகளின் சூழ்சிக்கு இலகுவாக இலக்காகியமை ஆகும்.

சமூக நீதியை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டக்கலை வகுத்த வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் மீரியமையும் சமகால உலக ஒழுங்கில் சமூக நீதியை நிலைநாட்டும் கோட்பாடுகளை சக்திச் சமநிலையில் அளவிடுவதில் ஏற்பட்ட குறைபாடுகளுமே அரபு இஸ்லாமிய நாடுகளில் யுத்தத்துக்கும் அசாதாரண சூழ்நிலைக்கும் காரணமாக அமைந்தது.

இஸ்லாமிய அரசியலில் ஒரே நிலைபாட்டில் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.அரசியலில் சூழ்நிலையே மிகப்பெரும் தாக்கத்தை செலுத்தும்.இப்படியான விடயங்களில் கடும்போக்கும் விட்டுக்கொடுக்காத தன்மையும் எதிர்ப்பை சம்பாதித்து பல சிந்தனை போக்கு உள்ளவர்களை சண்டைக்குள் உற்படுத்த வழிவகுக்கும்.

அரபு நாடுகளை பொறுத்தவரை அங்கு மாற்றம் ஏற்படுத்த போராடும் இஸ்லாமிய சார்பு போராளிகளின் அளவீட்டு பெறுமானங்கள் இஸ்லாமிய வரையறைகளையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் மீறியே காணப்படுகிறது. இது இஸ்லாம் பற்றிய தவறான கருத்தை எதிரிகளில் ஏற்படுத்தும் என்பதோடு போராட்டத்தின் சிதைவுகள் முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொலை செய்யும் நிலைக்கு இட்டுசெல்கிறது.

எமக்கு சார்பாக சூழல் இல்லை என்றால் இருக்கின்ற சூழலை எமக்கு தீமை இல்லாதவாறு எப்படி மாற்றுவது அல்லது இருக்கின்ற தீமைகளில் குறைந்த தீமையை எப்படி எடுப்பது.நாட்டின் நலவை விட நமது நலவை பெரிதாக கருதாமல் இருப்பது.பதவியைவிட குழப்பத்தை தடுப்பது என்ற சமூக அக்கறை சார்ந்த விடையமாக அரசியலை நோக்க வேண்டும்.

விட்டுகொடுப்பு அரசியலின் விளைவுகள்

டியூனிசில் 'டீபின் அலியின்' சர்வாதிகார ஆட்சியில் இருந்து புரட்சியின் ஊடாக ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டும் அந்த நாட்டு அரசியல் கட்சிகள் பல விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளன. அவர்கள் மீண்டும் சர்வாதிகாரம் வந்துவிடக்கூடாது என்ற பிரதான கருப்பொருளில் நாட்டின் அரிசயல் நகர்வுகளை கொண்டு செல்வதால் பல போராட்ட சிந்தனைகளில் இருந்து மிதவாத போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் டியூனிசின் இக்வான் சாயல் கொண்ட 'அன்னஹ்லா' கட்சி பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் புரிந்துணர்வு சகிப்புத்தன்மை அரசியலுக்குள் தம்மை உள்வாங்கி நாட்டில் ஏற்பட இருந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று சொல்ல முடியும். இந்த நாட்டில் அரசியல் சாணக்கியமும் விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை என்பனவே உள்நாட்டு யுத்தத்தில் இருந்து ஒரு ஜனநாயக ஒழுங்குக்குள் நாட்டை நகர்த்தி செல்கிறது.

வன்முறையின் தோல்விகள்

இதே இக்வான்களே எகிப்தில் சகிப்புத்தன்மை விட்டுகொடுப்பு என்பதற்கு எதிராக செயல்பட்டு தொடர்போராட்டமும் வன்முறை கலாசாரமும் என்று தமது அரசியலை மிதவாத போக்கில் இருந்து வன்முரையை நோக்கி நகர்திவருகின்றனர். இக்வான்கள் தமது ஆட்சி பரிபோனதாலேயே இந்த போராட்டம் செய்கின்றனரே தவிர இஸ்லாமிய நாடுகளில் ஈராக், ஆப்கான் மற்றும் அல்ஜீரியாவில் ஏற்பட்ட இனப் படுகொலைஇகற்பழிப்புக்கு எதிராக எந்த போராட்டமும் இந்த முறையில் செய்தது கிடையாது என்பதோடு அந்த அரசுகளுடன் கூட்டு ஆட்சி செய்தே வந்துள்ளனர்.

