பூதாகரமாக்கப்படும் “பயங்கரவாதம்”
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_7879.html
ஒரு தவறை மறைக்க மற்றுமொரு தவறைச் செய்வதும் ஒரு தவறை நியாயப்படுத்த மற்றுமொரு தவறைக் காரணமாகக் காட்டுவதும்… மக்களை அச்சுறுத்தும் தீயவர்களின் பழகிப்போன உளவியலாகும்.
இந்த உளவியல்தான் சர்வதேசங்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கைக் கொள்ளையடிக்க விரும்பிய அமெரிக்கா அந்தப் பகற் கொள்ளையை நியாயப்படுத்துவதற்காக இரசாயன ஆயுதம் என்ற மாயையை ஒரு பேயாக சித்திரித்துக் காட்டியது. இன்னும் அந்தப் பேயை அது பிடிக்கவில்லை. அது போன்று முஸ்லிம்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழிக்க விரும்பும் சக்திகள், இஸ்லாமியப் பயங்கரவாதம் நாட்டிற்குள் ஊடுருவுவதாகக் கதைவிடுகின்றனர். யார் அந்தப் பயங்கரவாதிகள்? அவர்களின் அமைப்பு எது? அவர்கள் இது வரை எத்தகைய பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்?என்ற வினாக்களுக்கு தெளிவான எந்தப் பதிலுமின்றி “இஸ்லாமியப் பயங்கரவாதம்” பற்றிப் பேசுவதானது தீய நோக்கங்களை இலக்காகக் கொண்டு சோடிக்கப்படுகின்ற வெறும் கதைகளாகும்.
தீய நோக்கம் கொண்டவர்களின் இந்த உளவியலை மாற்ற எம்மால் முடியாது போனாலும் பயங்கரவாதம் பற்றிய இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பார்வையைத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பயங்கரவாதம் பற்றிய எச்சரிக்கையுணர்வு அதுபற்றிப் போலியாக பேசிக் கொண்டிருப்பவர்களை விட முஸ்லிம்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பதை இதன் மூலம் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இஸ்லாம், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை அனைவரும் விளங்கும் வகையில் அற்புதமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அந்த விளக்கத்தின்படி இன்றைய உலகில் சில முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகத் தொழிற்படுவது உண்மையே. எனினும், அவர்கள் பெரிய பயங்கரவாதிகள் அல்லர். மாறாக பெரிய பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட சிறிய பயங்கரவாதிகள். இலங்கையிலும் அத்தகைய முஸ்லிம் பயங்கரவாதிகளை உருவாக்கவே ஒரு சில தீய சக்திகள் முயல்கின்றன. எனினும் முஸ்லிம் சமூகம் அதற்கு இடமளிக்காதிருக்க வேண்டும்.
இன்றைய உலகின் மிகப் பெரும் பயங்கரவாதிகள் மாபியாக்களாகவும் வல்லரசுகளாகவும் தொழிற்படுகிறார்கள். அவர்களுக்கும் முஸ்லிம் உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டிவிட்டு, பயங்கரவாதம் பற்றி இஸ்லாம் கூறும் விளக்கத்திருகிற்கு வருகின்றேன்.
இஸ்லாம் கூறும் பயங்கரவாதம் எது?
பயங்கரவாதத்தை அர்த்தப்படுத்தும் இரண்டு சொற்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. அந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்கள் பயங்கரவாதத்தை வரைவிலக்கணப்படுத்துகின்றன. அந்தப் பிரயோகங்களாவன..
01. பித்னா
02. பஸாத்
பித்னா: முதலில் “பித்னா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள சில அல்குர்ஆன் வசனங்களில் உள்ளடக்கத்தைப் பார்ப்போம். 2:127வது வசனம் பித்னா பற்றிய ஒரு கண்ணோட்டத்தையே வழங்குகிறது. “பித்னா”என்பது தற்செயலாக அல்லது சந்தர்ப்பவசமாக நிகழும் ஒரு கொலையை விட கொடியது என்று கூறும் அந்த வசனம், மதவெறி நன்னோக்கங்களுக்குத் தடையாக இருத்தல். இவற்றோடு உடமைகளை அபகரித்துக் கொண்டு அவற்றின் சொந்தக்காரர்களை அவர்களது வாழ்விடயங்களிலிருந்து துரத்துதல். மதம் மாற்றுவதற்காக யுத்தம் செய்தல் போன்ற அக்கிரமங்களை “பித்னா” எனக் குறிப்பிடுகிறது.
