எங்கு நீதி பெறுவது? ஏக்கத்தில் முஸ்லிம் சமுகம்

முடிவேயில்லாத தொடர் கதையாகின்றது இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தற்போது புதியதொரு வடிவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை அழித்து அதன் மூலம் பொருளாதார ரீதியாக முற்றாக முடக்க முற்படும் செயற்பாடுகளாகும்.

இதன் முதற் கட்டம் பெஷன் பக் கடைத் தொகுதி மீதான தாக்குதல் அடுத்ததாக, குருநாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம், அளுத்கமையைத் தொடர்ந்து இன்று மாவனல்லையில் இடம்பெற்றிருக்கின்றது. அத்தோடு பாணந்துறையில் இரு முஸ்லிம் சகோதரர்கள் இனவாதிகளால் நீ முஸ்லிமா? எனக் கேட்டவாறு கடுமையான முறையில் தாக்கப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட புதிய சம்பவமும் இக்கட்டுரை எழுதப்படும்போது கிடைத்ததையும் கவலையுடன் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கள் இன்று நாளுக்கு நாள் கேள்விக் குறியான விடயம் மட்டுமல்லாது ஒரு பயங்கரமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதையே தொடராக இடம்பெறும் விடயங்கள் காட்டி நிற்கின்றன. காரணம் ஹலாலுக்கு தடை விதிப்பதில் தொடங்கி இன்று கடைகளையே எரித்து நாசமாக்கி முஸ்லிம்களையும் நேரடியாகத் தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.


இலங்கைக்கு பணத்திற்கு மேல் பணமாகவும், பொருளுக்கு மேல் பொருளாகவும் மட்டுமல்லாது தேவையான அனைத்து உதவிகளையும் முஸ்லிம் நாடுகள் இதுவரைக்கும் எதுவித குறைகளுமின்றி பாரபட்சமற்ற வகையில் செய்து வருகின்றபோது இங்கு முஸ்லிம்களுக்கு நடப்பதெல்லாம் முற்றிலும் தலை கீழான விரும்பத்தகாத சம்பவங்களே.

ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை என்று சர்வதேசத்தக்கு காட்டும் கைங்கரியங்களில் ஆர்வமாக இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயங்கள் அதிகமாக இடம்பெறுகின்றதை அனைத்துச் சம்பவங்களும் படம் போட்டுக் காட்டுகின்றன. புதுப்புது விடிவில் திட்டமிடப்பட்டு வரும் செயற்பாடுகள் ஒரு இனத்தை குறி வைத்து அவ்வினத்தை ஏதாவது ஒரு வழியில் செயழிழக்கச் செய்து தமது சுய இலாபங்களை அடையும் முறைமையின் வெளிப்பாடுகள் இன்று அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றமையானது முழுச் சமுகங்களையும் நிம்மதியற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் மீது இன்று இனவாதிகள் மதத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற அடிப்படையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாது அவர்களின் பண பலத்தைப் பெற்று தமது தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் அமைதியற்ற நிலையை தோற்று விப்பதில் அதீத அக்கறையுடன் செயற்படுகின்றனர்.

இவ்வாறு செயற்படுபவர்களை இந்த அரசு கட்டுப்படுத்தாது பாலூட்டி வளர்ப்பதாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையைப் பொருத்த மட்டில் பர்மிய முஸ்லிம்களுக்கு இழைத்த முறைமையிலான பாணியில் பொதுபலசேனா செயற்பட முற்பட்டால் இந்த நாட்டின் வரலாறு வேறு விதமாக அமையலாம் என முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் பர்மாவுக்குச் சென்று சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என்று வர்ணிக்கப்படும் பர்மாவின் விராது தேரரைச் சந்தித்து இலங்கை முஸ்லிம்களை அழிக்கும் நுட்பத்தை கற்றுவிட்டு வந்த பிறகுதான் அதிகமான அழிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் சகல மக்களினதும் எதிரியாக வர்ணிக்கப்படும் தீவிரவாத பொதுபலசேனா முஸ்லிம்களை முற்றாக அழிக்கும் குறிக்கோள்களுடனேயே தமது தீவிரவாத நகர்வுகளை முனைப்புடன் மேற்கொண்டிருப்பதை தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலச் செயற்பாடுகளால் இன்று முஸ்லிம் சமூகம் தமது சுதந்திரத்தை தொலைத்த காலமாகவே கடந்த இரண்டரை வருட காலம் அமைந்துவிட்டது. தமக்கும் தமது சமயத்திற்கும் நேர்ந்து கொண்டிருக்கும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு சத வீதமேனும் முஸ்லிம் சமுகம் சார்பாக அரசாங்கம் திரும்பிப் பார்க்காமல் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை சுருட்டிக் கொள்வதைக் கண்டு வெறுப்படைந்த ஒரு சமுகமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர்.

