நிலாவெளியில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள்: மக்கள் மத்தியில் பதற்றம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_213.html
நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்த போது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்ட போதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை, நிலாவெளி பிரதேசத்தில் உள்ள ஒன்பது வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் யன்னல்களை கழற்றிவிட்டு சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
தற்போது இவ்விரு சம்பவங்களால் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் கலந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், இப்பிரதேச குடியிருப்பாளருமான எம.ஏ.சபீக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டதையடுத்து அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிகாலை அதேபோன்று மற்றுமொரு சம்பவம் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளமையானது பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் இன்று சனிக்கிழமை 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் பரிபாலன சபைத்தலைவர் யே.எம்.ஆசீக் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் பள்ளிவாசல் பரிபாலன சபையினரும் கிராமத் தலைவர்களும் பங்குபற்றியதுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினருடனும் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் கூறினார்.