புரட்சி நடந்த நாடுகளில் எகிப்தில்தான் ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த சேதம் நடந்துள்ளது. அரபு நாடுகளில் யுத்த நிலையை தாண்டிய மிகக் குறைந்த நாடுகளில் எகிப்தும் ஒரு நாடு. எமன், சிரியா, ஈராக் மற்றும் ஆப்கான் போன்ற நாடுகளில் வெளிநாட்டு படைகள் வந்து உள்நாட்டில் ஏற்படுத்தும் அவலங்களை எகிப்தில் ஏற்படுத்த விடாமல் தடுத்து வெற்றிகண்ட நாடு எகிப்து என்றால் மிகை ஆகாது.

ஈராக், சிரியா, அல்ஜீரியா, லிபியா, ஆப்கான், லெபனான் மற்றும் எமன் போன்ற நாடுகளில் எல்லாம் அதிக மனித உயிர்களும் பொருளாதார சேதமும் ஏற்பட்ட நாடுகளாகும்.இந்த நாடுகளில் இக்வானிய ஆட்சி வீழவில்லை என்பதாலேயே இக்வான்கள் அநியாயக்கார ஆட்சியில் ஒரு அங்கமாக உள்ளனர்.

எகிப்தில் மட்டுமே போராட்டம் ஜனநாயகம் உயிரிழப்பு என்ற கோஷங்களை வைத்து தமது சுயநல ஆட்சியை முன்னிறுத்த மக்களை பலியாக ஆக்கி அதில் அரசியல் நடத்துகின்றனர். லட்சம் மக்கள் கொலையை விட்டுவிட்டு ஆயிரம் பேருக்கு போராடும் இக்வான்களின் நிலை யானை போன்ற பாவத்தை சரிகண்டு பூனை போன்ற பாவத்துக்கு போராடும் நிலை ஆகும்.

இது இஸ்லாமிய அரசியல் சிந்தனைக்கும் சமூக நீதியை நிலைநாட்டும் சமகால உலக ஒழுங்குக்கும் எதிரான பிற்போக்கு சிந்தனையாகும். எகிப்திய இக்வான்கள் டியூனிசிய இக்வான்களின் அரசியல் நகர்வின் வெற்றியில் இருந்து பாடம் படிக்கவேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்களின் அரசியல் தோல்வி எடுத்துக்காட்டி நிற்கிறது. இதனை டியூனிஸ், சிரியா, அல்ஜீரிய இக்வான்கள் எகிப்திய இக்வான்களுக்கு சுட்டிக்காட்டியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதவாத போக்கின் சாதனைகள்

எகிப்தில் மிதவாத போக்குடனும் அழுத்த குழுவாகவும் செயல்படும் கட்சியாக அந்நூர் கட்சி செயல்படுகிறது.சில தவறுகள் இவர்களிடம் காணப்பட்டாலும் இஸ்லாமிய பாரம்பரியத்தை மீறாமலும் உலக ஒழுங்கின் கோட்பாட்டை பேணியும் தமது அரசியல் இலக்குகளை நோக்கி நகர்கின்றனர்.

மிதவாத போக்கின் உதாரணத்துக்கு இந்த கட்சியை சொல்ல முடியும்.பலமான மக்கள் ஆதரவையும் மனித வளங்களையும் கொண்ட இவர்கள் இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தாமை பல அனுகூலங்களை அவர்களுக்கு ஏற்படுத்தியது. எதிர்வரும் தேர்தல்களிலும் வேட்பாளரை நிருத்தபோவதில்லை என்ற இவர்களின் முடிவு சூழ்நிலைசார்பு அரசியல் என்று நோக்கபப்டுகிறது

முதல் பெரும்பான்மை கட்சி ஒன்று ஒரு நாட்டில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவே போவதில்லை என்ற முடிவில் இருப்பது சமகால அரசியல் வரலாற்றின் சாதனையே.இது இவர்களின் அரசியல் நகர்வு நிகழ்ச்சி நிரலில் ஏற்படுத்திய மிதவாத போக்கின் உச்ச நிலையாகும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கூட்டணியில் அந்நூர் கட்சியே நாட்டின் அதிகூடிய வாக்களை பெற்ற கட்சியாகும்.