விவகாரங்களைத் தலைகீழாகப் புரட்டி இட்டுக்கட்டுவதையும் கோள் மூட்டி பகை வளர்த்துப் பிளவை ஏற்படுத்துவதையும் “பித்னா” என்று 9-47-48 வசனஙகள் கூறுகின்றன.
பீதியை உருவாக்கி அழிவு மற்றும் நாசகார வேலைகளில் ஈடுபாடுவதை “பித்னா” என்று கூறுகின்றது. 33:14 வது வசனம்.
இது தவிர அல்லாஹ் மனிதனை பல்வேறு வழிகளில் சோதனை செய்வது பற்றிக் கூறுவதற்கும் அல்குர்ஆன் “பதன்னா” என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. இந்த சொல் “பித்னா” என்ற சொல்லிருந்து பிறந்தாலும் கூட “குழப்பம் விளைவித்தல்” என்ற கருத்தைத் தரமாட்டாது. மாறாக சோதனை என்ற கருத்தையே அது தருகின்றது. உதாரணங்களை பின்வரும் வசனங்களில் நீங்கள் பார்க்கலாம். 6:53, 29:3, 38:34, 44:17
“பித்னா” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களையும் அவற்றின் பொருள்களையும் ஆராய்ந்து சுருக்கினால் பின்வரும் விளக்கத்தைப் பெறக் கூடியதாக இருக்கும்.
“சட்டம் மற்றும் ஒழுக்கவியல் மாண்புகள் என்பவற்றைப் புறக்கணித்த நிலையில், நல்ல நோக்கங்களை அடைய விடாது தடுத்து, நட்டங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி, மனித உள்ளங்களைத் துன்புறச் செய்தல்.”
இந்த விளக்கத்தில் மூன்று கூறுகள் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
01. சட்டம் மற்றும் ஒழுக்கவியல் மாண்புகளைப் புறக்கணித்தல்
02. நன்நோக்கங்களை அடையவிடாமல் தடுப்பதோடு நட்டங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தல்.
03. மனித உள்ளங்களைத் துன்பத்தில் ஆழ்த்துதல்.
“பித்னா” என்ற பிரயோகத்தின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் பயங்கரவாதம் இந்த வகையில் பின்வருவன போன்ற நாசகார வேலைகளைக் குறிப்பதாக இருக்கும்.
திட்டுதல், வசைபாடுதல், இட்டுக் கட்டுதல், வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்புதல், இனவெறியையும் பொறாமை உணர்வுகளையும் பரவலாக்குதல், மதங்களைக் கேலி செய்தல், மத ஸ்தாபகர்களையும் மதங்களையும் கொச்சைப்படுத்துதல், வரலாறுகளைத் திரிபுபடுத்துதல், ஒரு இனத்தின் மீதான தப்பபிப்பிராயங்களை வளர்த்தல், தாக்குதல் மேற்கொள்ளல், கொள்ளையடித்தல், அபகரித்தல், தீக்கிரையாக்குதல், குண்டுவைத்தல், கிரணைட் வீசுதல், துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ளுதல், தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுதல், பொதுச் சொத்துக்களையும் உடமைகளையும் அழித்தல், ஈவிரக்கமின்றி கூரிய ஆயுதங்களால் மனிதர்களை வெட்டிக் கொலை செய்தல்அல்லது துப்பாக்கி ரவைகளால் சுட்டுத் தள்ளுதல்.
ஆகிய இவற்றோடு இவற்றையொத்த அக்கிரமங்களையும் அல்குர்ஆன் “பித்னா” எனக் குறிப்பிடுகின்றத.
