இலங்கை முஸ்லிம்கள் கவனமாகவும், தூரநோக்குடனும் பதிலடி கொடுப்பது எப்படி..?

டாக்டர் றிபாய் யாழ்முஸ்லிம் வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் 23 ஜூலையில் பதிவு செய்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கமாக சில கூட்டல்குறைப்புடன் இதை தமிழ்வாசகர்ளுக்கு முன்வைக்கின்றேன். சற்று ஆராய்ந்துபார்க்கும்போது, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இனவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் எமக்கு தெரியப்படுத்துவது அத்தாக்குதல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும், இன்னும் சில ஒத்துழைப்பில்லாமலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்காக அமுல்படுத்தப்பட்டவைகளாகும். கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் கவனத்துடனும், கடமையுணர்வுடனும் பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். பாதிப்புக்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் வாலிபர்களை சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி நடக்குமாறு வேண்டிக்கொள்ளும் அறிஞர்களுக்கும், சமூகத் தலைவர்ளுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

இந்த பொதுபல சேனாவின் களகக்காரர்களும், சண்டிகளும் வேண்டுமென்றே முஸ்லிம்களை குறிவைத்து தாக்குகின்றார்கள் என்பதை மனித உணர்வுள்ள எவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அனேகமான சிங்களவர்களும் இக்கூற்றை ஒப்புக்கொள்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனபோதிலும் பயத்தின் காரணமாக இவ் வன்செயல்களுக்கு எதிராக யாரும் கூட்டாக வாய்திறப்பதில்லை. அதையும் மீறி, இந்த அநியாயக் காரர்களுக்கெதிராக யாராவது பேசினால் அவர்ளை 'சிங்களவர்களின் துரோகிகள்' என 'பௌத்த பல சேனா'வினர் சாயம்பூசி கேவலப்படுத்துகின்றனர், ஏன் தாக்கியுமுள்ளனர். 

அல்லாஹ்வின் அருளினாலும் உதவியினாலும் முஸ்லிம்களாகிய நாம் பின்விளைவுகளை சிந்தித்து கடப்பாட்டுடனும் பொறுமையுடனும் இவ்வாறான இனவெறித்தாக்குதல்களை முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆயினும் முஸ்லிம் தலைமைகளுடைய பதில்செயற்பாட்டுகளையும் அறிக்கைகளையும் கொண்டு எமது சில இளைஞர்கள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்கள். அண்மைக்காலமாக காடையர்களின் இனவாத தாக்குதல்களை சகித்துக்கொண்டும் பீதியுடன் எவ்வளவு காலத்திற்கு பொறுத்துப்போவது என வினவுகின்றனர். நமது ஓரிரு வாலிபர்கள் இவ்வாறான இனவெறியர்களிடமிருந்து அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்றும், ஏதாவது தற்காப்பு நடவடிக்கைகள் செய்யவேண்டும் என்றும் அதற்காக மார்க்க சட்ட வாசகங்களை (பத்வாக்களை) ஆதாரமாக சொல்லியும் வருகின்றனர். இது மனித அடிப்படைக் குணமாகும், ஆபத்தும், அநீதிகளும், நசுக்கலும் ஏற்படுமிடத்து எம்மைப் பாதுகாக்கும் கடமை எமக்கிருக்கின்றது. ஏன் விலங்குகளும் தனக்கு ஆபத்து நேரும்போது தன்னைத் தான் பாதுகாக்க முயற்சிக்கும். தன் உயிருக்கு ஆபத்து நேரும்போது அதிலிருந்து தற்காத்துக்கொள்ள உத்திகளை கையாளும் உரிமை எவருக்கும் உண்டு. இது அகிலமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும். உலகில் எங்கு வாழ்ந்தாலும், பெரும்பாண்மையோ – சிறுபாண்மையோ உயிராபத்து வருமிடத்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது மனிதனின் பிறவிக்குணமும் உரிமையாகும்.

பொய்யான கட்டுக்கதைகளின் காரணமாக அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக நமது வீடுகள் உடைக்கப்படும்போது, பெண்கள் பாதிக்கப்படும்பொழுது, குழந்தைகள் கொள்ளப்படும்;போது, வியாபார ஸ்தளங்கள் தீவைக்கப்படும்போது, பள்ளிகள் நாசமாக்கப்படும்போது...இவ்வாறான ஆபத்தான உணர்வுகள் கொந்தளிக்கும் சமயங்களில் நம்முடைய இயற்கைக் குணம் நம்மை நாமே தற்காத்துக்கொள்ளச் சொல்லும். இச்சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் இருப்பதென்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகும். 

