இனவாத தீயில் பற்றி எரியும் முஸ்லிம்களின் பொருளாதாரம்
http://newsweligama.blogspot.com/2014/06/blog-post_7149.html
கரகோஷம், கரகோஷம், கரகோஷம்
2014.06.15 களுத்துறை நகரில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் தன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றுகின்ற கரகோஷம் வானைப் பிளக்குகிறது. சோனியை அழிப்போம் கை வைத்துப்பார்.... இனவாதம் பச்சை பச்சையாய் கக்கப்படுகிறது.
இனவாத நஞ்சை நெஞ்சு நிறைய நிறப்பிக் கொண்டு வெறிப்பிடித்தவர்களாய் கூட்டத்தைவிட்டு வெளியேறிய காடையர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கூக்குரலிட்டுக் கொண்டு வீதியில் ஊர்வலமாக செல்கின்றனர்.
காடையன் ஒருவன் கல்லடிக்க ஆரம்பிக்கிறான் சொல்லி வைத்தாற்போல், கல்மாறி பொலிகிறது. பொல்லுகள் கத்தி வால்கள், பெற்றோல் குண்டுகள் தீ சுவாலைகள் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகளை வேட்டையாட ஆரம்பிக்கின்றனர்.
இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை நான்கு முஸ்லிம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு முஸ்லிம்களின் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
சம்பவத்தின் பின்ணனி
2014.06.12 ஆம் திகதி அளுத்கமை நகரில் வாகனத் தரிப்பிடமொன்றில், பௌத்த பிக்கு ஒருவரை ஏற்றிவந்த சாரதி ஒருவருக்கும் அங்கு நிருத்திருந்த ஆட்டோ ஓட்டும் முஸ்லிம்கள் ஒரு சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பூதாகரப்படுத்தப்படுகிறது.
முஸ்லிம்கள் தம்மைத் தாக்கியதாக குறித்த பௌத்தபிக்கு அளுத்கமை பொலிஸில் முறையிடுகிறார். இதனை அடுத்து பிரதேச முஸ்லிம்களின் உதவியுடன் குறித்த முஸ்லிம்கள் நால்வர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விலக்கமறியலில் வைக்கப்படுகின்றனர்.
நியாயப்படி இத்துடன் பிரச்சினை முடிவடைய வேண்டும். பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றத்தின்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். இது இரு சமூகங்களுக்கிடையேயான கைகலப்பு அவ்வளவுதான். அதற்கும் தண்டனை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்தாயிற்று.
ஆனால், சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்த இனவாதிகளுக்கு இச்சம்பவம் பழம் நழுவி பாலில் விழுந்த கதையானது.
குறித்த இச்சம்பவத்தைக் கண்டித்து 2014.06.15 ஞாயிற்றுக் கிழமையன்று, அளுத்கமை நகரில் மாபெரும் பிரசாரக் கூட்டம் மற்றும் பேரணிக்கான அழைப்பை விடுத்திருந்தது.
ஏற்கனவே பிரதேசத்தில் விரும்பத்தகாத நிகழ்வு இடம்பெற்றிருக்கும் சூட்டோடு இவ்வாறான கூட்டம் மற்றும் பேரணிகள் இனங்களுக்கிடையேயான முருகலுக்குக் காரணமாக அமையலாம் என்றும் இனவாதிகள் இதனைப் பயன்படுத்தி தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தலாம் என்றும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் அஞ்சின.
எனவே இக்கூட்டம் மற்றும் பேரணியை உடநடியாக நிறுத்துமாறு தேசிய ஷூறா சபை, சிவில் சமூகத் தலைமைகள் அரசியல் தலைமைகள் உலமாக்கள் என பல தரப்பினர் பாதுகாப்புத் தரப்பினர்கள் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். எழுத்து மூல கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அதுவெல்லாம் .விழலுக்கு இரைத்த நீராயிற்று.
எதிர் பார்த்தது போலவே குறித்த 15 ஆம் திகதி பொதுக் கூட்டம் நடைபெற்று அதுமுடிய காடையர்கள் கோஷமிட்டுக்கொண்டு பேரணியாக சென்றனர். திட்டமிட்ட படி கல்லடி பொல்லடி கடைகள் வீடுகள் எரிப்பு என முஸ்லிம்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்தது.
இப்படி ஒரு கலவரம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தது போலவே பொலிஸாரும், விஷேட திரடிப்படையினரும் அளுத்கமை நகரில் குவிக்கப்பட்டிருந்தன. எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்க்குமளவு கலச வாகனங்கள் கண்ணீர்ப் புகை வண்டிகள் கலக்கம் தடுக்கும் ஏற்பாடு என நகரம் யுத்த பூமியாய் காட்சி தந்தது.