அதே போன்று “பஸாத்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள சில வசனங்களையும் அவற்றின் உள்ளடக்கங்களையும் அடுத்து நோக்குவோம்.
2:205 வது வசனம் வினை நிலங்களையும் கால் நடைகளையும் அழிப்பதனை “பஸாத்” என்று குறிப்பிடுகிறது.
7:56 வது வசனம் ஒழுங்கும் அமைதியும் நிலவும் ஒரு சூழலில் குழப்பம் விளைவிப்பதனை “பஸாத்” என்று கூறுகின்றது.
7:85 வது வசனம் அளவு நிலுவைகளில் மோசடி செய்வதை “பஸாத்” எனக் குறிப்பிட்டு அந்த ஒழுங்கீனத்தையும் கண்டிக்கின்றது.
இரத்த உறவுகளிடையே பிளவை உருவாக்கி குழப்பம் விளைவிப்பதாக “பஸாத்” எனக் குறிப்பிடுகிறது. 47:22 வது வசனம்
பஸாத் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் இது போன்ற வசனங்களையும் அவற்றின் கருத்துக்களையும் தொகுத்தால் அதன் சுருக்கத்தைப் பின்வருமாறு கூறலாம்.
இயல்பு நிலை, ஒழுங்கு, கட்டுப்பாடு என்பன சீர்குழைந்து அசாதாரண நிலைமைகள் தோன்றுததல். இவற்றின் மூலம் மனித இயல்புகளும் நெறி பிறழ்ந்து மனிதர்கள் செய்ய விரும்பாத செயல்களை நாணமின்றியும் சஞ்சலமின்றியும் பகிரங்கமாகச் செய்யும் ஒரு சூழல் உருவாகுதல்.
இந்த விளக்கத்தின்படி பின்வரும் நடவடிக்கைகள், நடத்தைக் கோலங்கள் என்பன “பஸாத்” எனும் ஒழுங்கீனத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
ஆக்கிரமிப்பு, ஆயுதக் கலாசாரம், கொலை, கொள்ளைகள் அதிகரித்தல், பொருளாதாரத் தடை பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சினை, பாலியல் வன்முறைகள் பெருகுதல், நிர்வாக சீர்கேடுகள், இலஞ்சம், ஊழல், மோசடி…
இவற்றோடு இயற்கையின் இயல்பு நிலையையும் பாதிப்படையச் செய்தல், சூழலையும் இயற்கை வளங்களையும் மாசடையச் செய்தல், காடழித்தல், தீமை பயக்கும் இரசாயனங்கள், கழிவுகள் என்பன நிலத்தோடும்நிலத்தடி நீரோடும் கலத்தல், இவற்றால்ஏற்படும்காலநிலை மாற்றம், வரட்சி, அதிக மழை, வெள்ளப் பெருக்கு, கடும் குளிர், பனிப்பாறைகள் கரைதல், பூமியின் வெப்பம் அதிகரித்தல்.
மனித வாழ்க்கையிலும் இயற்கையிலும் ஏற்படும் இதுபோன்ற இயல்பு நிலை பாதிப்புகளையே அல்குர்ஆன் “பஸாத்” எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய “பஸாத்” களால் மனித இயல்பு நிலையும் பாதிப்புகளுக்குள்ளாகின்றது.
அச்சம், அதிர்ச்சி, குரூர புத்தி, வன்மம், கட்டுப்படுத்த முடியாத ஆவேசம், வெறுப்பு, விரக்தி போன்ற உளவியல் சீர்கேடுகள் மனிதனது இயல்பு நிலையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உதாரணங்களாகும்.
இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியுள்ள ஒரு குர்ஆனியப் பிரயோகம்தான் “பஸாத்” எனப்படுகிறது.
இத்தகைய “பஸாத்” களை உருவாக்குவோரும் இஸ்லாத்தின் பார்வையில் பயங்கரவாதிகளே. இஸ்லாம் இத்தகைய “பஸாத்”கள், “பித்னா”க்கள் இல்லாத ஒரு உலகம் உருவாக வேண்டும் என்பதையே விரும்புகிறது.
