ஸியோனிஸ தீயில் பற்றி எரிகிறது காஸா
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_1451.html
வெறும் 360 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட காஸா (இலங்கையை விட பல மடங்கு சிறியது) இன்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த பிரதான விடயமாக மாறியுள்ளது. கடந்த திங்கட் கிழமை முதல் ஏழு நாட்களாகத் தொடரும் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல்களால் 166 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயப்பட்டுள்ளனர். காயப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்வதில் பெரும் இடர்பாட்டை காஸாவின் சுகாதார அமைச்சு எதிர்கொள்கின்றது.
மக்கள் எவ்வகையிலும் அறிவுறுத்தப்படாது அவர்களது வீடுகள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றன. ஷஹீதானவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அகதிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இஸ்ரேலிய கொடுங்கோலர்கள் காஸாவில் பொதுமக்களின் வீடுகளையே தமது பிரதான இலக்குகளாகக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இலக்கு வைக்கப்படும் இடங்களாக ஹமாஸ் படை வீரர்களின் வீடுகள், ஸராயா குத்ஸ் வீரர்களின் வீடுகள், பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டிடங்கள் என்பன காணப்படுகின்றன.
யுத்தத்தை கைவிடும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. இஸ்ரேலின் 30000 தரைப்படை வீரர்கள் தரைப்படைத் தாக்குதல்களுக்காக தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அதே சமயம் இஸ்ரேலில் இந்நிகழ்வுகள் சந்தோஷமாக பகிரப்படுவதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. பின்வரும் வகையில் உணர்வூட்டப்படுகின்றனர். அரபுக் குழந்தைகளை கொன்று விடுங்கள். அவ்வாறு செய்து விட்டால் அங்கு ஒரு புதிய பரம்பரை தோன்றாது. அவர்களது கொடூரத்தன்மையை பிரதிபலித்த பிரதான ஒரு விடயம் நேற்று இடம்பெற்றுள்ளது. அது என்னவெனில் காஸாவின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள ஓர் அங்கவீனர் நிலையம் இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதாகும். இத்தாக்குதல் காரணமாக இரு இளைஞர்கள் ஷஹீதாகி இருப்பதுடன் 3 பேர் கடுமையான காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி யுத்தத்தை நேரடியாக கண்டு கைதட்டி சிரிப்பதற்கான ஏற்பாடுகளும் இஸ்ரேலிய இராணுவத்தால் செய்து கொடுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடியவர்கள் இந்த அரசும் அதன் இராணுவமும் அதன் குடிமக்களும்.
சர்வதேச போர்ச் சட்டங்களின் பிரகாரம் யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படாத எந்த ஒரு பொதுமக்களின் வீடும் தாக்கப்படக் கூடாது. ஆனால் இஸ்ரேல் இராணுவம் இச்சட்டத்தை மதித்ததாகவே தெரியவில்லை. அவர்கள் இலக்கு வைக்கின்ற பிரதான இடங்களாக பொதுமக்களது வீடுகள் அல்லவா காணப்படுகின்றது.
1100 இலக்குகளை தாக்கியழித்திருப்பதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. அதே சமயம் 2000 டொன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 700 இற்கும் அதிகமான வீடுகள் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளன. 1000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் கடுமையான மருந்துத் தட்டுப்பாடும் நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்களும் சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளன.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்களை காஸாவிலிருந்து வெளியேறவும் முடியாத நிலையில் உள்ளனர். முற்றுகை இடப்பட்டுள்ள காஸாவில் மக்களை வெளியேறுவதற்கு ரபாஹ் எனப்படும் ஒரே ஒரு கடவையே காணப்படுகின்றது. இம்முறை எகிப்து ஆதரவை இஸ்லாத்தின் எதிரிகளுக்கே வழங்க உத்தேசித்திருப்பதன் காரமாக ரபாஹ் கடவை அடிக்கடி மூடப்படுகின்றது. வியாழக்கிழமை இக்கடவை திறக்கப்பட்டிருந்த போதும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. இக்கடவை மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனுக்கு நிவாரணப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு வருவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களும் வெளியேறுவதற்குக் காணப்படும் பிரதான கடவையே இக்கடவையாகும்.