இந்த நாட்டில் அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு இனத்திற்கு எதிராக விடாப்பிடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படிச் செயற்பாடுகளுக்கு எங்கு நீதி பெறுவது? என்பதே இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏக்கமாகும். பொறுமைக்கும் எல்லையுண்டு ஆனால் அந்தப் பொறுமையையே இழக்க வைக்கும் மிக மோசமான செயற்பாடுகளை கொண்ட விரும்பத்தகாத இனவாத மனிதர்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றமையினால் இவை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுப்பதுடன் மனித உரிமை மீறல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு அபாயத்திற்கான முன்னோக்கிய நகர்வாகவுமே நோக்கப்படுகின்றது.
இலங்கையில் இனவாதம் தலைதூக்கி தாண்டவமாடும் இத்தருவாயில் முஸ்லிம்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது முஸ்லிம்களின் சமய ரீதியான மன உணர்வுகளைத் தாக்கும் விடயமாகவே அமைந்துவிடுகின்றது. இதுவரையும் நிதானமாகவும் அமைதியாகவும் பொறுமையாகவுமே முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். காரணம் புனித இஸ்லாம் போதித்துள்ள நற்போதனைகளாகும் அதன் காரணமாகவே இன்று பாரியதொரு இரத்தக் கலரி ஏற்படாதிருக்கின்றது.

இந்த வகையில் மக்களின் பாதுகாப்புக்கு பொருத்தமானவர்கள் அக்கறை செலுத்தாது மாற்றாந்தாய் மனப்பான்மையில் கண்டும் காணாததுபோல் இருப்பதானது மனித உரிமை மீறலான விடயமாகவே நோக்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்று மாவனெல்லைச் சம்பவம் முஸ்லிம்களுக்கு பீதிக்குமேல் பீதியை ஏற்படுத்தும் சம்பவமாகவேயுள்ளது. காரணம் கடந்த வாரம் அளுத்கமையில் சண்டித்தனமான முறையில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டமையின் அடுத்த கட்டமாக மறைமுகமான முறையில் மாவனெல்லைக் கடை எரியூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்னும் எத்தனை வர்த்தக நிலையங்கள் இனவாதிகளின் கண்களில் துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெரியாமல் முஸ்லிம் சமுகம் இன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அப்பாவிகளாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். தற்போதைய அடாவடித் தனச் செயற்பாடுகளை அவதானிக்கும் போது முஸ்லிம் சமுகம் சர்வதேசத்திடம் இறுக்கமாக நியாயமும் நீதியும் வேண்டிச் செல்ல வேண்டியதொரு காலத்தின் பக்கம் சென்று கொண்டிருப்பதையே இனவாதிகளின் அடாவடித்தனங்களில் இருந்து அவதானிக்க முடிகின்றது.

