வெற்றுத் தலைமைகளுக்கு ஒரு அறை கூவல்!
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_3132.html
ஆயிரமாயிரம் உயிர்கள் போனாலும் முழு சமூகமே அழிந்தாலும் ஒரு சிலருக்கு மாத்திரம் அந்த உணர்வுகள் அவர்கள் சொந்த மூளைக்குள் ஏறுவதில்லை. அப்பேற்பட்டவர்கள் தத்தமது காரிய நலன்களிலும் சுகபோகங்களிலும் மிகக் கவனமாக இருப்பார்கள்.
இன்றைய நிலையில் அளுத்கம, பேருவள உணர்வுகளை மிக லாவகமாக திசை திருப்பி வரும் பொலிஸ் அரசியலில் மிகக் கச்சிதமாக கட்சி மாறுவதிலும் எம்மவர்கள் சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர். பொலிஸ் தரப்பு புதிது புதிதாக கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்போகும் சாட்சியங்களை மறுதலிக்க முடியாத தலைமைகளையும் தகவலாளர்களும் உடனுக்குடன் தம் நிலை மாற்றங்களை மேற்கொண்டு புதிய நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வர்.
அன்றைய தினம் பொலிசும், இராணுவமும் கை கட்டிப் பார்த்திருக்க உயிர் வாழ வேண்டுமானால் எதிர்த்து நிற்க வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அன்றைய நிலை இனிமேல் மறந்து போகப்போகிறது. முழு ஊரும் அழிந்த பின் அக்கறையோடு சென்று பார்க்கக் காத்திருந்த அரசாங்கம் இங்கு உயிர் பிழைப்பதற்காகப் போராடிய சமூகத்தை எதிர்பார்க்கவில்லையென்பது தற்போது புதிதாக வெளியிடப்பட்டு வரும் துப்பு துலக்கல்கள் வெளிக்காட்டி வருகின்றன.
அங்கு இடம்பெற்ற போராட்டத்தினை நியாயப்படுத்தும் அளவுக்கு முகுகெலும்புள்ள அரசியல் பிரதிநிதித்துவம் எம்மிடம் இல்லையாதலால் இனி அடி வாங்க மறுத்தவர்கள் மீது சட்டம் அடிக்க ஆரம்பித்தால் அதை மௌனிகளாகப் பார்த்திருக்கும் நிலையே எஞ்சியிருக்கும்.
இந்நிலையில் ஒரேயொரு தடவை தம் சமூக அக்கறையை அல்லாஹ்வுக்காக நிலை நாட்டி கள யதார்த்தத்துக்கான அரசியல் போராட்டத்தினை அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதை அவர்கள் செய்வதற்கும் கட்சி பேதங்களை காரணங்காட்டிக்கொண்டிருக்கும் இடைவெளியில் பல இளைஞர்களின் வாழ்க்கை தனிமைப்படுத்தப்பட்டு சீரழிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
புலனாய்வுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் அளுத்கம நகரில் நாளாந்தம் பெட்ரோல் குண்டுகளும் வெற்றுப் போத்தல்களும் கண்டுபிடித்துக் கதை சொல்லி இனவழிப்பு முன்னெடுப்பை நியாயப்படுத்த முன் அரசியலால் மாத்திரம் வெல்லக்கூடிய அரசியல் போராட்டத்துக்காக ஒன்றிணைந்து அவசரமாக இயங்குவார்களா எம் அரசியல் வாதிகள்?
நடப்பதைத் தவிர்ப்பதற்கு முன்வராத சட்டம் நடந்து முடிந்த பின் மீண்டும் மீண்டும் அடி வாங்கிய சமூகத்தை ஓரந்தள்ளும் தேவை வளர்ந்திருக்கிறது. தாம் ஒரு இனவாத அரசு இல்லையென சர்வதேசத்துக்கு நிரூபிக்கும் தேவையை இத்தனை சீக்கிரமாக எமது சமூகம் உருவாக்கியிருக்கிறது. இது எம் சமூகத்தின் உணர்வுபூர்வமான ஐக்கியத்தை வெளிக்காட்டியிருக்கும் அதேவேளை சர்வதேசத்தின் கண்களில் இடம்பெற்றது இனவாத தாக்குதலோ இனவழிப்பு முயற்சியோ அல்ல மாறாக ‘கலவரம்’ என நிரூபிக்கும் நிலைக்கு வந்திருக்கும் அரசாங்கம் சர்வதேச சதி, வெளிநாட்டு உளவுப்பிரிவுகளின் ஈடுபாடு முதல் அடிப்படைவாதம், அது இது என முஸ்லிம் சமூகத்தின் மீது தற்காலிகமாகக் குத்தப்படும் முத்திரை வெறும் அரசியல் முத்திரையாக இல்லாமல் சிங்கள சமூகத்தின் மனதில் குறிப்பாக எதிர்கால சிங்கள இளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் விதை !
என்ன செய்யப்போகிறது எம் அரசியல் பிரதிநிதித்துவம் ? பொறுத்திருந்து பார்ப்பதா இல்லை அரசியல்வாதிகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
- இ. ஷான்-