அளுத்கம விவகாரத்தின் ஆணிவேர்!
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_1970.html
உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க அமளிதுமளியான காலம் இது. ஒளிந்திருக்கும் அச்சுறுத்தல்களும் அச்ச உணர்வுகளும் மேகங்களாக உருவெடுத்து உண்மைக் காரணங்களை ஊதித் தள்ளிவிடக் கூடிய காலமிது. வதந்திகள் இலாவகமாகவும் வலு வேகமாகவும் பரவக் கூடிய நேரமிது. இது அடிப்படைவாதிகளுக்குரிய நேரம். ஆம்! எடுத்ததுக்கெல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய பகுத்தறிவற்றோருக்குரிய நேரமே இது.
வீதியின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் தற்போது அனைவருக்கும் பேச்சுப் பொருளாகியிருப்பது “அளுத்கம விவகாரம்”. நாட்டின் அமைதியின்மை, அச்சுறுத்தல், நாட்டின் தலைவிதியையே மாற்றக் கூடிய இவை தொடர்பான விவகாரங்கள் பற்றியே எங்கும் பேச்சு. அளுத்கம விவகாரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து மெல்லக் கசிந்து கொழும்பு மற்றும் பதுளை வரை சென்றது. “83-ஜூலை மறுபடியுமா?” என்கின்றனர் சிலர். உண்மை அதுவன்று. ஆனால் இப்போக்கு நீடித்தால் இறுதியில் அதுவே உண்மையாகிவிடவும் கூடும்.
முதல் கல்லை எறிந்தது யார் என்பது தொடர்பாக இன்னும் விவாதம் நீண்டுகொண்டே இருக்கின்றது. பலவாறான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இதனைத் திட்டவட்டமாக வரையறுப்பது கடினம். ஏனெனில் தர்ஹா நகரில் பொதுபல சேனாவின் பேரணிக்கு பாதுகாப்புக்கென மிகச் சொற்ப அளவான அதிரடிப் படையினரே கடமையிலிருந்தனர். அதிரடிப்படை வட்டாரம் கூறுவதாவது, ”அத்தருணத்தில் பாதுகாப்புக்கென நாம் சொற்ப அளவினரே இருந்தோம். எம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால்தானோ என்னவோ முஸ்லிம் தரப்புகள் நாம் வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கே சாதகமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். எமக்கு வழங்கப்பட்ட கட்டளை பேரணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகும். நாம் எமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளுக்கு அமையவே செயற்பட்டோம். எம்மை குறை கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.” எனினும் அது ஒரு அமைதிப் பேரணியாக இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டக்கூடிய பதாகைகளும் கூச்சல்களும் நிறைந்து அமளிதுமளியுமாகவே காணப்பட்டது. வெளிப்படையாகவே முஸ்லிம்களின் இனரீதியான உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையிலும் வன்முறைகளைத் தூண்டக்கூடிய வகையிலுமே பெற்றோல் குண்டுகளும் ஆயுதங்களும் கொண்ட இனவாதிகள் செயற்பட்டனர். முதற் கல் எறியப்பட்ட மறுகணமே அதிகாரிகொட, அளுத்கம மற்றும் தர்ஹா நகர் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர் அவர்களது சொத்துக்களும் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு இளவயது பிக்கு ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி பிக்குகள் தலைமையில் அளுத்கமவிலுள்ள முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான வியாபார நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். பின்பு பாதுகாப்புக் கமரா ஆதாரங்களின் (CCTV evidence) மூலம் இளவயது பிக்கு துன்புறுத்தப்படவில்லை என்றும் வியாபார நிலையத்தை நிர்மூலமாக்குவதற்கான அப்பட்டமான சதியே அதுவென தெள்ளத்தெளிவாக தெரிய வந்தது. ஆக, இவ்வாறான திட்டமிட்ட சதிகளின் திணிப்புக்களை ஒப்பீட்டு ரீதியில் அலசி ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில் தர்ஹா நகர் விவகாரத்தில் “முதற் கல் வீசியவர்கள் யார்?” என்பதைக் கணிப்பதற்கு ஒன்றும் கால அவகாசம் தேவைப்படாது. முஸ்லிம்களே முதலில் கற்களைக் கொண்டு தாக்கினர் எனும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசினார் என்று ஒற்றைச் சொல்லில் குற்றம் பிடித்து அஸாத் சாலி கைது செய்யப்படுகின்ற போது, முற்றுமுழுதாக இனரீதியான வெறுப்பை அனலாகக் கக்கி உமிழும் மதிப்பிற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்னும் சுதந்திரமாக நடமாடுவது சரியா?
