'திவயின' பத்திரிகை தலாய் லாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_2156.html
திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அளுத்கம, பேருவளை போன்ற இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நாட்டிலுள்ள தேரவாத பௌத்தர்களுடைய முன்மாதிரி, வன்முறை அல்ல எனக் கூறியிருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்து இன்றைய ஞாயிறு சிங்களப் பத்திரிகையொன்றில் வெளியான சிறப்புக் கட்டுரையை தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
பௌத்தகள் என்ற வகையில் அன்பு, கருணை கொண்டிருத்தல் வேண்டும். அடுத்த மதத்தவர்களுக்கு எதிராக அன்பு, கருணை என்பவற்றை எப்போதும் வழங்கியது பௌத்தர்களேயன்றி வேறு மதத்தவர்கள் அல்லர். பௌத்தர்களின் கழுத்தில் கத்தியை வைக்கும் போதும் அன்பு, கருணையைக் காட்ட முடியாது. அவ்வாறன வேளையிலும் பொறுமையாக இருக்க வேண்டுமாக இருந்தால், பரிநிர்வாணம் அடைந்தவர்களால் மட்டுமே இது முடியும் என இந்த கட்டுரையின் இடையில் ஆசிரியர் கூற வரும் கருத்து, இக்கட்டுரையின் சூட்டை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றது……
திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அவர்கள் தனது 79 ஆவது பிறந்த தினத்தை கடந்த மாதம் கொண்டாடியது. 79 ஆவது பிறந்த தினத்துக்கு தலாய் லாமாவூக்கு வாழ்த்துத் தெரிவிக்கவென அவரது பிரபல சீடர்களில் ஒருவரான ஹொலிவூட் நடிகர் ரிஷட் கியரும் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தார்.
திடீரென தலாய் லாமாவை எமக்கு நினைவூக்கு வருவதற்கு அவரது 79 ஆவது பிறந்த நாள் காரணமாக அமையவில்லை. அது திபெத் பௌத்தர்களுக்கு முக்கிய நாளாக இருக்கலாம். அவர் தனது பிறந்த தினச் செய்தியில் இலங்கை மற்றும் பர்மா பௌத்தர்களுக்கு ஒரு விசேட அறிவித்தலை சொல்லியிருந்தார் என்பதனாலேயே எமக்கு அது முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையிலும் பர்மாவிலும் உள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் அந்நாடுகளிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களை தொந்தரவு கொடுப்பதை உடன் நிறுத்த வேண்டும் என திபெத் ஆன்மீக தலைவர் லடாக் நகரிலிருந்து தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்திருந்தார். மேலும், பௌத்தர்கள் வன்முறையில் ஈடுபட முன்னர் புத்தருடைய திருவூருவத்துக்கு வணக்கம் செலுத்த வேண்டும். கௌதம புத்தர் அன்பு, கருணையையே உபதேசம் செய்தார். உண்மையில் இந்த வன்முறைச் சம்பவங்களின் போது புத்தர் இருந்திருப்பாராக இருந்தால், அவர் முஸ்லிம்களை பௌத்தர்களின் வன்முறையிலிருந்து பாதுகாத்திருப்பார் என்பது எனது நம்பிக்கையாகும் என தலாய் லாமா அறிவிப்புச் செய்திருந்தார்.
புத்தர் ஒருபோதும் அடுத்த மதத்துதை நோவினை செய்யூம் விதத்தில் வன்முறையைப் பிரயோகிக்குமாறு உபதேசம் செய்யவில்லை. வரலாற்று நெடுகிலும் தாக்குதலுக்கு இலக்கானது பௌத்தர்களேயன்றி, மற்ற மதத்தவர்கள் அல்லர். மேலைத்தேய ஆக்கிரமிப்பாளர்கள் கீழைத்தேய நாடுகளுக்குள் ஒரு கையில் பைபிலையும் மறுகையில் ஆயுதத்தையும் ஏந்திக் கொண்டே பிரவேசித்தனர்.
முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களினால் மத்தியாசியாவிலும் இந்தியாவிலும் பௌத்தம் முழுமையாக துடைத்தெரியப்பட்டது. பக்தியார் கல்ஜியின் குதிரைப்படை இந்திய நாலந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த 5 ஆயிரம் பிக்குகளைக் கொலை செய்து அப்பல்கலைக்கழகத்தை தீ மூட்டி எரித்த சம்பவத்தை மீண்டும் நாம் ஞாபக மூட்டத் தேவையில்லை.
கடந்த 2600 வருட காலம் பழைமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட பௌத்தர்களின் கைகளில் இரத்தம் பட்டது கிடையாது. இருப்பினும், அடுத்த மதத்தவர்களைப் பற்றி விசேடமாக குறிப்பிடத் தேவையில்லை.
இது இவ்வாறிருக்கையில், தலாய் லாமா அவர்கள் திடீரேன தேரவாத பௌத்தர்களுக்க எதிராக குரல் எழுப்புவது எந்த நோக்கத்தில் என்பது புரியாதுள்ளது. பர்மாவிலும், இலங்கையிலும் நடைபெற்றது ஒரு சிறு சம்பவமேயாகும். பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில், அளுத்கம மற்றும் பேருவளை போன்ற இடங்களில் நடந்தது ஒரு சிறு சம்பவம் மட்டுமே.
நைஜீரியாவில் முஸ்லிம் அடிப்படைவாத போகோஹாரம் அமைப்பு அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களை கொலை செய்துள்ளது. ஆலயங்களில் ஆராதணைக்கு வருகை தந்தவர்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுடன் ஒப்பிடும்போது பர்மாவிலும் இலங்கையிலும் நடைபெற்றது ஒரு வன்முறையா?
தலாய் லாமா இதுவரையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஒரு கருத்துக் கூட தெரிவித்தது கிடையாது. பர்மா பிக்குகள் ஜிஹாத் அடிப்படைவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஊர்வலம் சென்றதை தலாய் லாமா கண்டதில்லை.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் 20 இற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகளை தீ மூட்டி, நூற்றுக் கணக்கான பௌத்த வீடுகளை நாஷமாக்கினர். இந்த சந்தர்ப்பத்தில் தலாய் லாமா எந்த வித அறிக்கையையூம் விடவில்லையே. அவருக்கு பௌத்தர்களுடைய கண்ணீர் தென்படுவதில்லையா? திபெத் பௌத்தர்களுக்கும் பிரச்சினையுள்ளது. தேரவாத பௌத்தர்களுக்கும் பிரச்சினையுள்ளது.
திபெத் ஆன்மீகத் தலைவர் பங்களாதேஷிலுள்ள பௌத்தர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒரு கருத்துக் கூட தெரிவிக்காமல் இருந்ததற்குக் காரணம் வஞ்சகத்தனமா? 2013 ஜூலை 07 ஆம் திகதி உலக பௌத்தர்களின் மகிமைக்குரிய புன்னிய பிரதேசமான புத்தகாய மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதல் இந்தியாவிலுள்ள முஜஹதீன் எனும் பெயரையுடைய முஸ்லிம் அடிப்படைவாத குழுவினால் ஆகும். இந்த அமைப்பினர் புத்தகாயாவிலுள்ள திபெத் விகாரையொன்றுக்கும் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்கள் குறித்து தலாய் லாமா எந்தவித கண்டன அறிக்கைகளையும் விடுவதற்கான முயற்சியை மேற்கொண்டதை நாம் காணவில்லை.
இவரின் இந்த நயவஞ்சகத் தனம் தேரவாத பௌத்தர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. திபெத் பௌத்தர்களுக்கு எதிராக அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதுவும் செய்யாதென தலாய் லாமா நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இந்த அடிப்படை வாதம் எங்களைப் பொருத்த வரையில் ஒரு பெரும் பிரச்சினையாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்போது கௌதம புத்தர் முஸ்லிம்களின் பக்கத்தில் இருப்பார் என தலாய் லாமா அவர்கள் அறிவித்தல் விடுத்துள்ளார். அவ்வாறென்றால், புத்தகயாவுக்கு குண்டுத் தாக்குதல் நடாத்தும் போது கௌதம புத்தர் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என தலாய் லாமா ஒன்றும் சொல்ல வில்லை.