ஹமாஸின் பதில் தாக்குதல்
யுத்த உடன்படிக்கைகள் மீறி இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது இஸ்ரேல். பதில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பாரியளவில் ஹமாஸ் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இதுவரை தாக்காத பல தளங்களை தாக்கி இஸ்ரேலின் பீதியைத் தூண்டிவிட்டுள்ளது ஹமாஸ். நேகவ் அணு ஆராய்ச்சி மையம், ரமோனோ இராணுவ விமான நிலையம், சாக்கடலை அண்டியுள்ள பிரதேசங்கள் போன்ற புதிய இலக்குகளில் ஹமாஸின் ஏவுகணைகள் விழுந்துள்ளன.
இது போன்ற தாக்குதல்களால் உயிராபத்துக்கள் பாரியளவில் ஏற்படாவிட்டாலும் இஸ்ரேல் இராணுவத்திற்கு குலைநடுக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. மேற்படி யுத்தம் எதிர் வரும் தினங்களில் அதிகரிப்பதற்கான முஸ்தீபுகளே செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஹமாஸ் துணைத் தலைவர் இஸ்மாஈல் ஹனிய்யாபின்வருமாறு கூறியிருந்தார் “எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை. எதிரிகள் தொடர்ச்சியாக எல்லாவிதமான சமாதான உடன்படிக்கைகளையும் மீறி வருகின்றனர். எங்களது மக்களுக்கெதிரான நீங்கள் செய்கின்ற போர்க் குற்றங்களை நிறுத்தி விடுங்கள். இதற்கான விலையை நீங்கள் அனுபவிக்க நேரிடும். நாம் எவ்வகையான இழப்புக்களை சந்தித்த போதும் வெற்றியில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் உள்ளோம். எமது தலைவர்களது உயிர்களை விட குழந்தைகள் மற்றும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களதும் பொதுமக்களதும் உயிர்கள் எந்த வகையிலும் பெறுமதி குறைந்ததல்ல” என்றும் கூறியிருந்தார்.
முஸ்லிம் புத்திஜீவிகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் நிலைப்பாடு
வெள்ளிக்கிழமை கூடிய முஸ்லிம் புத்திஜீவிகளுக்கான சர்வதேச ஒன்றியம் காஸா விவகாரம் தொடர்பாக பின்வரும் நான்கு தீர்மானங்களை முன்வைத்திருக்கின்றது.
இஸ்ரேலுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் மூன்றாவது இன்திபாழா போராட்டமாகும். பலஸ்தீனர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் ஸியோனிஸத்திற்கெதிராக உறுதியாக நிற்க வேண்டும்.
“வா குத்ஸாகு”, 'வா காஸாகு” எனும் பிரபல்யமான அழைப்பு விடுக்கப்பட்டிருத்தல். பலஸ்தீன் மக்களை பாதுகாப்பதற்காக முழு முஸ்லிம் சமூகமும் ஒன்று திரள வேண்டிய சந்தர்ப்பமே இது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர ஆட்சியாளர்களும் இஸ்லாமிய அமைப்புக்களும் மனிதாபிமான அமைப்புக்களும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக பலஸ்தீனுக்கும் காஸாவுக்கும் எதிராக நடாத்தப்படும் இத்தாக்குதலை தடுத்து நிறுத்த பொதுமக்களும் ஆட்சியாளர்களும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். பலஸ்தீன விவகாரம் ஒரு சில அமைப்புக்களினதோ பலஸ்தீன மக்களினதோ சொந்த நிலத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. முழு முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்ள வேண்டிய போராட்டமே இது. அங்குள்ள முஜாஹித்கள் இப்போராட்டத்தில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் காஸா யுத்தம் முழு உலகிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மனிதாபிமானம் கொண்ட அமைப்புக்களும் பொதுமக்களும் காஸாவை அதன் மக்களையும் பரிதாபக் கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்களுக்காக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துகின்றனர். அவர்களுக்காக நிதி உதவி திரட்டுகின்றனர். அவர்களுக்காக தம்மால் செய்ய முடிந்த குறைந்த உதவியாக இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றனர்.
அதே சமயம் அரபு நாடுகளில் கட்டார், துருக்கி என்பவற்றைத் தவிர வேறெந்த அரசும் இஸ்ரேலை நோக்கி கைநீட்ட அச்சப்பட்டு இருக்கின்றன. காஸாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வராத பட்சத்தில் துருக்கிய பிரதமார் ரஜப் தைய்யிப் அர்துகான் இஸ்ரேலுடன் அண்மை காலமாக எற்படுத்திக் கொண்ட சமாதான உடன்பாடு தொடராது என்று எச்சரித்துள்ளார்.
அதே சமயம் ஐ.நா வின் பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு என்பன தாமும் களத்தை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதற்காக அடிக்கடி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கருத்து வெளியிட்டு வருகின்றது.