ஆனால், காடையர்களின் வெறியாட்டத்துக்கு முன்னாள் அத்தனையும் தலை கூணி மௌனம் சாதித்துக் கொண்டிருந்தன. பொலிஸாரோ, அதிடிப் படையின காடையர்களின் தாக்குதலைத் தடுக்கவோ, அவர்களைக் கட்டுப்படுத்தவோ, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பயம் தேடி சென்ற தம்மையே பாதுகாப்பு படையினர் திருப்பித் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
காட்டுத் தீயாய் கலவரம் பரவியது களுத்துறை மாவட்டத்தின் வெலிபிடிய, அதிகாரி கொட மக கொட, தர்கா நகர், பல பிடிய, துந்துல போன்ற முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் காடையர்களின் இனவெறிக்கு இரையாகின.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பொலிஸார் 15 ஆம் திகதி இரவு தொடக்கம் ஊடரங்கு சட்டத்தை முல்படுத்தினர். ஆனாலும் காடையர்களின் வெறித்தனத்துக்கு ஊடறடங்கு சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஊடரங்கு சாட்ட நிலையிலேயே தாக்குதல்களைத் தொடர்ந்தனர். இதன்போதும் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் கைகூட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர்.
தற்பாதுகாப்புக் கருதி முஸ்லிம்கள் அருகிலுள்ள பாடசாலைகள் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்தனர். பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை உள்ளே வைத்து இளைஞர்கள் கண்காணாது வந்தனர். இவ்வாறு மக்கள் தஞ்சம் புகுந்திருந்த வெளிப்பிடிய பள்ளிவாசல்களுக்குள் கடந்த 16 ஆம் திகதி நுழைந்த காடையர்கள் அங்கு கூடியிருந்த முஸ்லிம்களை சலமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
பள்ளிவாசலையும் தாக்கினர். முஸ்லிம் இளைஞர்கள் தம்மால் முடியுமான வரை காடையர்களுடன் நிராயுதபாணியாகப் போராடினர். இதன்போது காடையர் தரப்பிலிருந்து திடீரேன துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது இத்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலும் ஊடரங்கு சட்டம் முலில் இருந்த போதே இடம்பெற்றது.
காடையர்களின் தாக்குதல் தொடர்ந்தன குறித்த 15, 16 ஆம் திகதிகளில் அளுத்கமை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 47 கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதில் 11 கடைகள் முற்றாக தீயிட்டு அழிக்கப்படன மேலும் பல கடைகள் கொள்ளையிடப்பட்டன. அளுத்கமை, தர்கா நகரில் பல வாகனங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இக்கட்டுரை எழுதப்படும் வரை முழுமையான சேத விபரம் வெளியிடப்படாத போதும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்திழப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
16 ஆம் திகதி திங்கட் கிழமை இக்கலவரம் அளுத்கமையிலிருந்து இருபது நிமிட பயணத் தூரத்தில் இருக்கும் வெலிப்பன்ன கிராமத்துக்கு நகர்ந்தது. அங்கிருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் அறிவித்தனர். ஆனாலும் அன்று இரவு வெளிப்பன்னயிலுள்ள பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பன்னை பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையிலிருந்த தமிழ் நபர் ஒருவர் காடையர்களினால் கொலை செய்யப்பட்டார்.
மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான இருபதற்கு மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளும் தாக்குதலுக்குள்ளாகின.
காடையர்களின் இக்காட்டுமிராண்டித் தாக்குதல்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவலாம் என்ற அச்ச நிலை தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிப்பது, நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாக தொண்டு நிருவனங்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை வெளிநாட்டிலிருக்கும் ஜனாதிபத குறித்த கலவரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கைவிட்டபோதும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் வரை அப்படியான எந்தவொரு நடவடிக்கையும் மேற்ககொள்ளப்படவில்லை.
நமது முஸ்லிம் அரரசியல்வாதிகளும் வழமை போன்றே அறிக்கைகளை விட்டுவிட்டு அடங்கிவிட்டனர்.
டுவிட்டர்களும் சமூக ஊடகங்களும் இணைய தளங்களும் 24 மணிநேர சேவையாக தம்பாட்டிற்கு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த சமூக ஷடகங்களை கட்டுப்படுத்தி வழிநடத்தும் சமூகம் தேவை ஒன்றினை இச்சம்பவம் பாடமாக விட்டுச் சென்றிருக்கிறது.
இப்போதைக்கு இந்த நெறுப்பு அனைக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் சொத்தழிவுகள் உத்தியோக பூர்வமாக கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்.
இச்சம்பவங்களுடன் தொடர்பானவர்களும் அதனைத் தூண்டிய இனவாதிகளும் உடநடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உடநடியாக நிவாரணம் வழங்கப்பட்டு அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த கசப்புணர்வு சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனைய முஸ்லிம் ஊர்களும் முன்னேற்பாடுகளுடனும் சமயோசிதக் கூறும் செயற்பட வேண்டும். இதனால்தான் அளுத்கமை கலவரம் விட்டுச் சென்றுள்ள செய்திகளாகும்
பஷீர் அலி