கிழியும் முகமூடிகள்
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_6129.html
புத்த பெருமான் கீழே அமர்ந்திருந்து தன்னுடைய முதன்மை சீடர்களுக்கு 'தர்மம்' குறித்து போதித்த இந்தியாவின் சாரநாத் புத்தமடத்தில் ஓங்கி வளர்ந்திருந்த போதி மரத்தின் ஒரு பகுதி தானாவே முறிந்து விழுந்திருக்கின்றது. அழுத்கமவிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இனவாதத்தின் நரவேட்டை உச்சநிலைiயை அடைந்து 96 மணித்தியாலங்ளுக்குள் இது நிகழ்ந்திருக்கின்றது.
இலங்கையுடனான பௌத்த சமய உறவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புபட்டது என்று நம்பப்படுகின்ற சாரநாத் போதி மரத்தின் கிளை முறிந்து விழுந்தமை வெறும் செய்தி மட்டுமாக இருக்கலாம். அல்லது 'பூனை குறுக்காகச் சென்றால் கெட்டது நடக்கும்' என்று நம்புகின்ற ஒரு சமுதாயப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு இதனை நோக்கினால், போதி மரத்தின் கிளை முறிந்து விழுந்தமை ஏதோவொரு 'சகுணத்தை' வெளிப்படுத்துவதாகவும் இருக்கலாம்.
சிங்கள மக்கள் வழிபடுவது மட்டுமன்றி ஏனைய இன மக்களாலும் மதிக்கப்படுகின்ற கௌதம புத்தர் இதன்மூலம் சிங்கள மக்களுக்கு குறிப்பாக இலங்கையில் வாழும் அடிப்படைவாத சிங்களவர்களுக்கு மறைமுக சேதி ஒன்றை சொல்ல நினைத்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு நிறையவே இடமுள்ளது. 'தன்னலம் துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றது. ஆசையை ஒழித்தாலே மனநிம்மதி பிறக்கும்' என்று இவ்வுலகுக்கு எடுத்துக்கூறி உயிர்கள் மீது காருண்யம், அன்பு செலுத்துமாறு வழிகாட்டியவர் புத்தர்.
ஆனால், அந்த மதத்தை பின்பற்றுவதாக கூறிக் கொள்வோரும் துறவிகளாக தம்மை முன்னிலைப்படுத்துவோரும் தாம் பரிந்துரைத்த அடிப்படைத் தத்துவங்களை மீறியுள்ளதன் வலியை 'போதிமர கிளையின் முறிவினால்' புத்தர் தம் சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆக, கௌதம புத்தரை தமது கடவுள் என்றும் போதி மரத்தை புனிதமானது என்றும் நம்புவது உண்மையென்றால், இந்த முக்கியத்துவமிக்க போதிமரக் கிளையின் முறிவு குறித்தும் சிந்திக்க சிங்கள கடும்போக்காளர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
தொடரும் அச்சம்
பேருவளை, அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் புயலடித்து ஓய்ந்தமாதிரி இருக்கின்றது. ஒரு புயலுக்குப் பின்னர் ஊருக்குள் வருகின்ற மக்களைப் போல மிகுந்த அச்சத்துடனும் திகிலுடனும் இப்பிரதேச முஸ்லிம்கள் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வீடுகளே எரிக்கப்பட்டுவிட்ட மக்கள் இன்னும் உறவினர் வீடுகளே தஞ்சமென கிடக்கின்றனர்.
ஆனால் - இனவாத காடையர்கள் தம்மை நோக்கி கத்திகளோடும் பொல்லுகளோடும் ஓடிவந்த போது, தமது கழுத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டபோது, வீடும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்ட போது, துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட போது, உயிரை கையில் எடுத்துக் கொண்டு ஓடியபோது............. அம்மக்களின் மனதில் ஏற்பட்ட அச்சமும் பீதியும், உதறலும் இன்னும் அடங்கவில்லை.
அளுத்கம கலவரத்தால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை காலம் திரும்பக் கொடுத்துவிடும். அவர்களது வீடுகளும் கடைகளும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பலாம். ஆனால் - இந்த நாட்டின் இனவாத சக்திகளும் அவர்களின் கைக்கூலிகளும் முஸ்லிம் மக்களின் மனதில் ஏற்படுத்திய வடுக்கள் ஒருநாளும் ஆறப்போவதில்லை.
காடையர்களும் குண்டர்களும் முஸ்லிம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு ஓயும் வரைக்கும் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தது போலவே தென்பட்டது. முப்படைகளையும் தம்வசம் வைத்திருந்த புலிகளை அழித்தொழித்த அரசாங்கத்தாலும் பாதுகாப்பு தரப்பினராலும், ஊரடங்குச் சட்டம் ஒன்றின் துணையின்றி அளுத்கம கலவரச் சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதை என்னவென்று சொல்வது.
