அடிப்படைவாதத் தீ
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_6637.html
"தாய் முன்னிலையில் மகளை வல்லுறவுக்குட்படுத்திய கள்ளக் காதலன் கைது"
"இளம் யுவதியொருத்தியை கெடுத்த பிரதேச சபை உறுப்பினருக்கு இருபது ஆண்டுச் சிறை"
"மூன்று வயது சிறுமியைக் கொடுவினை செய்த தேரரைச் சாத்தினாள் தாய்"
"மித்தெனிய விடயம் கண்டு இளம் பௌத்த துறவி கைது"
"9ஆம் தர மாணவி 3 மாத கர்ப்பிணியாய்” - “திருமணம் முடித்த உறவினர் ஒருவரின் வேலையாம்"
"வயோதிபர்களை காதலித்த மாணவியர் 27 பேர் கற்பழிக்கப்பட்டனர்"
இவை யாவும் சென்ற சில தினங்களாக ஊடகங்களில் வெளியான உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டிய, மிகவும் கீழ்த்தரமான செயல்களாகும். அளுத்கம பத்திராஜகொட பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் அல்லது “ட்ரபிக்” பிரச்சினையும் ஒழுக்க்க் கெட்ட இளம் பௌத்த துறவியொருவர் நையப்புடைக்கப்பட்டதும் இக்கால கட்டத்திலாகும். இந்த விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அளுத்கமவில் இடம்பெற்ற “ட்ரபிக்” மேற்சொன்ன தீயவிடயங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது குறைவானது என்றே சொல்ல வேண்டும். என்றாலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அளுத்கம விடயத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களை மகா சங்கத்தினரிடம் அனுப்பி மன்னிப்புக் கோர வைத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 25 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஆவன செய்யபட்டுள்ள போதும், அதனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை.
இளம் பௌத்த துறவி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பில் மூன்று முஸ்லிம் வாலிபர்களே இனங்காணப்பட்டுள்ளனர். முன் சொன்ன அனைத்து இழிந்த செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் சிங்களவர்களாக இருக்கின்றார்கள். அளுத்கம முஸ்லிம் வியாபார நிலையமொன்றுக்கு தாயுடன் சென்றிருந்த சிறுமியின் மறைவிடத்தை ஒருவர் தடவினார் என்ற செய்தியே அளுத்கம, பேருவலை தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது.
இங்கு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மக்களை அச்சமடையும் வண்ணம் தாக்குவதும், கொலை செய்துகொள்வதும் ஏன்? ஏனைய பகுதிகளில் அவ்வாறானதொரு விடயம் இடம்பெறாமலும் அனைத்தும் சட்டரீதியாக அமைந்துள்ள போதும் குறித்த குற்றம் தொடர்பில் சட்டத்தின் உதவியை மட்டும் நாடுவது ஏன்? நாங்கள் சிந்திக்க வேண்டிய ஆயினும் இதுவரை சிந்திக்காத பிரச்சினை இங்குதான் உள்ளது. அதற்குக் காரணம் நாங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஒருபக்கச் சார்புடைய சிந்தனையுடையவர்களாக இருப்பதற்கே எங்களை பழக்கிக் கொண்டுள்ளோம்.
இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட 30 ஆண்டுகள் பிரிவினைவாத யுத்தத்தின் பின்னர்கூட வர்க்கவாத மனோநிலையிலிருந்து விலக முடியாதுள்ளது. அதற்காக உடனடியாக விரல் நீட்டப்படுவது இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கும், சில மதகுருமார்களுக்குமே. நாடு சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட, இன்னும் எங்களில் “இலங்கையர்” என்ற கோட்பாட்டை உடையவர்களாக இருக்க முடியாதுள்ளது. 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் (எல்.ரீ.ரீ.ஈ தோல்விக்குப் பின்னர்) கூட அதனை நிலைநாட்ட சந்தரப்ப சூழ்நிலை கிடைத்துள்ள போதும், நாங்கள் பல்வேறு வேண்டத்தகாத விடயங்களில் எங்களை ஈடுபடுத்தி வீணர்களாக இருக்கின்றோம். அது தொடர்பில் எதிர்காலச் சந்ததியினர் எங்களைச் சாபமிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஸ்ரீலங்கா சிங்கள பௌத்தர்கள் உள்ள பெரும்பான்மையினர் வாழும் நாடு என்பதை புதிதாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லை. சில பௌத்த மதகுருமார் உபதேசிக்கும்போது, விஷ்ணுவின் மூலம் புத்தபெருமானைக் கொண்டு, இலங்கை பௌத்தர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மை எந்தளவு இருக்கின்றது என்பது தெரியாதவிடத்தும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை நாடுகின்ற, நல்லன போதிக்கின்ற விடயங்கள் பற்றி சிலர் கவனத்திற் கொள்ளாத போதும், இலங்கை வாழ் பெரும்பான்மையான பொதுமக்கள் அதன்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் “அனைத்து உயிரினங்களும் துன்ப துயரமின்ற வாழ்வதாக” எனக் கூறுவது தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கித் தள்ளி அல்ல. என்றாலும் சிலர் தமது மதத்தைச் துச்சமாக மதித்து, இழிந்த அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற தன்மையைக் கண்கூடாகக் காண்கிறோம். பிரச்சினை இங்குதான் உள்ளது. தேரவாத பௌத்தம் நிர்மலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகம், அதனைக் கருத்திற் கொள்ளாது தீய அடாவடித்தனங்களுடன் மிகக் கொடிய இனவாதக் குரோதத்தோடு வாழ்வதற்கு இடமில்லை.
