சட்டத்தரணிகள் சங்க தலைவரின் பாதுகாப்பு பொறுப்பை பொலிஸார் ஏற்றனர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_990.html
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை ஏற்பதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
உபுல் ஜயசூரியவிற்கு இரண்டு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் கூறியுள்ளார்.
உபுல் ஜயசூரிவின் வீடு, அலுவலகம், அவர் சென்று வரும் இடங்களில் அவரது பாதுகாப்பு குறித்து அறிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 27 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அனுர சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை அறியாத காரணத்தினால் தன்னை பின் தொடர்வது புலனாய்வாளர்களா அல்லது வேறு நபர்களா என்பதை அறிந்து கொள்வது சிக்கலானது என கூறியுள்ளார்.
இதனால் அந்த புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை தனக்கு தனிப்பட்ட ரீதியில் அறிமுகம் செய்து வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து கலந்துரையாடி பின்னர் அறிவிப்பதாக அனுர சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உபுல் ஜயசூரியவை பின் தொடர்ந்த இனந்தெரியாத நபர்கள் பற்றிய விசாரணை தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்த சேனாநாயக்க, சட்டத்தரணியை பின் தொடர்ந்தவர்களின் காட்சிகள் தெளிவாக பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களினால் தான் இந்த விசாரணையில் இருந்து ஒதுங்கி கொண்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.