ISIS ற்கு முன்னால் ஈராக்கிய இராணுவம் தலைசாய்த்ததன் பின்புலம்
http://newsweligama.blogspot.com/2014/07/isis.html
ஈராக்கிய அரசியல் களம் அசுர வேகத்தில் மாற்றம் கண்டு வருகின்றன. ஒரு கிழமைக்கு முன்னர் முழு ஈராக்கினதும் பிரதமராக கருதப்பட்ட நூருத்தீன் மாலிகியின் அதிகார எல்லை பக்தாதுடன் சுருண்டு விட்டது. மறுபுறத்தில்,அல்-கைதாவிலிருந்து பிரிந்து சென்ற'சிரியா-ஈராக் இஸ்லாமிய தேசம்'என்ற இயக்கம் (ISIS)நாட்டின் பிரதான பல நகரங்களையும்,இராஜதந்திர மற்றும் செழிப்பு மிக்க பகுதிகளை கைப்பற்றி விட்டன. அதனது வெற்றிப் பவனி இன்னும் தொடரும் என்பது தான் தற்போதைக்கு ஊகிக்க முடியுமான செய்தி. ஈராக்கின் இரண்டாம் மிகப் பெரும் நகரமான மவ்ஸூல்,சதாம் ஹூசைனின் பிறப்பிடமான டிக்ரிட் மற்றும் தியாலி நகரங்கள்ISISஜிஹாதிய அமைப்பினரின் கைகளில் வீழ்ந்துவிட்டன. அவ்வமைப்பில் ஆயுதம் தரித்தவர்களின் எண்ணிக்கை20,000விட அதிகமான தொகையினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்ISISஅமைப்பினரின் ஆதிக்கத்தில் சிக்கிய நகர வங்கிகளில்500மில்லியனுக்கும் மேற்பட்ட நிதித் தொகையைISISகைப்பற்றியுள்ளனர். குறித்த நகரங்களில் இஸ்லாமிய ஜிஹாதி இயக்க அங்கத்தவர்களுடன் போர் புரிந்து தோல்வியுற்ற32000ஈராக்கிய வீரர்கள் விட்டுச் சென்ற இராணுவத் தளபாடங்களைISISஅமைப்பினர் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் யுத்தத் தாங்கிகள்,ஹெலிகாப்டர்கள் மற்றும் உயர் ரக துப்பாக்கிகள் போன்றனவும் அடங்கும். அதற்குமப்பால்,நாளொன்றுக்கு3இலட்சம் பெரல்கள் பெட்ரோலை உற்பத்தி செய்யும் பெட்ரோல் கிணறுகள் உள்ளடங்கிய பிராந்தியமொன்றையும்ISISஅமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்னும் பல பெட்ரோல் கிணறுகள் மற்றும் அகழ்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுளள் பிராந்தியங்களISISஅமைப்பினரின் முற்றுகைக்கு உட்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு பலரும்ISISஎன்ற ஜிஹாதிய அமைப்பினர் யார்?என்ற கேள்வியை அதிகம் கேட்கின்றனர். சிலர் அவர்கள் அமெரிக்காவின் அனுசரணையில் இயங்குபவர்கள் என்றும்,இன்னும் சிலர் சவூதி அரேபியாவின் உதவியில் இயங்குபவர்கள் என்றும் ஆரூடம் கூறுகின்றனர். ஆனால்,ஈராக்கிய அரசியலில் ஏற்பட்டு வரும் சூறாவளி மாற்றம் தொடர்பாக பகுப்பாய்வு செய்யும் அரசியல் விமர்சகர்கள்ISISயார்?என்பதனை விட, ISISஇன் எழுச்சியின் பின்புலத்தில் தொழிற்பட்ட ஈராக்கின் சமூக அரசியல் சுழற்சியிலேயே அதிகம் கவனம் செலுத்துவதனை நோக்கலாம்.