அதற்கு ஏனைய இனங்களின் அடிப்படைவாதமும் இணையுமல்லவா? என்று ஒருவர் விவாதிக்க முடியும்.
அதில் ஓர் உண்மை உள்ளது. பொது பல சேனாவிலிருந்து வந்தாலும், ராவண பலயவிலிருந்து வந்தாலும், தௌஹீத் ஜமாஅத்திலிருந்து வந்தாலும், தலிபான், ஜிஹாத், அல்கைதாவிலிருந்து வந்தாலும் அதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாததின் காரணமாக இஸ்லாமிய நாடான ஈராக் இன்று மிகவும் பயங்கரவிளைவைச் சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் இல்லை. 2500 ஆண்டுகட்கு மேல் பாதுகாக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த அடிப்படைவாதமல்லாத சூழல் அதற்கு வரலாற்றுச் சான்றாக உள்ளது. எந்தவொரு இனமும் தங்களுக்குள் எந்தவொரு சிந்தனையையும் கொண்டிருப்பதற்குத் தடையில்லை. அதற்காக அமைப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்குத் தடை இருப்பதாகவும் தெரியவில்லை. தவறு இருப்பது அந்த இடத்தில் அல்ல. அந்த இனக்குழு இனவாதக் குழுவாக தம்மை மாற்றிக் கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது. தேசாபிமான சால்வை போர்த்திக் கொண்டுள்ள பொது பல சேனா மட்டுமன்றி, “அல்துகீ” (இவர் தௌஹீத் இயக்கத்தைச் சொல்வதாக நினைக்கிறேன்) “ஜிஹாத்” போன்ற அமைப்புக்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் இதே பின்னணியில் இருப்பதனால்தான்.
“தேசாபிமானம் எங்களின் கடைசி ஆன்மீகத்தின் இருப்பாக இருக்கக் கூடாது. எனது கடைசி இருப்பிடமாக மனிதாபிமானமே இருக்க வேண்டும். நான் வாழும் மட்டும் தேசாபிமானத்திற்காக மனிதாபிமானத்தை நசுக்க இடமளிக்க மாட்டேன்.”
என மகாகவி ரவீந்தரநாத் தாகூர் சொன்னார். பல்வேறு இனவாத முருகல்கள் இருந்தபோதும், இன்று இந்தியா உலகின் பலம்பொருந்திய நாடாக இருப்பதற்குக் காரணம் அந்நாடு சிறந்த தூரப் பார்வையுடன் இருப்பதனாலாகும். அவை எல்லாவற்றையும் விட முன்னே சென்று ஒரு தூதுவராகக் கருதப்படுகின்ற புத்த பெருமானின் (சித்தார்த்தரின்) விசுவாசிகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இலங்கையில் இன்னும் இழிந்த இனவாதம் தலைதூக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன என சிந்திக்கக் கடமையாக இருக்கின்றது.
“ஆம் நாங்கள் இனவாதிகள் தாம்
நாங்கள் மதவாதிகள் தாம்
என்ன சொல்கிறீர்கள்
எங்களுக்கு கைநீட்டினால் அவ்வளவுதான்”
பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைப்பொன்றின் மதகுருமார்களில் ஒருவர் இப்படிச் சொல்லும்போது, அந்தப் பேச்சு ஊடகங்கள் வாயிலாக முழு உலகிற்கும் செல்லும்போது, அதனோடு சேர்த்து பற்றி எரிகின்ற வியாபார நிலையங்களின், வீடுகளின், அநாதையான மக்களின் படங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்போது. உருவாகின்ற படமானது புத்திதெளிந்த எந்தவொரு நபருக்கும் நன்கு விளங்கும். தொழில்நுட்பம் வீறுநடைபோடுகின்ற காலகட்டத்தில் இதனை எதனாலும் மறைக்கவியலாது. அதேபோல, நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனத்திற்கு “நாங்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கின்றோம்” என்ற எண்ணப்பாடு உள்ளத்து எழுவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள. இது முளையிலேயே நாட்டுக்கு கெடுதியானது. தெரிந்தோ தெரியாமலோ இந்த அடிப்படைவாதமானது எங்களை கழுமரத்தில் ஏற்றக் காத்திருக்கும் சர்வதேசத்திற்கு உதவி செய்துள்ளது. இவர்களது எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு இவ்வாறு அழிவுப்பாதைக்கு வழிவகுத்துள்ளது. அவ்வாறன்றி, அடிக்கடி எருமை மாட்டுக் கதைகள் கதைக்கும் அரசியல்வாதிகளால் அல்ல.