சிறுபான்மை மக்களை வம்புக்கிழுக்கும் கைங்கரியத்தை இனவாதிகள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றனர். யுத்தத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மீது தமது கவனைத்தை குவித்துள்ள இச்சக்திகள் அவர்களை சீண்டும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றூமாக மேற்கொண்டு வந்தனர். ஹலால் ஒழிப்பு, அபாயா எதிர்ப்பு போன்றன எல்லாம் இதன் மாற்று வடிவங்களே. இவ்வாறு முஸ்லிம்களை சீண்டி கோபமூட்டினால் அவர்கள் தம்முடன் சண்டைக்கு வருவார்கள்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன அழிப்பு ஒன்றை மேற்கொள்ளலாம். அது கைகூட பட்சத்தில் குறைந்தபட்சம் முஸ்லிம்களை நாட்டின் அமைதிக்கு கேடுவிளைவிக்கும் சக்திகளாக காண்பிக்கலாம் என்று கடும்போக்காளர்கள் ஒரு மனக் கணக்கு போட்டிருந்தனர். ஆனால், கோபம் எல்லை மீறுகின்ற பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் விட்டுக்கொடுப்பு மற்றும் பொறுமை என்பவற்றை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்தமையால் சிங்கள பேரினவாதத்தின் வலிந்திழுக்கும் இந்த சதிவலைக்குள் அவர்கள் சிக்கவில்லை. ஹலாலை விட்டுக் கொடுத்தது பெரிய இழப்புத்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.
ஆயினும், அப்போது இனவாதிகளோடு மல்லுக்கு நின்றிருந்தால் கிட்டத்தட்ட அளுத்கம கலவரம் போன்ற ஒரு நிலைமையை ஒன்றரை வருடங்களுக்கு முன்னமே ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான தருணம் அளுத்கம பிரதேசத்திலேயே கிடைத்தது. முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுமாயின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களாகவே பொதுபலசேனா மற்றும் அதனது ஆதரவுச் சக்திகள் கனகச்சிதமாக திட்டமிட்டிருந்தன.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களை இலக்குவைத்தல், சிங்களவர்களுக்கு பாதிப்பில்லாமல் தாக்குதல் மேற்கொள்ளல், வெளியாட்களை பயன்படுத்துதல்.... என்பனவெல்லாம் அத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் என்பது பின்னாளில் தெரியவந்தது. இனவாத சக்திகள் பேருவளையில் அட்டூழியத்தை மேற்கொண்டதன் மூலம் தமது திட்டத்தின் நடைமுறைச் சாத்தியத்தை பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன என்றே கூற வேண்டும்.
72 மணித்தியாலங்களுக்குள் இப்பிரதேச மக்கள் அனுபவித்த கொடுமைகள் சிங்கள இனவாதத்திடமிருந்து 1915 கலவரத்திற்குப் பின்னர் முஸ்லிம்கள் அனுபவித்த மிகப் பெரிய வன்கொடுமையாகும். அதனை எழுத்தில் எழுதவியலாது. "பயங்கரவாத யுத்தத்தால் 30 வருடங்கள் அனுபவித்ததை நாங்கள் 3 நாட்களுக்குள் அனுபவித்து விட்டோம்" என்று பிரதேசவாசி ஒருவர் கிழக்கைச் சேர்ந்த ஒரு முஸ்லிமிடம் கூறியிருக்கின்றார் என்றால் - களநிலைமைகளை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை மனக் கண்ணில் கற்பனை செய்து பார்க்க முடியும்.
ஒரு ஜனநாயக நாட்டில் இப்பேற்பட்ட ஒரு இனச் சம்ஹாரம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எவ்வளவு கனதியாக இருந்திருக்க வேண்டும்? சில கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சந்தேக நபர்களுள் சிலர் மேலிடத்து அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்திப்படும் வகையில் காத்திரமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
வட்டரக்கவின் பாத்திரம்
அண்மைக்கால முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களில் வட்டரக்க விஜித தேரரும் ஒரு வகிபாகத்தை கொண்டிருக்கின்றார். மு.கா. ஸ்தாபக தலைவருடன் நல்லெண்ண உறவை பேணியவர் என அறியப்படும் இவரது பாத்திரம் 'கௌரவ வேடமாக' ஆரம்பித்து – பின்னர் 'காமெடி கரெக்டராக' ஆகிவிடுவதுண்டு.
