வெளி நாடுகளில் இருந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு! ஓர் அன்பான எச்சரிக்கை
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_3041.html
சில வருடங்கள் ஆசா பாசங்களையும், சொந்த பந்தங்களையும் பிரிந்து சென்று வெளி நாடுகளில் பல கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் ஏதோ முடியுமான அளவு சம்பாதித்து ஆயிரமாயிரம் கனவுகளை மனதில் சுமந்தபடி நாட்டுக்கு வருகின்ற போது சில மோசடிகளுக்கும் வழிப்பறிக் கொள்ளைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டு விடுகிறது.
உறவுகளை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணக் களிப்பில் மனம் சந்தோசித்திருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நூதனமான முறைகளில் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர்.
அழகிய முறையில் திட்டமிட்டு ஒரு கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடு படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அழைத்துவர கொழும்புக்கு போகின்றவர்கள்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
விமான நிலையத்திலோ கொழும்பில் தங்குகின்ற விடுதிகளிலோ அழைத்து செல்ல வருபவர்களிடம் மிகவும் சிநேக பூர்வமாக லாவகமாக பேச்சைக் கொடுத்து அவர்கள் பற்றியும், அவர்களது ஊர் விடையங்கள் பற்றியும் பேசி தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். சில மணித்தியாலங்களின் பின்னர் வேறொருவர் வந்து இவரோடு முன்பு நன்கு அறிமுகமானவர் போல அவரது சுக செய்திகள் பற்றியும் ஊர் நிலவரங்கள் பற்றியும் சமூகம் பற்றியும் பேசுகின்ற போது இவரும் அந்த அயோக்கியர்களை முற்று முழுதாக நம்பி விடுகின்றனர். பின்னர் அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை செய்து, தேநீர் சிற்றுண்டிகள் போன்றவற்றை தமது சொந்தப் பணத்திலேயே வாங்கிக் கொடுத்து உறவை இன்னும் நெருக்கமாக்கிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வருபவரிடமும் நெருக்கமாக அன்பாகப் பழகி சந்தர்ப்பம் சரியாக அமைகின்ற போது திருடிக்கொண்டு போய் விடுகின்றனர். இது ஒரு வகை
மற்றது, ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருவது போல் போலியான பொதிகளை தயார் செய்துகொண்டு வந்து வெளியே பஸ்ஸுக்காக காத்திருப்பது, உண்மையாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் தமது பொதிகளோடு பஸ்ஸுக்காக வருவார்கள். பஸ்ஸின் பின்புறத்தில் எல்லாப் பொதிகளையும் ஒன்றாக ஏற்றுவார்கள் பயணம் தொடரும் கொழும்பை அன்மித்தவுடன் இடையில் இறங்கி அவர்களது போலியான பொதியை வைத்து விட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவருடைய பொதியை எடுத்துச் சென்று விடுவார்கள்.
இன்னும் பல வகைகளுண்டு.
இப்படித்தான் 20.6.2014 திகதியன்று மூதூரைச் சேர்ந்த சகோதரர் லிஹார் முஹம்மது என்பவரும். அட்டாளைசேனையை சேர்ந்த சகோதரர் ஒருவரும் வெளிநாட்டிலிருந்து ஒன்றாக வந்திருக்கின்றனர். லிஹார் முஹம்மதை அழைத்து செல்ல அவரது தந்தை விமான நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒருவர் வந்து அந்தத் தந்தையோடு அன்னியோன்யமாக உறவாடி அவருக்கு தேநீர், சாப்பாடு வாங்கிக் கொடுத்து தானும் மூதூரை சேர்ந்தவனென்றும் தனது தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப வந்ததாகவும் கூறி அந்தப் பெரியவரை நம்ப வைத்திருக்கிறான்.
மகன் வந்தவுடன் அந்த ஆசாமியை அறிமுகப் படுத்தி தனக்கு சாப்பாடு வாங்கித்தந்தது, உதவியாக இருந்தவரை எல்லாம் மகனிடம் சொல்ல அவரும் முழுமையாக நம்பிவிட்டார்.
விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு போக ஆயத்தமானபோது தனது வேலை முடிந்துவிட்டதாகவும். தானும் கொழும்புக்குத்தான் போவதாகவும் சொல்லி அவர்களுடனேயே கொழும்புக்கு வந்திருக்கிறான். பஸ் நிலையத்துக்கு வந்ததும் ஊருக்குப் போக ஆசனத்தை பதிவு செய்யுமாறு லிஹார் முஹம்மத்திடம் சொல்ல அவர் தந்தையிடம் பொதிகளை கொடுத்துவிட்டு ஆசனத்தை பதிவு செய்ய போயுள்ளார்.
அதேபோன்று அட்டாலைச்சேனை சகோதரரிடமும் சொல்ல அவரும் தமது பொதிகளை லிஹார் முஹம்மதின் தந்தையிடமே ஒப்படைத்துவிட்டு ஆசனப்பதிவுக்காகப் போயிருக்கிறார். லிஹார் முஹம்மது வந்து கைப்பையை தந்தையிடம் வைத்துவிட்டு பெரிய பொதிகளை அந்த ஆசாமியுடன் சேர்ந்து பஸ்ஸில் கொண்டு வைத்திருக்கிறார்.
பின் அந்த ஆசாமியிடம் ”இதனைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் தந்தையை அழைத்து வருகிறேன்” என்று சொல்ல ”இல்லை நீங்கள் இருங்கள் நான் வாப்பாவை கூட்டி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்து தந்தையிடமிருந்த லிஹார் முஹம்மதுடைய கைப்பையையும் அட்டாளைச்சேனை சகோதரருடைய கைப்பையையும் எடுத்துக் கொண்டு தலை மறைவாகி விட்டான். பின்னர்தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது.
லிஹாருடைய பையில் சில எலக்ரோனிக் சாதனங்களும் அடுத்த சகோதரரது பையில் அவரது கடவுச்சீட்டு, விமான டிக்கட், பெறுமதி மிக்க இரண்டு ப்போன்கள் நண்பர்கள் அவர்களது வீட்டில் கொடுக்கச் சொல்லிக் கொடுத்ததாம் அந்தச் சகோதரரது கடவுச்சீட்டு மிகப் பெருமதியானதல்லவா? அதனால் மீண்டும் அவரது வெளிநாட்டுப் பயணம் எனனவாகுமோ? அவர் மிகவும் கவலைப்பட்டதாக அறிய முடிந்தது.
எனது பொருட்கள் போனது பற்றி கவலையில்லை. இப்படியான சம்பவங்கள் இனிமேல் நமது சகோதரங்களுக்கு நடக்ககக் கூடாது. இதனால் கட்டாயமாக எல்லா சகோதரங்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களை அவதானமாக பாதுகாப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆலோசனை சொல்ல வேண்டுமென்று சகோதரர் லிஹார் முஹம்மது வினயமாக வேண்டிக் கொண்டார். அதனால்தான் இந்தப் பதிவு
வஸ்ஸலாம்