கல்நெஞ்சம் படைத்த… கொடிய சுபாவங்களையுடைய… மனிதர்களால் மட்டுமே இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முடிகின்றது. இத்தகையவர்கள் ஒரு இனத்தினது மட்டுமல்ல, முழு மனித சமூகத்தினதும் எதிரிகளாவர். பயங்கரவாதிகள் என்ற சொல்லைவிட செறிவான இன்னுமொறு சொல் இருந்தால் அது இவர்களுக்கு பொருந்தும். இத்தகையவர்களின் தீங்குகளிலிருந்து மனித சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நீதியை நிலைநாட்டும் ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்திருப்பதாக அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான். “பித்னா முற்றிலும் (உலகை விட்டு) அகலும் வரை இத்தகையவர்களோடு போரிடுங்கள்” என்று அந்த ஆட்சியாளர்களை நோக்கி அல்குர்ஆன் அறை கூவல் விடுக்கின்றது.
ஒரு அரசாங்கத்தின் இராணுவமும் நீதித்துறையும் இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. நீதித்துறை இத்தகையவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நீதித்துறையால் முடியாதளவு இந்த அக்கிரமக்காரர்களது அல்லது பயங்கரவாதிகளது கொட்டம் அத்துமீறியதாக இருந்தால், இராணுவம் அவர்களோடு போர் புரிந்து அவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும் LTTE ஐ இலங்கை இராணுவம் போர் புரிந்து தோற்கடித்தது போல.
இந்த வகையில் எதிரிகள் யார்? என வரையறுத்து அவர்களுக்கெதிராக யுத்தமொன்றைப் பிரகடனம் செய்யாமல் அல்லது பயங்கரவாதிகள் யார்?என்பதைப் பட்டியலிட்டு அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான பிடிவிறாந்துகள் இல்லாமல் பயங்கரவாதம் என்ற பெயரால் தடியெடுத்தவர்கள் அனைவரும் வேட்டையாட முனைந்தால் அவர்களே உண்மையான பயங்கரவாதிகளாவர். அவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம்எந்த இனத்தை மதத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். மனித இனத்தின் விரோதிகளான இவர்கள் இஸ்லாமியப் பயங்கரவாதிகள்கிறிஸ்தவப் பயங்கரவாதிகள் பௌத்த பயங்கரவாதிகள் என வேறுபடுத்தப்பட வேண்டியவாகள் அல்லர். அவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டியவர்கள். எனினும் துரதிஷ்டம் பயங்கரவாதத்தோடு இஸ்லாம் மற்றும் முஸ்லிம் என்ற பெயர்கள் மட்டுமே இணைத்து பேசப்படுகின்றன.
சொத்துக்களைத் தீக்கிரையாக்கி, சாம்பர் மேடுகளையும் மனிதர்களைப் படுகொலை செய்து இரத்த ஆறுகளையும் உருவாக்க விரும்பும் உலகப் பயங்கரவாதிகளே! முதலில் நீங்கள் சொல்லும் பயங்கரவாதத்தை வரைவிலக்கணப்படுத்துங்கள்.
பின்னர் அந்த வரைவிலக்கணத்திற்கேற்ப பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கெதிராக ஆதாரபூர்வமான ஆவணங்களை சமர்ப்பித்து வழக்குத் தொடருங்கள். வழக்கு மன்றத்தில் அவர்களை நிறுத்தி பகிரங்கமாக விசாரித்து தண்டனை கொடுங்கள்.
இதுதான் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கான சீரிய வழிமுறையாகும். இவற்றை உங்களால் செய்ய முடியாது போனால் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி வேறு ஏதோ இலாபம் தேட முயற்சிக்கின்றீர்கள் அல்லது இல்லாத பயங்கரவாதத்தை இருப்பதாக நியாயப்படுத்தி நீங்கள் ஒரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறீர்கள் என்பதைத்த தவிர உங்களது நடவடிக்கைகளுக்கு வேறு நியாயங்கள் கூறுவதற்கில்லை.