இனவாதிகள் யார் எதையும் கதைக்கட்டும் நாம் முஸ்லிம்களை அழித்தே தீருவோம் என்ற கர்வத்ததுடன் தமது அடாவடித் தனமான காட்டுத்தர்பார் நடவடிக்கைகளை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். மாவனல்லையில் முஸ்லிம் அறிஞரின் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயரை சண்டித்தனமாக மாற்றியமை, தெவனகல கிராம மக்களை அகற்ற ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டமையின் பின்னணியில் இன்று மாவனல்ல முஸ்லிம் சகோதரரின் பல கோடி ரூபா பெறுமதியான ஹார்ட்வெயார் கடைத் தொகுதி எரியூட்டலாக இருக்கலாமென முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இவ்வாறு பகிரங்கமாக நடக்கும் சம்பவங்களுக்கு அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமான கதைகளை கூறாது நாட்டு நலனையாவது அடிப்படையாக வைத்து சட்டத்தை உயிரூட்டமுள்ளதாக ஆக்க வேண்டும். ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதனை கட்டுப்படுத்த அல்லது தடுக்காவிட்டால் அவர்கள் வன்முறைக்கு ஆதரவளிப்பவர்களாகவும் அவர்களின் தொழிலுக்கு துரோகமிழைக்கும் குழுவினராகவுமே சமுகத்தால் கணிக்கப்படுவர்.

எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம் சமுகம் இனி இல்லையென்ற பொறுமையின் அடித்தளத்திற்குச் சென்றுள்ளனர் இவ்வாறு பொறுமைக்கு கணிந்துள்ள ஒரு சமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் ஒரு நாள் சர்வதேசத்திற்கு தலைகுணிய வைக்கும் என்பதே இஸ்லாமியர்களின் ஆணித்தரமான நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாத பிடியில் சிக்கித் தவித்து தமிழ் மக்களைப் போல் ஊரை இழந்தனர், உடமையை இழந்தனர், இல்லறங்களை இழந்தனர், அங்கவீனர்களானர், பல பெண்கள் விதவைகளானர் ஏன் பலரின் உயிர்கள் கூட காவுகொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் விடை கிடைக்குமென்று காத்திருந்த வேலையில் பௌத்த இனவாதம் மீண்டும் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரிகளாக முஸ்லிம் சமுகத்தை அழிப்பதற்கான அடாவடித் தனங்களை ஆரம்பித்துவிட்டனர்.
சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மாறாக மக்களின் மன நலன்களையும், சமய விழுமியங்களையும் மதிக்காது புனிதமான மார்க்க சம்பிரதாயங்களை எதிர்க்கும் முரட்டுத்தனமான சமயப் போதகர்களாக வன்முறைக் கலாசாரத்தை மார்க்கக் கடமைகளாக கொண்டவர்களாகவே இனவாதிகள் துடிக்கின்றனர்.

இன்று நாட்டில் கொலை, களவு, மதுபாவனை, போதைவஸ்துப் பாவனை, கடத்தல்கள், சூதாட்டம் போன்ற வெறுக்கத்தக்க செயல்கள் மலிந்து காணப்படும் இக்காலத்தில் அவற்றை ஒழிக்க அல்லது அவற்றைத் தடை செய்ய முனையாது சமய விழுமியங்களில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் மானிடத்தை தீய செயல்கள் என்று அவர்கள் மீது முட்டி மோதும் மூடர்களை அடக்க ஒன்று திரல வேண்டிய தருணமே சமாதான விரும்பிகளுக்கு தற்போது வந்தள்ளது.

கடந்த கால வரலாற்றுத் தவறுகளை விடாது இனவாத அடக்கு முறைகளை தோற்றுவிக்க முட்படுபவர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டி ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் அமைதியாகவும், சமாதானமாகவும் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல வழி சமைக்கவேண்டிய தலையாய கடமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கே உள்ளது.

எனவே மேற்படி விடயத்தில் அதீத அக்கறை செலுத்தி இந்த நாட்டை ஒரு இறைமையுள்ள ஜனநாயக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இனவாதத்தை இந்த நாட்டில் இல்லாதொழித்து சுதந்திர இலங்கையை ஏற்படுத்துமாறு இனவாதத்தால் நசுக்கப்பட்ட அனைவுரும் வேண்டி நிற்கின்றனர்.

சத்தார் .எம். ஜாவித்

Related

Articles 4327302686503867883

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item