இக்வான்கள் மதச்சார்பற்ற கட்சிகள் தாராண்மை வாத கட்சிகள் கம்யூனிச வாத கட்சிகள் என பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டும் பத்து மில்லியன்கள் வாக்குகளே பெற்றனர்.இது ஒப்பீட்டளவில் அந்நூர் கட்சி பெற்ற சுமார் எட்டு மில்லியன் ஓட்டுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கையை.

அந்நூர் கட்சி தனித்து நின்றே இந்த வாக்குகளை பெற்றது மட்டும் அல்லாமல் கட்சி ஆரம்பித்து சில மாதங்களில் பலவருட பின்னணி கொண்ட கட்சிகளை விட அதிக எண்ணிக்கை வாக்குகள் எடுத்தமை அவர்களின் அரசியல் மிதவாத போக்கும் பதவிகள் அல்லாத அழுத்த குழுவாக செய்லபடும் தன்மையுமே காரணமாகும்.

இவர்கள் நிலைப்பாடுகள் அந்த அந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்றி கொண்டே இருந்துள்ளது.முதல் கட்ட தேர்தலில் தமது கட்சி சாராத அபுல் புதூஹ் என்பவருக்கு ஆதரவு கொடுத்தனர்.இரண்டாம் கட்ட தேர்தலில் இக்வானிய வேட்பாளர் முர்சிகு ஆதரவு கொடுத்தனர்.இதன் மூலம் ஏற்பட்ட ஆட்சியை இக்வான்கள் தமது அரசியல் ஞானமின்மை இஸ்லாமிய முறையில் எதிரிகளை அனுகாமை போன்ற காரணங்களால் முழு இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவை பெற்ற ஆட்சியை தமது சொந்த முடிவின் காரணமாக பறிகொடுத்தனர்.

இவை அனைத்துமே இக்வான்கள் மற்றும் அவர்களுடன் உள்ள கடும்போக்கு இஸ்லாமிய வாதிகளின் பிழையான அரசியல் நகர்வுகளால் ஏற்ப்பட்ட விளைவுகளாகும்.மாற்றுக்கருத்தை செவிமெடுக்காமை ஷூரா ஒழுங்கில் முடிவுகளை கொண்டு செல்லாமை என்பன குழப்பங்களையும் இஸ்லாமிய கட்சிகளில் பிரிவுகளையும் ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

பன்மைத்துவ கட்சிகளின் ஆட்சி

சூழலுக்கும் ஏற்ப மாறும் நிலையிலும் நெகிழ்வுபோக்கிலும் மாற்று கருத்து அரசியலை முடியுமான அளவு அனுசரித்து விட்டுகொடுத்து பலகட்சிகளின் பிரதிநித்துவ ஆட்சியை ஏற்படுத்தும் அரசியல் என்பது தேவையான ஒன்றாகும்.இந்த முறை அரசியல் நகர்வு இல்லாமையே பல இஸ்லாமிய நாடுகளில் அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

சில நாடுகளில் ஒரு கட்சியின் பெரும்பான்மை வெற்றியின் மூலம் அவர்களே தனித்து அமைச்சரவையை அமைக்க முடியும் அவர்களே தனித்து ஆட்சியை கொண்டு செல்ல முடியும்.இது இலங்கை இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய நாடுகளில் கடைப்பிடிக்கும் ஒழுன்குகளாலும்.

