அளுத்கம விவகாரமும் சர்வாதிகாரத்தின் சாயலும்- தயான் ஜயதிலக
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_1794.html
பல்மொழி பேசுகின்ற, பல இனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, பலதரப்பட்ட மதங்களையும் பல்வகைமை மிக்க கலாசாரங்களையும் உடைய சமூகமொன்றில், எதிர்பாராத வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் வெடிக்கும் போது அதிகாரம் தாங்கிய ஆட்சி நிர்வாகத்தின் வகிபாகம் என்னவாக இருக்க முடியும்? அத்தகைய தருணங்களில் ஆட்சி நிர்வாகிகளின் பணிகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்? அனைத்து சமூகக் கூறுகளையும் பிரஜைகளையும் சமத்துவமாக நடாத்தும் தார்மீகப் பொறுப்பு மிக்க அரசு, நடந்து முடிந்த அசம்பாவிதங்களின் போது நடுநிலையைப் பேணியதா அல்லது பாரபட்சமாக நடந்து கொண்டதா? அரசும் அதிகாரிகளும் பாரபட்சமாகத்தான் நடந்து கொண்டனர் எனில், சர்வதேசத்திடம் பதில் கூற வேண்டிய கடப்பாடு ஒன்று இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?
தீவிரப் போக்குடைய பௌத்த அடிப்படைவாதத்தினை இந்நாட்டு அரசாங்கம் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தும் விதமாக நோக்குகின்றதா அல்லது நட்புறவுடன் மௌனம் சாதிக்கிறதா?
பௌத்த தீவிரப் போக்கு அல்லாதவர்கள் அல்லது அரசியல் ரீதியில் மாற்றுக் கொள்கையுடையோர் (JVP, FSP, UNP மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்) ஆகியோர் வன்முறை எதிர்ப்பாளர்களாக இருந்தும் கூட அவர்களை நாட்டின் இறைமைக்கு சவால்களாக இந்நாட்டு அரசு கருதுகின்றதா? சிறில் மெத்தியூ மற்றும் JSS ஆதரவாளர்கள் விடயத்தில் J.R. ஜெயவர்த்தன அரசு நடந்துகொண்டதை போல இந்நாட்டு அரசு பொதுபல சேனா மற்றும் அதன் அடிவருடிகளை தோழமை குழுக்களாகக் கருதி JVP, FSP இனை எதிர்க்க உபயோகிக்கிறதா?
பொதுபல சேனா அமைப்பு கனிவோடும் அக்கறையோடும் அரசாங்கத்தினால் போஷித்துப் பாதுக்காக்ககப்படுவதன் உள்நோக்கம், தமது வாக்காளர் வங்கி சரத் பொன்சேகாவை நோக்கி இடம்பெயராமல் இருப்பதற்காகவா அல்லது வாக்காளர் களஞ்சியதின் பெரும் பகுதி கைநழுவி போய்விடக் கூடாது என்பதற்காகவா?
என் பால்ய நண்பர் ஜெனரல் அசோக் மேத்தாவின் பதிவு செய்யப்பட்ட கருத்தின்படி, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச ஒரு முக்கியத்துவமற்ற நபர் எனினும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புக்கூற கடமைப்பட்டவர். எனவே அவர் கூறும் கருத்துக்கள் வாசிப்பதற்காக மாத்திரமன்றி உன்னிப்பாக உய்த்தறியப்பட வேண்டியவையாகும். அளுத்கம விவகாரம் தொடர்பில் அவர் கூறும் கருத்துக்களே அரசின் கருத்துக்களாகக் கொள்ளப்படும். பொதுபல சேனா மற்றும் அளுத்கம விவகாரம் தொடர்பில் அவர் பிறப்பிக்கும் கட்டளைகளையே சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவோர் கடைப்பிடிக்கப் போகின்றனர்.
ஒரு பத்திரிகை நேர்காணலின் போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தனக்கும் பொதுபல சேனாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார். அது உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் கோத்தபாய ராஜபக்ச பொதுபல சேனா மீது கொண்டிருக்கும் கரிசனையினை, அபரிமிதமான அக்கறையினை அப்பேட்டி இரு வேறு முகாந்திரங்களின் அடிப்படையில் வெளிக்காட்டியது. ஒன்று, பொதுபல சேனா இயக்கத்தைப் பற்றியோ அல்லது கலகொட ஞானசார தேரர் அளுத்கம கூட்டத்தின் போது விளித்துரைத்த “ஆம், நாங்கள் இனவாதிகள்தான்” என்ற கூற்றுக்கு எதிராகவோ ஒரு சிறு கண்டனத்தையேனும் அப்பேட்டியின் போது அவர் வெளியிடவில்லை. மற்றையது, அவரது பேச்சு பொதுபல சேனா இயக்கத்தை மற்றைய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தும் போக்கில் அமைந்திருந்தது.