கடந்த 2013 ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் மெரிலண்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட விரிவுரை ஒன்றின்போதும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்த வேண்டாம் என இலங்கை மற்றும் பர்மா பௌத்தர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேவேளை, கடந்த 2013 ஜூலை மாதம் புத்தகாயாவுக்கு தாக்குதல் மேற்கொண்டமை குறித்து திபெத் தலைவர் தலாய் லாமா எந்தவொரு இடத்திலும் எந்தவொரு அறிவித்தலையும் விடுத்தமை எமக்குக் காணமுடியாதுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் மத்தியில் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வரும் தலாய் லாமா, புத்தகயா தாக்குதலுக்கு எதிராக ஒரு கண்டனப் பிரேரணையை விடுக்காது தவிர்ந்து கொண்டது எதற்காக என்பது புரியாதுள்ளது? இவர் பாமியன் சிலைகளை உடைக்கும் போது அதனை எதிர்த்தாரா என்பதில் கூட எமக்கு சந்தேகம் நிலவூகின்றது. அவர் பௌத்த தலிபான்கள் பற்றி அச்சம் கொள்ளும் போது, உண்மையான தலிபான் மற்றும் அல்கெய்தா பற்றி எந்தவொரு கருத்துத் தெரிவித்தது கிடையாது.
பௌத்தகள் என்ற வகையில் அன்பு, கருணை கொண்டிருத்தல் வேண்டும். அடுத்த மதத்தவர்களுக்கு எதிராக அன்பு, கருணையை என்பவற்றை அப்போதும் வழங்கியது பௌத்தர்களேயன்றி வேறு மதத்தவர்கள் அல்லர். பௌத்தர்களின் கழுத்தில் கத்தியை வைக்கும் போதும் அன்பு, கருணையைக் காட்ட முடியாது. அவ்வாறன வேளையிலும் பொறுமையாக இருக்க வேண்டுமாக இருந்தால், பரிநிர்வாணம் அடைந்தவர்களால் மட்டுமே இது முடியும்.
இலங்கை மற்றும் பர்மா பௌத்தர்களுக்கு அன்பு, கருணை என்பவற்றை வெளிக்காட்டுமாறு உபதேசம் செய்த தலாய் லாமாவுக்கு அஷ்வின் விரது தேரர் மிக சிறந்த பதிலொன்றை வழங்கியுள்ளார். இதன் மொழிபெயர்ப்பு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கே தருகின்றேன்.
அனைவரும் பொறுமை, அன்பு என்பவற்றை பௌத்தர்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். உலகில் அதிகளவில் பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுப்பவர்கள் பௌத்தர்களா? இலங்கை, பர்மா, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போஜியா ஆகிய நாடுகளே உலகில் எஞ்சியுள்ள தேரவாத பௌத்த நாடுகளாகும்.
கடந்த காலங்களில் பௌத்தர்களின் பொறுமையை சாதகமாகப் பயன்படுத்திய அடிப்படைவாதிகள் பிக்குகளைக் கொலை செய்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து பௌத்தத்தை இல்லாதொழித்தனர்.
உலகில் அதிக காலம் பௌத்தத்தை பாதுகாத்த இலங்கை மற்றும் பர்மா பிக்குகள் எதிர்காலத்திலும் அதனைப் பாதுகாக்க தலைமைத்துவத்தை வழங்கியுள்ளனர். நீங்கள் தேரவாத பௌத்தத்துக்கு உபதேசம் செய்யும் முன்னர் மேலைத்தேயர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி சீனாவினுள் திபெத் மக்களை சிறப்பாக வாழவைப்பதற்கான ஒரு சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால்தான் மிகவும் நல்லது எனவும் அஷ்வின் விராது தேரர் தலாய் லாமாவுக்கு கடுமையான முறையில் பதிலளித்துள்ளார்.
நன்றி – திவயின ஞாயிறு
தமிழில் – எம்.எம். முஹிடீன்