ஆனாலும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தற்போதே மீண்டு வந்த நாடுகளில் புரட்சிக்கு பின்னான இஸ்லாமிய கட்சிகளின் ஆதிக்கத்தை ஏனைய புரட்சியாளர்கள் விரும்பவில்லை என்ற நிலையே அந்த நாடுகளில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை உணர்ந்து இஸ்லாமிய கட்சிகள் அரசியல் நகர்வை கொண்டு செல்லும்போது ஜனநாயகத்தில் பிஞ்சு நிலையில் இருக்கும் இந்த நாடுகள் பல விட்டுக்கொடுப்பின் மூலமும் பலகட்சிகளின் கூட்டு ஆட்சியின் ஊடாகவே ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும். பன்மைத்துவ அரசியல் மூலமே இவ்வாறான அசாதாரண சூழ்நிலையை தாண்ட முடியும்.

இஸ்லாமிய அரசியலின் எழுச்சியும் வீழ்ச்சியும்

நபியவர்கள் மதீனாவில் ஏற்படுத்திய நுபுவத்தின் ஆட்சி நபி என்ற அந்தஸ்துக்காக திடீர் ஏற்பாடாக கொடுக்கப்பட்ட ஆட்சி என்று சொல்ல முடியாது.நபித்துவதுக்காக கிடைத்த ஆட்சி என்றால் நபி ஸல் அவர்களுக்கு முன்பு பல லட்ச நபிமார்கள் ஆட்சி செய்ய முடியாமலே மரணித்தனர்.

நபியவர்கள் மதீனாவில் ஏற்படுத்திய ஆட்சியின் பிரதான அம்சமாக கொள்கை உறுதியும் பௌதீக வளங்களை பயன்படுத்தும் ராஜ தந்திர வியூகமும் முக்கிய அம்சமாகும். நபியவர்கள் ஏற்படுத்திய ஆட்சியின் பிரதான எரிபொருள் ஈமானின் அடியாக எழுந்த கொள்கை உறுதி எனில் அதன் சக்கரமாக பௌதீக வளங்களை பயன்படுத்திய விதம் அமையும்.

எனவே இந்த இரண்டு பிரதான பண்புகள் எந்த சமூகத்தில் இருக்குமோ அவர்களிடம் இஸ்லாமிய அரசியல் இலகுவாக அமையும்.நபி என்ற பண்புக்காக நபிக்கு ஆட்சி அமையவில்லை மாறாக நபி அவர்கள் ஆட்சிக்கு அணிகலனாக கொண்ட பிரதான அம்சங்கள் இருக்கும் சமூகம் அனைத்திலும் இஸ்லாமிய ஆட்சி இருந்தே தீரும்.

சமகாலத்தில் கிலாபாவின் தேவையை உணர்கின்றவர்கள் இந்த பிரதான இரண்டு அம்சங்களையும் கருத்தில்கொள்வதன் தேவை அவசியமாகிறது.கிலாபா உருவாகிய விதத்தின் காரணமும் அது விழுந்தமைக்கான காரணமும் ஒரே காரணமே. அக்காரணம் இருந்தமையால் கிலாபா வாழ்ந்தது அந்த காரணம் இல்லாமையால் கிலாபா வீழ்ந்தது.

பத்ருப் போரின் வெற்றி ஈமானின் உந்துதலாலும் உஹதின் தோல்வி நபியின் கட்டளையை மீறியதாலும் என்ற உன்னத பாடத்தை இஸ்லாமிய சமூகத்துக்கு போரின் ஒழுக்க விழுமியங்கள் எடுத்துகாட்டுகிறது. கிலாபாவின் கட்டுமான பணியின் பிரதான பண்புகள் இழக்கபடும்போது கிலாபா வீழ்கிறது.

போராட்ட ஒழுக்கங்களில் நுபுவ்வத்தின் கட்டளைகள் மீறப்படும்போது போராட்டம் தோற்கிறது. ஈமானின் உச்சத்தில் இருந்த சமூகமே ஒரே ஒரு கட்டளைக்கு மாறு செய்ததால் வெற்றி பெற முடியவில்லை என்றால் நபியின் கட்டளைகள் தினமும் மாறு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தில் அரசியல் வெற்றியின் தூரம்தான் எவ்வளவு என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) - கெய்ரோ, எகிப்து

Related

Articles 1652248232750770191

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item