ஆம், நிச்சயமாக இப்படியானதொரு சூழ்நிலையில்தான் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிகழ்வுகள் வரலாற்றுப்பதிவுகளில் எப்போதுமில்லாத ஒன்றாகும். என்றாலும், நாம் தாக்கப் பட்டிருக்கும் போதிலும் எதிர்த்தாக்குதல் அல்லது தற்காப்புத் தாக்குதல் செயல்களில் இறங்கி சிங்களர்களை தாக்கிவிடக்கூடாது. 

இதை நான்; ஏன் சொல்கின்றேன்? முதன்முதலில் ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்: அதாவது, இஸ்லாம் இக்கயவர்கள் செய்ததுபோல் வன்முறைகளைச் செய்வதற்கு எம்மை அனுமதிக்கவில்லை. அவர்கள் அப்பாவி முஸ்லிம்களை ஒரு காரணமுமில்லாமல் கொன்றுவிட்டார்கள். ஏதோ பௌத்த பிக்குவை ஒரு முஸ்லிம் தாக்கியதாகவும் அல்லது வேறு ஏதோ செயலுக்கு பழிக்குப்பழி தீர்த்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள். மறு கையில் அவர்களுடைய காரணத்தை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு சிறிய தர்க்கத்திற்காக அவர்கள் செய்தது மனிதவேட்டையாகும்;. இவ்வாறு செய்வதற்கு இஸ்லாம் நம்மை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. 

இரண்டாவதாக, எமக்கு தெளிவாக தெரிகின்றது பொதுபல சேனாவும் அவர்களைச் சார்ந்தவர்களும் பொய்யான  கட்டுக்கதைகளை உருவாக்கி, நடித்து வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தை தாக்குவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியுளார்கள். நரித்தனமான சூழ்ச்சிக்கார பொதுபல சேனாவுக்கு சிறுபாண்மை முஸ்லிம்களாகிய நாம் ஒருபோதும் இரையாகமாட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக சிங்களவர்களின் ஆதரவை திரட்டுவதற்காக எத்தனையோ கதைகளை எடுத்துவிட்டார்கள். (குர்ஆனில் பொய்க்குற்றச்சாட்டு, முஸ்லிம் உணவகங்களைப் பற்றி கட்டுக்கதை, சாப்பாட்டில் 3 முறை துப்பிவிட்டு கொடுக்கின்றோமாம், ஆண்மைக் குறைவு கலந்த டொபி விற்பனை, சிங்கள யுவதிகளை மணக்கும் திட்டம் என்று இன்னும் ஏதேதோ...சொன்னார்கள்.) ஈற்றில் என்ன பலன்? இதுவரையில் பலசேனா பொதுமக்களின் அங்கீகாரத்தையோ ஆதரவையோ பெற்றபாடில்லை. பாவம் சுயமாக சிந்திக்க தெரியாத பாட்டாளிகள் சிலரும் நாளாந்த குடிக்கும், சாப்பாட்டுக்கும் அலையும் தடியர்கள் சிலரும் அவர்களின் வலையில் விழுந்துள்ளனர்.

நாம் அறிந்தவரை 99 வீதமான சிங்கள நற்பிரஜைகள் இந்த பி.பி.எஸ் உடன் எவ்வித தொடர்புமில்லை. அம்மக்கள் இவர்களின் மதவாத சிந்தனைக்கு இன்னும் சாயவுமில்லை. நாம் முஸ்லிம்கள்! இவ்வினவாத பி.பி.எஸ் தடியர்கள் செய்ததுபோல் செய்வோமானால் எமக்கும் அவர்களுக்குமிடையில் என்ன வேறுபாடு? மேலும் நாம் அவர்களைப்போல் செயற்பட்டால் நம்மீது பரிதாபப்படும் நற்சிங்களவர்களின் கோபத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்து விடுவோம். அப்படி வன்முறையில் இறங்கினால், எம்மில் அனுதாபப்படும் சிங்கள மக்களின் ஆதரவை இழப்போம். மட்டுமல்லாமல், எமது சமூகத்தை பழி கொடுத்தவர்களாகுவோம். யதார்த்தமாக அப்பாவி நாயொன்றை கல்லெறிந்தால் பார்ப்பவர்கள் எறிந்தவனைத் திட்டுவார்கள். அதேநாய் ஒருத்தரைக் கடித்தால் எல்லோரும் சேர்ந்து அதற்கு கல்லடிப்பார்கள். ஆகவே எப்படியாவது நம்மை கடிநாயாக்கிவிடுவதே நரிப்புத்தி உள்ளவர்களின் வேலையாகும். இந்த உத்தியைத்தான் இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் என்னும் ஹிந்துத் தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எமது நாட்டில் உள்ள சிங்களவர்களுக்கு இந்த உத்தி தெரியாது. இதை தெரிந்தவர்கள் அறிமுகப்படுத்தியவர்கள் யூதர்கள்தான். அவர்கள்தான் மறுமைநாள் வரைக்கும் விசுவாசிகளின் விரோதிகள். இவர்கள் எதையும் யாரையும் வைத்து எவ்வளவு காலம் எடுத்தாவது செய்துவிடுவார்கள். ஆகவே, கண்டிப்பாக நாம் பின்விளைவுகளை எடைபோட்டு கவனமாக பதில் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும்.