சில அரசியல் பகுப்பாய்வாகளர்களின் கருத்துப்படி,ஈராக்கின் சர்வதிகார ஆட்சியாளர் நூருத்தீன் மாலிகியின் தேசிய ஆதரவு வட்டம் தோய்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் அவரால் முழு ஈராக்கையும் கட்டிக் காக்க முடியாது என்ற நிலைப்பாடு பரவலாகிக் கொண்டும் வருகின்றன. மேலும்,மாலிகிக்கு எதிரான ஊழல் மற்றும் அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் பலதரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சகல அரசியல் அதிகாரங்களையும் மாலிகி தனது கரங்களுக்குள் மடக்கி வைத்திருக்கிறார் எனக் கூறி,அவருக்கு ஆதரவான பல ஷீயா கட்சிகளும்,அதன் ஆயுதப் பிரிவுகளும் அவரை விட்டும் தூரமாகின. அதேவேளை மாலிகிற்கு தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி அதீத தேவைப்பாடும் காணப்படுகின்றன. இந்தப் பின்புலத்தில் ஸூன்னிகளுடன் சுமுக நிலையை ஏற்படுத்திக் கொள்வதினூடாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் மனோநிலையிலும் மாலிகி இல்லை. எனவே,அதிஉச்ச அரசியல் நாடகமொன்றை மாலிகி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அதாவது,ஈராக்கின் ஸூன்னிகள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களிலிருந்து ஈராக்கிய இராணுவத்தை பின்வாங்கச் செய்வதினூடாக,ஸூன்னி ஜிஹாதியர்கள் ஈராக்கை கைப்பற்றப் போகின்றார்கள் என்ற மகுடத்தில்,தனக்கான மீளாதரவை திரட்டிக் கொள்வதற்கும்,தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்கும் மாலிகி சிந்திக்கிறார். இதுதான்ISISஅமைப்பினருக்கு முன்னால் ஈராக்கிய இராணுவம் தலைசாய்த்ததன் பின்புலம் என பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈராக்கின் சமீபத்திய திருப்பங்கள் தொடர்பான வேறு சில ஆய்வாளர்களின் கண்ணோட்டம் ஓரளவு சாத்தியமானதாகவும்,நிதர்சனமானதாகவும் அமைந்திருப்பதனைக் காணலாம். குறிப்பாக,அரபுலகின் பிரபல்யமான அரசியல் விமர்சகர் உஸ்தாத் யாசிர் ஸஆதிராவின் கருத்து இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அதாவது'ஈராக்கில்ISISஅமைப்பினரின் எழுச்சியானது,அரசியல் மாற்றத்தினை ஜனநாயக முறைமைகளில் சாதிக்கலாம் என்பதில் ஈராக்கிய ஸூன்னிக்கள் நம்பிக்கையிழந்துள்ளமையின் அடையாளமாகும்'என்கிறார்.
அதன் அர்த்தம் என்னவென்றால்,தொடர்ச்சியாக ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக ஈராக்கின் ஸூன்னீக்கள் திட்டமிடப்பட்ட அரசியல் ஓரங்கட்டலுக்கு உட்பட்டு வருகின்றனர். ஸுன்னிக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைச்சர்களை'தீவிரவாதிகள்'என்ற போர்வையில் கைது செய்வது மாலிகின் வழமை.
மறுபுறத்தில்,நியாயமான அரசியல் பங்கேற்பிற்காக ஆர்ப்பாட்டம் செய்து வந்த அன்பார் மாநில ஸூன்னி மக்களை தனது விமானப் படையைக் கொண்டு களைத்தார். அதனைத் தொடர்ந்து'தீவிரவாதிகள்'ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து ஈராக்கிய தேசத்திற்கு எதிராக தொழிற்படுகின்றனர் என மாலிகி அறிக்கை விட்டார். பின்னர்,விரக்கியடைந்த ஈராக்கி ஸூன்னி முஸ்லீம்கள் மாலிகியின் சர்வதிகார வலைப்பின்னலுக்கு தேர்தலிலேனும் ஒரு பாடத்தை கற்பிக்கலாம் என எண்ணிக் கொண்டனர். இறுதியில்,மாலிகியின் தோல்வி அறிவிக்கப்படும் தருணத்தில்,ஈரான் என்ற மேஜிக் பூதத்தின் அபூர்வ சக்தியின்;மறைமுக உதவியுடன் மாலிகி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வாறு,சர்வதிகாரி மாலிகியும்,அவரது ஆதரவுக் கூட்டான தெஹ்ரானும் ஸூன்னி மக்களுக்கு அரசியல் பொறிமுறைக்கூடாக தமது அபிப்பிராயத்தை முன்மொழிவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கவே இல்லை. இறுதியில்,ஆயுதமேந்தும் தீர்மானத்திற்கு ஈராக்கின் ஸூன்னிக்கள் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதனால்,ஜிஹாதியக் குழுக்களுக்கு பாரிய சமூக ஆதரவு கிடைத்தன. விளைவாக, ISISஅமைப்பினருடன் உள்ளுர் அமைப்புகளான ஈராக்கின் ஸூன்னி புரட்சிக் கட்சி,நக்ஷபந்தி தரீகா படைப்பிரிவு உட்பட,முன்னால் சதாம் ஹூசைனின் படையினர் இணைந்து ஈராக்கின் தேசியப் படைக்கெதிராக திரண்டனர். இதுவே, அமைப்பினரின் வெற்றியின் இரகசியம் என்கிறார் யாசிர் ஸஆதிரா. இங்குISISஅமைப்பினர் வெற்றி பெறுவது போல் காண்பிக்கப்பட்டாலும்,முழு ஸூன்னீக்களினதும் ஆதரவினாலேயே,அவ்வெற்றிகள் இடம்பெற்றுள்ளன எனலாம். மேலும்,சர்வதிகாரி மாலிகியின் ஒருதலைபட்சமான ஷீயா அரசியலுக்கு ஸூன்னிக்கள் கொடுத்த வேதனை மிக்க பரிசு என்றாலும் மிகையாகாது.