கலகொட அத்தே ஞானசார தேரரின் சமீபத்திய உரைகளை ஆராயும் போது குறிப்பாக அளுத்கம கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில், மற்றொரு சமூகத்தின் மீதான வெறுப்பை அனல் கக்கும் வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவ்வாறான வெறுப்புணர்வைத் தூண்டும் உரைகளை செவிமடுக்கும் பாமரன் ஒருவன் மற்றைய சமூகத்தின் மீது வெறுப்பு கொள்ளவதற்கு உந்துதல் பெறுவது இயல்பே. எனினும் இலங்கை வரலாற்றில் எந்தவொரு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்போ இவ்வாறு கீழ்த்தரமான வார்த்தைகளில், மற்றைய மதத்தின் மீது வெறுப்புணர்வை வெள்ளமாக அள்ளித்தரும் உரைகளை பகிரங்கக் கூட்டங்களில் ஆற்றியதற்கான சான்றுகள் இல்லை. அவ்வாறு அரிதாக இருந்தாலும் அவ் உரைகள் மக்களைத் தூண்டி மற்றைய மதத்தினர் மீது வன்முறையை பிரயோகித்து சொத்துக்களைப் பகிரங்கமாக சூறையாடி, உயிர்களைப் பலி கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றதில்லை என்பதே நிதர்சனம் ஆகும்.
அளுத்கம விவகாரத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் மற்றும் ஒரு தமிழர். ஆக ஒரு சிங்களவர் கூட கொலை செய்யபடவில்லை. பொதுபல சேனா குற்றம் சாட்டும் “ஜிஹாத் அமைப்பினர்” எங்கே இருக்கிறனர்? “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களும் செய்த குற்றத்திற்கான மெழுகுப் பூச்சுக்களுமே ஆகும். முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முகாந்திரமற்றவை.
பொதுபல சேனா அமைப்பு அளுத்கம விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றது என சாட்சியத்துடன் நிரூபணமாகும் வரையில் சட்டத்தின் முன்னிலையில் சுற்றவாளி எனினும், ஞானசார தேரரின் வெறுப்பை உமிழும் கீழ்த்தரமான அளுத்கம உரை மற்றும் முன்னைய உரைகளே வன்முறைக்கு வழிகோலியது, அசம்பாவிதங்களுக்கு அத்திவாரமிட்டது என்பதை இனங்காண்பதற்கு ஒருவன் சட்டம் படித்த மாமேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
அப் பத்திரிகை நேர்காணலின் போது போயா தினமன்று பிக்கு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமே அளுத்கம வன்முறைக்குக் காரணம் என்பதை கோத்தபாய ராஜபக்ச திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர் கூறும் நொண்டிச்சாக்கு உண்மையாகவே இருப்பினும் கூட, சமத்துவம் மிக்க ஜனநாயக நாடொன்றில் ஒரு குற்றத்திற்கான தண்டனை அம்மதத்தைச் சார்ந்தவர்களின் சொத்துக்களைச் சூறையாடுவதும் உயிர்களைப் பலி வாங்குவதுமா? இந்நடவடிக்கை 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை நிகழ்வினை நினைவுபடுத்துகிறது. 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அதற்குப் பொறுப்பானவர்கள் சார்ந்த இன மக்களின் சொத்துக்களை சூறையாடிய கொடிய நிகழ்வு அது!
பத்திரிகை நேர்காணலின் மறுநாள் காலை பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பொதுபல சேனா அமைப்பு தன்மேல் உள்ள குற்றத்தை மறைக்கும்படியாக மற்றவர் மேல் குற்றத்தைச் சாட்டக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிட்டது.
கலகொட ஞானசார தேரருக்கு 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பல்முறைப் பயண வீஸாவினை, அமெரிக்கா இரத்துச் செய்தமை ஆச்சரியமல்ல. மாறாக ஞானசார தேரரின் வெளிப்படையான இனவாதப் போக்கு 2012 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய பின்பும் 2013 இல் அமெரிக்க நாட்டு விஜயத்தை மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தமையே உண்மையில் ஆச்சரியப்பட வேண்டிய விடயமாகும்.
பொதுபல சேனா இயக்கத்தை உடனடியாகத் தடை செய்யுமாறோ அல்லது பொதுபல சேனாவின் தலைமைகளைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறோ நான் பரிந்துரைக்கவில்லை. மாறாக, பொதுபல சேனா அமைப்பினையோ அல்லது அவ் அமைப்பின் கொள்கைகளையோ ஒரு போதும் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பொதுபல சேனாவின் எந்தவொரு இனவாதச் செயல்முறைக்கும் அனுமதி கிடையாது எனவும் வரையறுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரால் இந்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவானதொரு பிரகடனம் செய்யப்படல் வேண்டும் என்பதே எனது வேணவா. இல்லையெனில் மற்றுமொரு கறுப்பு ஜூலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதன் பின்விளைவுகள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என்பன அப்போதிருந்ததை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் அதேவேளை, நாட்டிற்கும் ஜனாதிபதிக்கும் அது பாரியதொரு சாட்டையடியாக இருக்கும் என்பது திண்ணம்.
-தயான் ஜயதிலக
-தமிழில்: ஹஸன் இக்பால் , யாழ்ப்பாணம்