அல் ஜஸீராவின் பார்வையில் அளுத்கம, பேருவளை வன்முறைகள்
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_3828.html
(அளுத்கம, பேருவளை வன்முறைகள் குறித்து மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட அல் ஜஸீரா தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17) வெளியான கட்டுரையின் சாராம்சம் இது.)
இலங்கையில் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த பௌத்த கலகக் கும்பல்களின் வன்முறைகள், தீவைப்புகள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்கங்களும் அமைப்புகளும் தமது கவலையை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்துவிட்டு பௌத்த கடும்போக்காளர்கள் கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீவைத்து, முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையொன்றில் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கொன்றதாக செவ்வாய்க்கிழமை அல் ஜஸீரா அறிந்தது.
இவ்வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும்படி இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா கோருவதற்கு இப்புதிய வன்முறைகள் தூண்டின.
"இத்தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தவும் அவற்றுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அதிகாரிகளை நாம் கோருகிறோம்" என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் செவ்வாயன்று டுவிட்டரில் தெரித்திருந்தார்.
இவ்வன்முறைகளுக்கு முன்பாக கலகொட ஞானசார அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு, முஸ்லிம் வர்த்தகர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
இவ்வமைப்பு 2013 இல் கொழும்பின் புற நகர் பகுதியொன்றிலுள்ள பள்ளிவாசலொன்றின் தாக்குதலுடனும் தொடர்புபடுத்தப்பட்டது. ஹலால் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இவ்வமைப்பு பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
இதுவரை நான்கு பேரை பலிகொண்ட புதிய வன்முறைகள் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஞாயிறன்று கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவீபிள்ளையும் மத வன்முறைகள் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என கவலை தெரிவித்திருந்ததுடன் இதன் சூத்திரதாரிகளை உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கோரியிருந்தார். வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தன்னாலான அனைத்தையும் அரசாங்கம் அவசரமாக செய்ய வேண்டும் என அவர் ஜெனீவாவில் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட அளுத்கமவின் புறநகர் பகுதியான வெலிப்பன்னையில் நடந்த வன்முறைகளில் தமிழரான பாதுகாப்பு ஊழியர் ஒருவர் எனக் கூறப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் பள்ளிவாசலொன்று தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
"பொலிஸ் மற்றும் இராணுவம் எதுவும் செய்யாததால் எமது வீடுகளை நாமும் பாதுகாத்துக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். கடந்த இரவு நாம் அவர்களை இங்கு வருமாறு அழைத்திருந்தோம். ஆனால், அவர்கள் பள்ளிவாசல் எரிக்கப்பட்ட பின்னர்தான் வந்தார்கள்" என கடை உரிமையாளர்களில் ஒருவரான அப்துல் மௌலானா அல் ஜஸீராவுக்கு தெரிவித்தார்.
ஓர் இரவில் ஒரு டஸனுக்கும் அதிகமான கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரமொன்று ஏ.எவ்.பியிடம் தெரிவித்ததுள்ளது. பொலிஸாருக்கு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிவாசல்கள், எரிக்கப்பட்ட பின் நூற்றுக் கணக்கானவர்களை வீடற்றவர்களாக்கச் செய்த இவ்வன்முறைகளை தடுப்பதற்கு அதிகாரிகள் சிறியளவிலேயே செயற்பட்டதாக உள்ளுர் முஸ்லிம் தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
"எனது அயலவர்கள் இரு நாட்களாக எனது வீட்டில் ஒளிந்திருந்தார்கள். பொலிஸார் வரவில்லை. இறுதியில் தாக்குதல்கள் கும்பல்கள் உள்ளே புகுந்து எம்மை தாக்கினார்கள். கணினிகளையும் தாககி, எமது பணத்தையும் எடுத்துச் சென்றார்கள் என அளுத்கமயை சேர்ந்த மொஹம்மட் ஃபஹார் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நிலைமை முன்னேற்றமடைவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஏ.எவ்.பியிடம் தெரிவித்திருந்தார். இவ்வன்முறைகள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். (புதன்கிழமை வரை 47 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்)
இதே அளுத்கமயை சேர்ந்த சிங்களவரான தினேஷ் சிறிவர்தன கூறுகையில், "இந்த கலகக் குழுவினர் எங்கிருந்த வந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. எமது வீட்டுக்கு வெளியே பௌத்த கொடிகளை தொங்க விடுமாறும் அப்போது எம்மை இனங்கண்டுகொள்ள முடியும் எனவும் அவர்களால் எமக்கு கூறப்பட்டிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுபல சேனாவின் (பி.பி.எஸ்.) அங்கத்தவர்களை, வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பேரணி நடத்த அனுமதித்தமைக்காக தான் ராஜினாமா செய்யப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிக சிரேஷ்ட முஸ்லிம் உறுப்பினரான நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் மீதான தகாகுதலை தடுக்கத தவறியமைக்காக அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென தனது சொந்த ஆதரவாளர்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வதாக ஹக்கீம் தெரிவித்தார்.
ஆனால், ஏனைய பௌத்த அமைப்புகள் இவ்வன்முறைகளிலிருந்து விலகி நின்றன. அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் தவுல்தென ஸ்ரீ ஞானிஸ்சர தேரர் அல் ஜஸீராவிடம் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பௌத்தர்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கின்றனர். இதை நாம் தொடர வேண்டும். புதிய வன்முறைகள் நாட்டில் அசாதாரண பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கடையிலான கலந்துரையாடல்கள் மூலம் இது தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.
பொதுபல சேனாவின் நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்தார். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் கூறனார். (டினோக் கொலம்பகேயின் மேலதிக அறிக்கைகளுடன்)
(மெட்ரோ நியூஸ் 20-6-2014)