ஈராக்கின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்வுகூறல்கள் :
ஸூன்னி அரசியல்வாதிகளையும் உள்வாங்கும் அரசியல் சீர்த்திருத்தமே பிரச்சினைக்கான ஒரே தீர்வு. எனவே மிக அவசரமாக அது குறித்து சிந்திக்க வேண்டும் என சர்வதேச சமூகம் மிகக் கடுமையாக ஈராக்கிய அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளை தற்போதைய கள நிலவரங்களை மையப்படுத்தி சிந்திக்கும் போது,கீழ் வரும்3மாற்றங்கள் எதிர்கால ஈராக்கிய அரசியல் தளத்தில் ஏற்படாலம் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஷீயா சமூகத்திற்கு மத்தியில் தனக்கான அனுதாப அலையை ஏற்படுத்துவதினூடாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாலிகி முனையலாம். இதற்கான தெளிவான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, 'ஸூன்னித் தீவிரவாதிகளை ஒழிப்போம் ! வாருங்கள்'என மாலிகி ஷீயா சமூகத்தை இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும்,அரசியல் காரணங்களுக்காக மாலிகியை விட்டும் தூரமாகிய ஷீயாப் பிரிவினர்களும் அவரோடு மீண்டும் இணைவதற்கு தயாராகியுள்ளன. இவ்வாறான,ஆயுத ரீதியான தீர்வையே மாலிகி முழுமையாக நம்பினால்,நாட்டில் ஷீயா-ஸூன்னி மோதல் மேலும் மிகக் கடுமையாகலாம். இந்த ஆயுதரீதியான தீர்வை தெரிவு செய்யுமாறு மாலிகியை ஈரான் மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றமையும் நோக்கத்தக்கது.
வழமைக்கு மாற்றமாக அமெரிக்கா சிந்திக்கத் துவங்கியுள்ளது. அதாவது,மாலிகியின் தீவிர ஷீயாவாத அரசியல் நடத்தைகளே ஆயுதமோதல்களுக்குக் காரணம் என வெள்ளை மாளிகை அறிக்கை விட்டுள்ளது. அது மாத்திரமன்றி,எவ்வித இராணுவ உதவிகளையும் மாலிக்கு செய்யும் தயார் நிலையில் இல்லை என பென்டகனும் தெரிவித்து விட்டது. மறுபுறத்தில் கிட்டிய விரைவில் அரசியல் மாற்றம் குறித்து மாலிகி சிந்திக்கா விட்டால்,அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் என பல நாடுகள் அச்சுறுத்துகின்றன. இதனால்,சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக,ஸூன்னி முஸ்லீம்களுக்கும் அரசியல் செயற்பாட்டில் இடமமைத்துக் கொடுக்கும் நோக்கில் பெடரல் முறையொன்றை நோக்கி ஈராக்கின் அரசியல் முறைமை மாற்றப்படலாம்.
இவை இரண்டும் சாத்தியப்படாத போது,ஈராக்கை பிரிப்பதற்கான திட்டங்களையும் சர்வதேச சக்திகள் சிந்திக்கின்றன. ஏற்கனவே,குர்திஷ்தான் மாநிலம் சுயாட்சிப் பிரதேசமாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில்,நாட்டில் ஆயுதக் குழுக்களுக்கிடையிலான மோதல்களும்,ஷீயா-ஸூன்னி கொள்கை மோதல்களும் வலுப்பெறும் சந்தர்ப்பத்தில்,ஸூன்னீக்களுக்கு ஒரு தேசம்,குர்திஷ்களுக்கு ஒரு தேசம்,ஷீயாக்களுக்கு ஒருதேசம் என ஈராக்கின் நிலப்பிராந்தியம்3பகுதியாக பிரிக்கப்படலாம். இதனை ஏகாதிபத்திய சக்திகள் ஒரு தெரிவாக கொண்டிந்தாலும் கூட,ஈரான்,சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற பிராந்திய நாடுகள் விரும்பவில்லை. ஏனென்றால்,இவ்வாறு3தேசங்கள் புதிதாக அயல் நாடுகளின் பாதுகாப்பையும்,நில உறுதிப்பாட்டையும்,மற்றும் அந்நாடுகளின் புவி-அரசியல் நலன்களையும் நேரடியாகப் பாதிக்கும்.
இறுதியாக,மேற்குறித்த மூன்று எதிர்வு கூறல்களிலும் இரண்டாவதனை அல்லது அது சார்ந்த அரசியல் சீர்திருத்தமொன்றையே ஈராக்கின் ஸூன்னி முஸ்லீம்கள் விரும்புகின்றனர். அதேபோல் அரசியல் ரீதியான தீர்வை மாலிகி முற்படுத்தினால்,ஜிஹாதியக் குழுக்களின் எழுச்சியினை மிக இலகுவாக கட்டுப்படுத்திவிடலாம்.
ஸகிபவ்ஸ்(நளீமி)