மூன்றாவதும் முக்கியமானதுமாக, இப்போதைய ஆளும்கோஷ்டி ஒரு வகையான யுத்த நிலையை உருவாக்குவதற்கு கங்கனம் கட்டிக் காத்துக்கொணடிருக்கின்றது. ஏனெனில் அவர்களுடைய ஆட்சியை காலாகாலமாக தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு அது அவசியம். அவர்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது அடுத்த தேர்தலில் அவர்கள் வெற்றிபெற முடியாதென்று. ஏனென்றால் புலிகளுக்கெதிரான யுத்தம் முடிந்ததிலிருந்து கடந்த 10 வருடமாக அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சிக்கல். யுத்தத்திற்கு வாரி இறைத்த பணம் கடந்த 10 வருடத்தில் திரைசேறியில் மீதமாக்கப்டடிருக்க வேண்டும். வெளிநாட்டுக்கடன் குறைந்திருக்கு வேண்டும். எமது சில சோனகர்கள் அரசியல் வணிகத்திற்காக ஆளும்வர்க்கத்திற்கு வக்காளத்து வாங்க முன்வருவார்கள். பாதை அபிவிருத்தியென்பார்கள், விமான நிலையம் இரண்டாகியுள்ளது என்பார்கள். இவையெல்லாம் எடுத்த களவுகளுக்கு கணக்கு காட்ட செய்த புரஜெக்ட்களாகும் என்பதை சராசரி மனிதர்கள் விளங்கமாட்டார்கள். ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசானாயக்கவிடம் கேட்டால் புட்டுப்புட்டாக சொல்வார். பொருளாதாரக் கஷ்ட நிலைமைகளும் மனவருத்தங்களுக்கும் மத்தியில் நாளாந்தம் பொதுமக்களின் வாழ்க்கை கழிகின்றது. மக்கள் உழைக்கும் பணத்தில் நாளாந்த வாழ்க்கை தள்ளுவதே கஷ்டமாக இருக்கும் நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிலேயே தங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியுள்ளது. ஆக, இங்கு நான் மூன்றாவதாக சொல்லவந்தது என்னவென்றால் எமது நாடாளும் குடும்பத்திற்கு தங்களின் ஆட்சியை தக்கவைக்க ஒரு யுத்தம் தேவையாகின்றது. அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி வருகின்றார்கள் என்று நிரூபிக்க வன்னிப்பகுதியில் 3 பேரை சுட்டுக்கொன்றார்கள் இலங்கைப் படையினர்.

போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என்பது அரசுக்கு தெளிவாகிவிட்டது. இக்காரணத்திற்காக இலங்கைப்படைக்கு சண்டையிடுவதற்கு மாற்றுப் போராளிகள் தேவைப்படுகின்றது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களினாலும் தூண்டுதல்களினாலும் பொதுபல சேனாவும் அதன் அரசாங்கமும் முஸ்லிம் வாலிபர்கள் எங்கே ஆயுதம் எடுக்கின்றார்கள் என்று சந்தர்ப்பம் தேடுகின்றார்கள். அவர்களுக்கு தேவை நாம் ஆயுதம் எடுப்பதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு அல்-கய்தாவுடனும், தாலிபானுடனும் தொடர்பு இருக்கின்றது என்று முஸ்லிம் சமூகத்தை சாடமுடியும், சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக திரட்ட முடியும். எமக்கு எதிராக இன்னொரு உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பிக்க முடியும்.

