ராஜிதவை ஜனாதிபதி அடக்கவேண்டும்! இல்லையெனில் நாங்களே அடக்குவோம்!- பொதுபலசேனா
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_307.html
கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்னவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்டுப்படுத்தாவிடின் நாங்களே கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரத்தில், ராஜித சேனாரட்ன அளவுக்கு மீறி செயற்பட்டால் அவருக்கெதிராக தம்வசமுள்ள மேலும் பல ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற பொதுபலசேனாவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரால் இக்கருத்துகள் வெளியிடப்பட்டன.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எமது அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித குறித்து பல உண்மைகளை நாம் அம்பலப்படுத்தினோம்.
இது நடைபெற்று ஓரிரு தினங்களுக்குப் பின்னர் ராஜிதவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
ஆனால், அவர் நாம் அவருக்கெதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்காமல் தொடர்ந்தும், எமக்கெதிரான பொய்யான தகவல்களையே அங்கு வெளியிட்டுள்ளார்.
இவரின் நடத்தையானது எமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு மற்றும் சக்திமிக்க அமைப்பு என்பதால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
இதனால், நாம் நாட்டுப் பிரச்சினைகள் குறித்து மாத்திரமே அவரிடம் கேள்விகளை எழுப்பினோமே ஓழிய அவரின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து எவ்வித விளக்கமும் கோரவில்லை.
அதற்கு அவர் நிச்சயமாக விளக்கமளித்தே ஆகவேண்டும்.
அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் கலவரத்தின் போதும் எமக்கெதிராகவே ராஜித பல கருத்துக்களை முன்வைத்தார்.
தற்போது, நாம் நோர்வே மற்றும் ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடம் பணம் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முடிந்தால் இவற்றை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட சொல்லி அவரிடம் சவால் விடுக்கிறோம்.
ஆனால், ராஜித மீது நாம் முன்வைத்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமுள்ளது. எங்கு வேண்டுமானாலும் அதை வெளிப்படுத்த நாம் தயாராகவே உள்ளோம்.
ஆகவே, இவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடின் நாம் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், ராஜிதவின் செயற்பாடுகள் அளவுக்கும் மீறி காணப்படுமேயானால் அவருக்கெதிராக இன்னும் பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்த வேண்டி வரும் என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஜனாதிபதியும் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் செயற்பாடுகள் குறித்து பொதுபலசேனாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.