இலங்கை முஸ்லீம்கள்:
உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தின் போதனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் எதிராக இலங்கை மண்ணில் “பித்னா” எனும் குழப்பத்தையோ “பஸாத்” எனும் சீர்குலைவுகளையோ திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தி போஷித்து வளர்க்கவில்லை. தங்களது சொந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல் மற்றும் மார்க்கத்தில் தமக்கிடையே இருக்கின்ற சில கருத்து வேறுபாடுகள் போன்றவற்றில் அவர்களுக்கு மத்தியில் சிற்சில பிரச்சினைகள் இருப்பது உண்மையானாலும் இலங்கை மண்ணுக்கும் இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களுக்குமெதிராக அவர்கள் நிறுவனரீதியாகவோ திட்டமிட்டோ எத்தகைய நட்டத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
01. நாட்டின் சட்டத்திற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து அவர்கள் தனிநாடு கோரவில்லை.
02. நாட்டின் நன்னோக்கங்களுக்குத் தடையாக செயற்பட்டு நாட்டின் வளங்களுக்கோ அபிவிருத்திக்கோ அல்லது உயிர் உடமைகளுக்கோ எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை.
03. மேலே கூறப்பட்ட ஒவ்வாத நடவடிக்கைகள் மூலம் மக்களை ஆறாத்துயரில் ஆழ்த்தியதுமில்லை.
முஸ்லிம்களின் நடைமுறைகள் சிலவற்றால் முஸ்லிமல்லாதவர்களுக்கு சில அசௌகரியங்கள் இருப்பதாகவோ அல்லது தனிப்பட்டவகையில் சில முஸ்லிம்கள் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவே குற்றம் சாட்டலாம். இது எல்லா சமூகங்களிலும் காணப்படுகின்ற ஒரு யாதார்த்தமாகும். அவற்றிற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்து அதனைப் பயங்கரவாதம் என அர்த்தப்படுத்தி ஒரு சமூகத்தையே அழிக்க முயல்வதுதான் உண்மையில் பயங்கரவாதம் ஆகும். அதற்கு இடம் தராமல் அசௌகரியங்களை சௌகரியங்களாக மாற்றிக் கொள்வது பற்றி இரு சாராரும் இணைந்து சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
இலங்கை மண்ணிலிருந்து அனைத்து பித்னாக்கள், பஸாதுகளையும் அகற்றி உலகம் போற்றும் ஒரு தேசமாக இந்த மண்ணை மாற்ற வேண்டும் என்பதுதான் எமது விருப்பம். அது விடயத்தில் அனைத்து சமூகங்களுடன் கைகோர்த்து செயல்படுவதற்கு தயாராக இருக்கும் ஒரு சமூகமன்றி, ஏனையவர்களுடன் பகை வளர்த்துப் போர் புரிய விரும்புகின்ற சமூகமல்ல இலங்கை முஸ்லிம்கள்.
இனங்களுங்கிடையிலான நல்லுறவு இந்த நாட்டில் வெளிப்படையானது. அதனைக் கொச்சைப்படுத்தி சீரழிக்க முனையும் சக்திகள்தான் இரகசியமானவை. அந்த விதிவிலக்கான சக்திகளையும் நேரிய வழிக்கு இட்டுச் செல்வதன் மூலமே நாடு நன்மையடையும். மாறாக அந்த சக்திகளை பாலூட்டி வளர்க்கும் நிலை இருக்குமானால் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் ஒரு குறுகிய காலம் வரை இலாபமீட்டிக் கொண்டிருப்பார்கள். நாடு பல வழிகளிலும் வீழ்ச்சியை நோக்கியே செல்லும். இது மனித வாழ்வை இயக்கும் மாறாத நியதிகளில் ஒன்று என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
அழிவுகள் மேலும் அழிவுகளை நோக்கியே இட்டுச் செல்லும் அழிவுகளால் ஆக்கம் நடப்பதில்லை என்பதே அந்த மாறாத வாழ்க்கை நியதி.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்