பதற்றம் தணியாத நிலையில் அளுத்கமவில் பொதுபல சேனாவின் பேரணிக்கு தடை விதிக்காதது ஏன்?
தர்ஹா நகரின் கொந்தளிப்பின் போது அமைதியை நிலைநாட்டுமாறு பணிக்கப்படாமல், பேரணிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாத்திரம் பணிக்கப்பட்டது ஏன்?
வன்முறையில் ஈடுபட்ட இனவாதக் கும்பல் ஆயுதமும் கையுமாக சுதந்திரமாக நடமாடுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்பட்டது ஏன்? (அளுத்கமவில் மாத்திரமின்றி வேறு இடங்களிலும்)
வெள்ளிக்கிழமை அசம்பாவிதம் தொடர்பாக குறித்த பிக்கு தாக்குதலுக்குள்ளாகி உள்ளார் என்றோ அல்லது இல்லை என்றோ பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் பெற்ற எந்தவொரு மருத்துவச் சான்றிதழும் சமர்ப்பிக்கப்படவில்லை. குறித்த பிக்கு உண்மையாகவே தாக்கப்பட்டுள்ளார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமுமின்றி, தான்தோன்றித்தனமாக பௌத்த பிக்கு குறித்த முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்று ஊடகங்களில் பதிவு செய்தது ஏன்?
நாட்டில் ஏற்பட்ட இனவன்முறைக்கான நியாயத் தீர்ப்பு வழங்கப்பட்டு அதனால் இன்னும் பல வன்முறைகள் வெடிக்குமாயின் அவற்றிற்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமை பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்களையே சாரும். அவரின் கீழ்க்கண்ட பொறுப்பற்ற ஊடகப் பதிவே மூல காரணமாகும். “முச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று முஸ்லிம் நபர்களால் பிக்குவும் அவரது வாகனச் சாரதியும் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான பிக்கு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று பின் விகாரைக்குத் திரும்பும் வழியிலேயே இவ்வன்முறை வெடித்துள்ளது.”
பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் ஊகத்தினை உண்மைப்படுத்தி ஊடங்களில் பதிவு செய்த கூற்றானது, அவரின் செயற்றிறனற்ற பொறுப்பற்ற தன்மைக்குத் தக்கதொரு சான்றாகும். உண்மைக்குச் சிறிது செப்பனிட்டு செப்பும்போது அதன் பின்விளைவுகள் பாரதூரமாக அமைகின்றன. வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட வக்கிர ஆயுதங்கள் தேவையில்லை; வாய்ச்சொல்லே போதுமானது.
நடந்தவை அனைத்திற்கும் தனி ஒரு நபரே காரணம் என்று கூறுவது சாலச் சிறந்ததல்ல எனினும், ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றி, சுள்ளிகள் கொண்டு தூபமிட்டு, கையில் நீரை வைத்துக்கொண்டு அணைக்கத் தயங்கி அசமந்தப் போக்குடன் செயற்பட்ட ஒருவரை சமூகத்திற்கு இனங்காட்டாமல் இருப்பது குற்றமே. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். காலந்தாழ்த்தாது அவர் தனது பதவியை இராஜினாமா செய்வது சாலச் சிறந்தது.
நன்றி: The Nation ஆங்கில நாளிதழ்
-தமிழில்: ஹஸன் இக்பால் , யாழ்ப்பாணம்