அளுத்கம கலவரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் உடலில காயங்களுடன் முக்கால் நிர்வாண கோலத்தில் புறநகர் பகுதியின் ஒதுக்குப் புறமாக குப்புற விழுந்த நிலையில் காணப்பட்டார். பொதுபலசேனா அமைப்பினரே இவரை தாக்கியுள்ளதாகவும் இவருக்கு கத்னா (விருத்தசேதனம்) செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினரே இதனைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
பின்னர் அவர் தன்னைத்தானே இவ்வாறு செய்து கொண்டதாக சிரிப்பூட்டும் செய்திகள் வெளியாகின. தேரர் ஒருவர் - தானே தன்னைக் காயப்படுத்திக் கொண்டு, மர்ம உறுப்பை கீறிக் கொண்டு, பின்பக்கமாக கைகளை கட்டியவாறு, ஆடைகளை உரிந்துவிட்டு ஒதுக்குப் புறமாக குப்புறப்படுத்திருக்கின்றாரா? சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் வத்தளையில் சமூர்த்தி உத்தியோகத்தரை கட்டிவைத்து விசாரித்தார். பின்னர் தானே மரத்தில் கட்டிக் கொண்டதாக அந்த உத்தியோகத்தர் அறிவித்தார். அந்த சம்பவத்தையே இது ஞாபகப்படுத்தியது.
எவ்வாறிருப்பினும், தனக்குத்தானே காயப்படுத்திக் கொண்டதை வட்டரக்க தேரர் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், வட்டரக்க தேரரை வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தேரரின் சட்டத்தரணி கூறிக் கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த வட்டரக்க தேரர், பொதுபலசேனா வந்து கலகம் புரிந்ததை அடுத்து இதுபோலவே பெல்டி அடித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட வட்டரக்க தேரர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார், அமைதியான கடையடைப்புக்கு அழைப்புவிடுத்த முஜிபுர் ரஹ்மான் விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெருமளவு உயிர் மற்றும் சொத்து இழப்புக்களை ஏற்படுத்திய இனவாத காடையர்களும் அதற்கு காரணமானவர்களும் இன்னும் சட்டத்தால் கண்டு கொள்ளப்படவில்லையே என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டபோது வாயடைத்துப் போனேன்.
இதற்கான பதிலை பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கின்றது. அதாவது – சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் அவர்கள் ஹீரோ ஆகிவிடுவார்கள். அத்துடன் கலவரம் வெடிக்கும். எனவே கைது செய்வதற்கான நேரம் வரும்போது அதனைச் செய்வோம் என்ற அர்த்தத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. உண்மையாகச் சொன்னால், இப்பேற்பட்ட ஒரு இனக்கலவரத்தை முன்னின்று நடாத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதனைத்தான் சட்டத்தின் ஆட்சி என்பது. ஆயினும், பாதுகாப்பு தரப்பினரின் கருத்தில் நடைமுறை யதார்த்தமும் இருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.
இது இவ்வாறிருக்க, அளுத்கம பற்றி எரிந்தபோது நாடு திரும்பிய ஜனாதிபதிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பதுளையில் இடம்பெற்றது. இதில் முக்கிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாகப்பட்டது - ஜனாதிபதி விஷேட அறிக்கை ஒன்றை விடுவது, யார் என்றாலும் ஒரு இனத்தை தாக்கிப் பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல், பொலிஸ் மா அதிபர் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வாரந்தோறும் ஒன்றுகூடி அவ்வாரத்தில் இடம்பெற்ற விடயங்களை ஆராய்தல் போன்ற தீர்மானங்களே இங்கு எடுக்கப்பட்டன.
அளுத்கமயில் முற்றுமுழுதாக பதற்றம் அடங்கிருக்காத நிலையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அங்கு நடந்தேறிய இன அழிப்பு தொடர்பாக எந்தவொரு நேரடி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது. இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளிபோல் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரும் சாபக்கேடாக பயங்கரவாதம் இருந்தது.
அதற்கடுத்த சாபக்கேடாக இனவாதம் வளர்ச்சி கண்டுவருகின்றது. 30 வருட யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்களை மூன்று நாட்களுக்குள் அளுத்கம மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள் என்றால், இனவாதம் எந்தளவுக்கு கொடூரமானதும் வலிமையானதும் என்பதை சின்னப் பிள்ளைகூட உணர்ந்து கொள்ளும்.