அளுத்தகமவில் ஏற்பட்ட அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக நம் இனத்தவர்கள் போராடியது கற்களைக்கொண்டு மட்டும்தான். அவர்கள் நன்றாக பயிற்றப்பட்ட பாதுகாப்பு படையினரையும் தடியர்களையும் பொலிஸ் படையினரையும் கொண்டு மோதும்போது ஆகக் குறைந்த நம்மால் முடிந்தது கல்லடிகள்தானே! எவ்வளவு பிராயச்சித்தம் செய்தும் அவர்களால் எவ்வித ஆயுதங்களையும் முஸ்லிம்களிடமிருந்து காணமுடியவில்லை. 'முஸ்லிம்களிடம் எவ்வித ஆயுதமுமில்லை!' என்று உறத்த குரலில் சொல்வோம. இன்னும் ஒருபடி மேல் ஊகித்தால் - ஆண்டாண்டு காலமாக எம்மோடு பரஸ்பரம் கொண்டு வாழ்ந்துவரும் பெரும்பாண்மையினத்தவர்கள் வஞ்சகம் அறியா அப்பாவிகள். உள்நாட்டு இனங்களுக்கிடையில் சண்டையை மூட்டி இரு தரப்பிற்கும் ஆயுதம் விநியோகித்து அந்த இலாபத்தில் சுகம் அனுபவித்துக்கொண்டு சூடான செய்திகளில் குளிர்காய்ந்துகொண்டு இருக்கும் கொள்ளைக்கோஷ்டிக்கு இந்த பி.பி.எஸ் உம் அதை சார்ந்தவர்களும் விலைபோயிருக்கவும் கூடும்.

நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் 1948இலிருந்து தமிழர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒதுக்கப்ட்டார்கள், அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்ந்து வந்த அரசாங்கத்தினால் நிறைவு செய்யப்படவில்லை. இவைகளே அவர்களை ஆயுதம் ஏந்தவைத்தது. உரிமைகளை வெள்ளப் போராடினார்கள். இலங்கை அரசாங்கத்திற்கு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களை நசுக்கிப் பிழிந்தார்கள். இன்றைய மாவீரன் நாளை தமிழீழத்தின் விதை என்றார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீர மரணமடைந்தனர். ஆனபலன் என்ன??? மாவீரர் துயிலும் இல்லம் என்ற அவர்களின் மயான வளாகத்தின் அடையாளமே எதிர்கால சமூகத்திற்கு தெரியாதளவு அழித்து மண்ணோடு மண்ணாக உருமாற்றி விட்டார்கள். 

இதேபோன்று முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க எம்மில் குற்றம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அதை பி.பி.எஸ் ஐ வைத்து சாதிக்க முற்படுகின்றது இவ்வரசாங்கம். ஆகவே, இவ்வாறான சூழலில் நாம் மிக உண்ணிப்பாக அவதானத்துடன் செயற்படவேண்டும். இந்த குள்ள நரிக்கூட்டத்தின் இரகசிய சதித் திட்டத்தை அறிந்து செயற்படும் புத்திசாலிகளாக நாம் இருக்க வேண்டும். எமது வாலிபர்கள் மூலமாக எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றிராமல் முன்னடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக தௌகீத் ஜமாஅத் சகோதரர்களையும், ஏனைய மார்க்கப் அறிஞர்களையும், சமூக தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாவது:- தயவு செய்து இளைஞர்களை ஆக்ரோஷம் உண்டாக்கும் உரைகளையோ பேரணிகளையோ ஏற்பாடு செய்யாமல் அவர்களை சிந்தித்து நிதானமாக செயற்படுபவதற்கும் அந்நிய சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் விதத்திலும் தர்பிய்யாக்கள் வழங்குமாறு வேண்டுகின்றேன். இந்த பொதுபலசேனாவுக்கும் அதன் பின்னால் திரைமறைவில் இருக்கும் நாதாரிகளுக்கும் நாம் மேலும் உரத்து உரத்து சொல்லவேண்டியது – எமக்கும் பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை! நாம் இம்மண்ணில் பிறந்த பூர்வீக சமூகம் ஆகும்! நாங்கள் மற்ற இனத்தவர்களைப்போல் இலங்கையில் பிறந்தவர்கள். நாம் இங்குதான் வாழ்வோம்! இலங்கையில்தான் மரணிப்போம்! ஒருநாள் எம் நாடான இலங்கைத் தீவு நீரில் மூழ்கினால் அதனோடு சேர்ந்து நாமும் மூழ்குவோம். 

இன்னும் சொல்வதற்கு எதுவுமே இல்லை. அனைத்தையும் விலாவாரியாக சொல்லிவிட்டேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் நன்பர்கள் தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிருங்கள். நாம் சண்டையிட்டு கிட்டும் நிம்மதி ஒருபோதும் நிலைக்காது. அகிம்சைவழியில் கிடைப்பது நிரந்தரமானது. மீண்டும் ஒரு பார்மா நிகழ்வை இலங்கையிலும் நிகழ விட்டுவிடக் கூடாது. பொறுமையோடிருப்போம்! இறைவனிடம் பிராரத்திப்போம்! தலைமைகளை மதித்து பொறுப்புடன் வாழ்வோம்! நிராயுதமாக போராடுவோம்! தான்தோன்றிகளாக போராடமாட்டோம். அதற்காக நாம் கோழைகளல்ல, ஆனால் கட்டுக்கோப்பான சமூகம். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.

Related

Articles 4714214598513223346

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item