முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_1166.html
(Mohamed Jeezan) சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.
பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக் களமாக இலங்கையை மாற்ற இனவாதிகள் துடிக்கின்றனர். முஸ்லிம்களின் பொருளா தாரத்தை முடக்கவும் அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். சட்டத்தின் கைகளை இலங்கை அரசு கட்டிப் போட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிக்கும் நடவடிக்கையாக 450 வருடம் பழமை வாய்ந்த தர்கா ஒன்று சிங்களத் துறவிகளாலும் இனவெறி கொண்ட இளைஞர்களாலும் தகர்த்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. அப்போது காவல்துறை கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.
இனவெறி வானொலி எப்.எம். அலைவரிசை யினூடாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கப் பட்டு தம்புள்ளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜித் சேதமாக்கப்பட்டது. மஸ்ஜிதை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் அணிதிரண்டு சென்று இதைச் செய்தபோதிலும், பௌத்த துறவிகள் அதிகாரத் தோரணையில் செயற்பட்ட போதும் இலங்கை பாதுகாப்புப் படைகள் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். எவர் மீதும் சட்டத்தின் எந்த அதிகாரமும் பாய வில்லை.
குருநாகலை எனும் பகுதியில் இருக்கும் இரு சின்ன பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த துறவிகள் கிளர்ச்சி செய்தனர். பள்ளியைச் சூழ இருந்து பௌத்த மதக் கிரிகையைச் செய் தனர்.
தெஹிவளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜிதில் தொழுகை நடத்தக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குர்நாகலில் குளியாப்பிடி எனும் பிரதேசத்தில் பௌத்தத் துறவிகளும் இனவாதிகளும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் பன்றியின் படம் வரையப்பட்டு அதில் ‘அல்லாஹ்’ என எழுதப்பட்ட படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பொம்மை செய்து அதில் அல்லாஹ் என எழுதி கொடும் பாவி எரித்தனர். இருந்த போதும் இதில் ஈடுபட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அநுராதபுரத்தில் ஒரு பகுதியில் குடியிருக் கும் முஸ்லிம்கள் அந்தப் பகுதியை விட்டு வேறு இடம் செல்ல வேண்டும் என்றும் அங்கு அமைந்துள்ள பள்ளியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் எச்சரிக்கை விட்டனர். அப்பகுதி மக்கள் போலிசில் முறையிட்டனர். அதற்கு பின்னரும் சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் இரவு நேரத்தில் அந்தப் பள்ளிவாசல் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தினத்தில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சிக்குப் பின்னர் கூட சட்டத்தின் கண்கள் இறுக மூடிக்கொண்டே இருந்தது.
காலி, கேகாலை உள்ளிட்ட நான்கு பிரதேசங் களில் உள்ள மஸ்ஜிதுகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டு ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டன. எனினும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
மாலை வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மூன்று முஸ்லிம் மாணவிகளை ஒருவர் ‘ஹிஜாப் அணியக் கூடாது’ எனக் கூறி தடியால் அடித்து எச்சரித்துள்ளார். அதுகுறித்து போலீசில் புகார் செய்து சம்பவ இடத்திற்குச் சென்ற போது; அங்கு ஒருவர் நின்றுள்ளார். அவர் ஒரு மன நோயாளி எனக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் எம்மை அடித்தவர் இவர் இல்லையென்று கூறியபோதிலும் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கும் இந்த நடவடிக்கை மனநோயாளியின் செயல்பாடு எனக்கூறி மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கொழும்பு, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் மாடு அறுக்கும் இடங்களுக்குச் சென்ற பௌத்த துறவிகளும் இனவாதிகளும் குழப்பம் விளைவித்துள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டே இருக்கின்றது. ‘முஸ்லிம் கடை களில் பொருள்கள் வாங்க வேண்டாம்’ எனப் பிரச்சாரம் செய்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடராக நடைபெற்று வருகின்றது. சிங்கள மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்று முஸ்லிம் விரோத மனப்பான்மையை ஊட்டும் விதமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
‘முஸ்லிம் ஹோட்டல்களில் உண்ண வேண்டாம். அவர்கள் உணவில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தக் கூடிய மருந்துப் பொருள் போட்டுத் தருகின்றனர்’ என்ற பிரச்சாரத்தால் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களது ‘வட்டிலப்பத்தை’ சிங்கள சகோதரர்கள் விரும்பி உண்பார்கள். பெருநாள் என்றாலே வட்டிலப்பம் வேண்டும் என்று கேட்பார்கள். இந்த நட்புறவை சிதைக்கும் விதத்தில் உங்களுக்குத் தரும் வட்டிலப்பத்தில் முஸ்லிம்கள் எச்சில் துப்பித் தருகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து வெறுப்பை ஏற்றி வருகின்றனர்.
இலங்கை ஜம்இய்யத்ததுல் உலமா வழங்கும் ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கை உற்பத்திகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறைந்த தொகையையே பெறுகிறது. இருப்பினும் இதனால் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோடிக்கணக்கில் நிதி சேர்த்து அல்காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு வளர்க்கப் பட்டு வருகின்றது.
மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் 100 வருடங்களாக இருந்து வருகின்றது. அந்தப் பள்ளியை அகற்றக் கோருகின்ற அதே வேளை அந்தப் பள்ளி யின் சுவரில் பன்றி உருவத்தை வரைந்து முஸ்லிம் களின் மனதைப் புண்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளியே இருக்கும் துண்டுப் பிரசுரங் களில் ‘அல்லாஹ் - பல்லா’ (சிங்களத்தில் நாய் என்பது இதன் அர்த்தமாகும்)
‘பொது பல சேனா’ என்ற ஒரு அமைப்பே இந்த தீவிரப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது. அவ்வப்போது வேறு வேறு பெயர்களில் சில இனவாத செயல்களையும் செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரங்க மாக இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டும் கூட இலங்கை அரசு இதனைக் கட்டுப் படுத்த எந்த உருப்படியான நடவடிக் கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்த பாயாவையும் சந்தித்துப் பேசிய பின்னரும் கூட எந்த தங்கு தடையுமின்றி ஜனாதிபதியின் சொந்த ஊரில்கூட முஸ்லிம் எதிர்ப்பு ஊர் வலத்தை அவர்கள் நடத்தி விட்டனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் ஆசியுடனும் அனுசரணையுடனுமே முன்னெடுக்கப்படுகின்றன என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதை மறுக்கும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.
தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம் களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.
இந்த பௌத்த மயமாக்கல்கள்; சிங்கள மேலாதிக்கத்திற்கு இன்று முஸ்லிம்கள் இரையானபோதும் அது அத்துடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து ஏனைய சமுதாயங் களையும் காவு கொள்ளவே முயற்சிக்கும். எனவே, இந்த இனவாதம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர்களின் வாழ்வுரிமையை நசுக்கிவிட்டு தற்போது முஸ்லிம்களைக் குறிவைத்து சிங்கள மேலாதிக்கம் காய் நகர்த்தி வருவதை சர்வதேச உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.