இனவாதத்தின் அடையாளம்
1990களில் சிங்கள அடிப்படைவாத கருத்தியலை வித்திட்டவராக கங்கொடவில சோம தேரரை குறிப்பிட முடியும்;. கருத்தியல்ரீதியான இனவாதத்தின் அடையாளமாக அவர் திகழ்ந்தார். இருப்பினும் அவர் இந்தளவுக்கு இறங்கி வந்து இனவாதம் செய்ததாக ஞாபகம் இல்லை. அதுபோலவே, தற்காலத்தில் கருத்தியல் மற்றும் இயக்கவியல் அடிப்படையிலான இனவாதத்தை முன்னெடுப்பதற்கான பொறுப்பை பொதுபலசேனாவின் ஞானசாரர் திகழ்கின்றார். அல்லது அவரிடம் அப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களின் பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சி அவர்களது ஒற்றுமை என்பவை இனவாத சக்திகளை கிலி கொள்ளச் செய்திருக்கின்றது. இதற்கு முஸ்லிம்களின் சில செயற்பாடுகளும் காரணமாக அமைந்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தமது மார்க்க அனுஷ்டானமாக கடைப்பிடிக்கின்ற விடயங்களை சிங்கள மக்கள் குறிப்பாக இனவாதிகள் வேறு கண்கொண்டு பார்க்கின்றனர். இதனால் சுயபுத்தியுடன் சிந்திக்காத சிங்கள மக்களை வழிநடாத்துவது கடும்போக்கு சக்திகளுக்கு இலகுவாக இருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் சிங்கள தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பானது. அதில் மல்வத்து பீடாதிபதியை ஞானசேரர் சந்தித்தார். 'இலங்கையிலுள்ள தௌஹீத் போன்ற அமைப்புக்கள் பௌத்த நம்பிக்கைகளை விமர்சிக்கின்றன' எனக் கூறிய ஞானசார தேரர் அது தொடர்பான காணொளியை பீடாதிபதிக்கு மடிகணணியில் காண்பிக்கின்றார். பௌத்தத்தை விமர்சிக்கும் உரை ஒளிபரப்பாகின்றது.
"நாங்கள் பௌத்தத்தை பாதுகாக்கவே பாடுபடுகின்றோம் நீங்கள் இதனை நிறுத்தச் சொன்னால் இப்போதே எமது நடவடிக்கைகளை நிறுத்தி விடுகின்றோம். மகா சங்கத்தினரே உங்களது ஆசீர்வாதமின்றி எதையும் நாம் செய்ய மாட்டோம்" என்று தேரர் கூறுகின்றார். அப்போது பீடாதிபதி என்னவோ கூறுகின்றார். செய்தி முடிகின்றது.
இலங்கையில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு காரணத்தை கண்டறிந்து அரசாங்கம் திருப்திப்படுமளவுக்கு நடவடிக்கை எடுக்காது இருப்பது தெரிந்த சங்கதிததான். ஆயினும், இந்த நாட்டின் பாரம்பரியம் தெரிந்த பௌத்த பீடங்கள் பொதுபலசேனா மற்றும் ஏனைய கடும்போக்கு அமைப்புக்களின் தீவிரப் போக்கை தணியச் செய்வதற்கான அறிக்கைகளைக் கூட இதுவரை வெளியிடாமை முஸ்லிம்களின் மனதில் புதிய கவலையாக உருவெடுத்துள்ளது.
சகோதர இனங்கள் - பிட்டும் தேங்காய் பூவும் என்றெல்லாம் மயக்கும் வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் மனதில் எத்தனை பொறாமையும் வஞ்சகத்தையும் இத்தனை காலமும் மறைத்து வைத்திருக்கின்றது என்பதை 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பாணியிலான அளுத்கம கலவரமானது முகமூடி கிழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது. ஊடகங்களின் சர்வதேச மயப்படுத்தலும், சர்வதேச அழுத்தமும், முஸ்லிம்களின் முழுமையான ஒற்றுமையுடனான கடையடைப்பும் அதிகார தரப்பபை துணுக்குறச் செய்திருக்கின்றது.
அண்மைக்காலமாக ஒரு எல்லைக்குள் தமது செயற்பாட்டை முடக்கிக் கொண்டுள்ள ஜம்மியத்துல் உலமா சபையும், குத்துக்கரணம் அடித்தாலும் அரசிடம் இருந்து எதனையும் பெற்றுவிட முடியாத நிலையிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாரதூரம் அறியாமல் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை வெளியிடும் அமைப்புக்களும் - இந்த 'சீசன்' முடிந்ததும் இனவாதிகளால் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பாவமன்னிப்பு அளிப்பவர்களாக மாறிவிடுவார்கள். இன்னுமொரு தடவை இனவாதிகள் கையில் ஆயுதத்தை தூக்கும் வரைக்கும் அப்படியே நடந்ததை மறந்து விடுவார்கள்.
இன்றிலிருந்து 'தலைப்பிறை' சண்டை தொடங்கும் !
-ஏ.எல்.நிப்றாஸ்-