அளுத்கம பத்திராஜகொடவிலிருந்து தர்மோபதேசத்திற்காக முச்சக்கர வண்டியொன்றில் சென்றிருந்த இளம் பௌத்த துறவியொருவர், இடையில் தாக்கப்படுவாராயின் அது குற்றமாகும். அவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவது எந்த இனத்திற்குரியவராக இருந்தாலும் தண்டனைக்குரியவரே. அந்தத் தண்டனையில் இனவாதமில்லை. இவ்வாறான அசட்டுத்தனமான காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர். இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் உச்சகட்ட சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தெளிவு. என்றாலும் அதற்குப் பின்னர் நடந்தவை தெளிவற்றவை. இப்பிரதேசத்தின் சுற்றுச் சூழல் பற்றி பொலிஸாருக்கு புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அது தெரியாத பால்குடிப் பாலகர்கள் பொலிஸில் இருப்பதாகத் தெரியவில்லை. கைகலப்பு தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிறைவைப்பதற்கு ஆவன செய்யப்பட்டதன் பின்னர், பௌத்த பிரச்சாரக் கூட்டமொன்றை அங்கு வைப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தமையே இன்றைய பிரச்சினைக்கு அடிகோலியுள்ளது. அது அவ்வாறு நடந்தால் இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படலாம் என பொலிஸாரிடம் முஸ்லிம்கள் பலமுறை எடுத்துச் சொன்னபோதும், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குமார வெல்கமவின் பேச்சையும் கேட்காமல், அதற்கு அனுமதி வழங்கியிருப்பது பின்னர் ஏற்பட்ட அனைத்து அழிவுகளுக்கும் காரணமாகியுள்ளது. இறுதியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட, பதில் கூறவேண்டிய கடமையில் உள்ள அமைச்சர்களும் மந்திரிமார்களும் உடனடியாக அங்கு சென்றதனாலேயே பிரச்சினை கொஞ்சமாகவேனும் தணிந்தது எனலாம். அவ்வாறு இல்லாதிருந்தால் அதன் பிரதிபலிப்பு, இவ்வளவுதான் என்று கூறுவதற்கும் இடமளிக்காது இருந்திருக்கும்.
மாவனல்லைக்கும், பதுள்ளைக்கும் வழங்காத உத்தரவு அன்று அளுத்கமவுக்கும் வழங்கப்படாதிருந்திருந்தால் இந்த சேதங்கள் ஏற்படாதிருந்திருக்கலாம். அத்தோடு அந்தத் தாக்குதலுக்கு வெளியிடங்களிலிருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றமை தெட்டத் தெளிவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்த வேளையிலும் அதனை அறியாதவர்களாக பொலிஸார் இருந்திருக்க நியாயமில்லை. மத மாநாட்டுக்கு உத்தரவு வழங்கியதும், அதன்பின்னர் பயணித்த வாகன ஊர்வலத்திற்கு முஸ்லிம் பள்ளியிலிருந்து கற்கள் எறியப்பட்டதும், அதன்பின்னர் வேறு இடங்களிலிருந்து குண்டர்கள் வந்து குறித்த அசம்பாவிதங்கள் இடம்பெற உதவியதும், மேலதிக விசாரணைகளுக்கு உதவியாக அமையும். அது சமாதானத்தை விரும்புகின்ற நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கின்ற சிறுபான்மை இன வாக்களித்தல் முறையை இல்லாதொழிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. அரசாங்கம் அந்த முடிவுக்கு வருவதற்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் உதவியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது. அவ்வாறு உடந்தையாக இருந்திருந்தால், அது வேறொரு அரசியல் நாடகமாக இருப்பது தெளிவு. இன்று அதன் நன்மையை எதிர்க்கட்சியே அடைந்துள்ளது. அரசாங்கம்தான் இதனைச் செய்வதாயின், கூடுதலாக அபிவிருத்தி பற்றிப் பேசிப்பேசி, பல்வேறு கனவுகளை விதைப்பதால் பெரும்பான்மையானோர் இதனைக் கண்டுகொள்ளாதிருக்கக் கூடும். சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் உள்ளோரும் உளர். அரசாங்கம் தனக்கே தான் பந்துக்கு “கோல்” போட்டுக் கொள்ளுமா? என்றுதான் சிலர் சிந்திக்கின்றனர். அதனோடு தொடர்புடைய மற்றொரு வாதமாக இருப்பது என்னவென்றால், வெற்றிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் மட்டும் போதுமானது என்பது. அவ்வாறாயின், தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படைவாதத்தின் கீழ் அந்த வாக்களிப்பு முறையை தட்டத்தான் முடியுமா? என்று வெள்ளோட்டம் பார்க்கின்றது போலும்.
அரசாங்கத்திற்கு மூளை இருக்குமானால், இவை யாவும் நடைபெறுவது ஒரே இடத்திலிருந்து தானா? என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.
சிங்களத்தில்: வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්රිය රාමනායක)
தமிழில்: கலைமகன் பைரூஸ்