நடுக்கடலில் கனவு காண விடுங்கள்! - தமிழில்: கலைமகன் பைரூஸ்
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_13.html
“இம்முறை மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் 51% வாக்குகளை சிங்களவர்களிடமிருந்து மாத்திரமே எதிர்பார்க்க வேண்டும்…”
இந்நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடெங்கிலும் இவ்வாறான கதைகளையே கூறித் திரிகின்றனர்.
“ஏன் அப்படிச் சொல்கிறார்கள்…?”
“ஏன் என்பதற்கான காரணம் விளங்கவில்லையா? இம்முறை ஒரு தமிழனினதும், முஸ்லிமினதும் வாக்கு மகிந்தவுக்கு கிடைப்பதில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. இதுவரை வடக்கு - கிழக்கிற்கு சரியான அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை. இதனால் தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் மகிந்தவுடன் பெரும் கோபத்துடன் இருக்கின்றார்கள். தற்போது இந்தியாவிலுள்ள மோடியின் அரசாங்கமும் தமிழர்களின் விடயம் தொடர்பில் தலையிட்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பாற் சென்று ஒரு தீர்வை வழங்குமாறு மகிந்தவை வேண்டிநிற்கின்றது. என்றாலும் மகிந்த இன்னும் போலிக் கற்களைத் தேடுவதிலேயே காலம் கழிக்கின்றார்…”
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறுதான் சொன்னார்.
“அவ்வாறாயின் முஸ்லிம்களின் வாக்குகள்…?”
“ஐயோ.. இது கூடத் தெரியவில்லையா? பேருவலை - அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் முஸ்லிம்களில் எவரேனும் ஒருவர் மகிந்தருக்கு வாக்களிப்பாரா? இம்முறை ஒரு இஸ்லாமியனும் மகிந்தருக்கு வாக்களிக்க மாட்டார். அதனால் இம்முறை மகிந்தர் முழுமையாக சிங்களவர்களின் வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிவரும். அதுவும் இரண்டாகப் பிரிந்து செல்லும் போது மகிந்தரின் கதி அதோகதிதான்…”
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதற்காக சொன்ன வார்த்தைகள் அவை.
“அப்படியாயின் பொதுபல சேனாவின் பின்னணியின் கோத்தபாய ராஜபக்ஷ இருக்கின்றார் என்று பரவலாகப் பேசப்படுவதால் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளும் தற்போது மகிந்தரை விட்டும் தூரவிலகிச் செல்கின்றன. அதனால் மகிந்தருக்கு ஞானசாரரின் பரிபாசையில் சொல்வதாயின், இம்முறை “அப சரணய்….”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டே சென்றார். அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கும்போது, மகிந்தவை தோற்கடித்து தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடமேறுவதற்கு சத்தியப் பிரமாணம் செய்வது போன்றிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி என்றும் இவ்வாறானவற்றையே சொல்கின்றன. ஏன் என்றால், ஐக்கிய தேசியக் கட்சி என்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடாத்தும்போது, எப்போதும் முயலும் ஆமையுமாகவே இருக்கின்றது. முயல் பக்கம் சாய்ந்தே ஐ.தே.க. நிற்கின்றது. இல்லாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற முன்னரே கீரிடம் சூடிக் கொண்டு ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஜபக்ஷவை அரசியல் கைக்குழந்தையாகவே கருதுகின்றது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் ரணில் முயலாராகவே இருந்து வெற்றி பெறுவதாக நினைத்திருந்தார். அப்போது ஆமையாக மகிந்த ராஜபக்ஷ இருந்தார். அன்றும் ஐ.தே.க தமிழ் - முஸ்லிம் வாக்குகளைக் கைக்கொண்டு, சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை இரண்டாகப் பிரித்து மகிந்தரை “தோற்கடித்தது”.
என்றாலும், தேர்தல் முடிவு வெளியாகும்போது, அதிக வாக்குகளால் அதாவது ஒரு இலட்சத்து எண்பதாயிரம் வெற்றி பெற்றிருந்தது. ரணில் வாக்குகளை கணிப்பிட்ட முறையில் வாக்குகள் அளிக்கப்படவில்லை.
2010 ஆம் ஆண்டிலும் இதே சங்கதிதான். ஏன் என்றால் அந்நேரம் மகிந்தவுடன் எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராக போட்டியிட வந்தவர் யுத்த களத்தில் வெற்றி பெறுவதற்காக ஆணையிடு அதிகாரியாக இருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவே. பொன்சேக்கா அன்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக தான் மட்டும் தனியாக வரவில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டே வந்தார். ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து வந்திருந்தார். அதுமட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க கூட ஜனாதிபதி மகிந்தர ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கையில் சந்திரிக்கா அம்மையார் தனது ஹொரகொல்ல வளவுக்கு அழைத்து, கைக்கு கைகொடுத்து முழு இலங்கையருக்கும் நான் பொன்சேக்காவுக்கு ஆதார இருக்கிறேன் எனுமாப் போல் தெளிவுறுத்தினார். உண்மையைச் சொல்லப் போனால், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் கூட வெளியே யாரும் அறியாமல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தனர். அதனால் பொன்சேக்கா தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடமேறுவார் என்றே பலரும் கருதினர். மகிந்த கதியற்றுப் போவார் என்றும் கருதினர்.
இருந்தபோதும் தேர்தல் முடிவு வெளியாகும்போது, யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. தேர்தல் முடிவுக்கு ஒப்ப மகிந்த 18 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெற்றார்.
“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆமை போல அணிந்திருந்த மகிந்த, தேர்தல் முடிவு வரும்போது முயலாரை விடவும் வேகமாக ஓடி ஓட்ட முடிவுக் கம்பத்தின் அருகே செல்வது எப்படி?”
40 ஆண்டுகள் இலங்கை அரசியலில் சோரம்போயுள்ள மகிந்தவுக்கு இது ஒரு அற்ப வேலை. ஏன் என்றால், தேர்தலில் சிங்களவர்கள் ஆகட்டும், தமிழர்கள் ஆகட்டும், முஸ்லிம்கள் ஆகட்டும், கத்தோலிக்கர்கள் ஆகட்டும் அனைவரது வாக்குகளையும் தன் முன்னே போட்டிச் சுருட்டிக் கொள்ளும் தந்திரோபாயத்தை மகிந்தவுக்கு புதிதாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாக்காளர்கள் அனைவரதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெற அவருக்கு நன்றாகத் தெரியும்.
சென்ற வாரம் தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிரில் ரெம்போசா இலங்கைக்கு வந்ததும் அவ்வாறுதான். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தங்கள் அரசாங்கம் ஒத்துழைப்பு நல்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகொப் சூமா வெளிப்படையாகச் சொன்னது இன்று நேற்றல்ல. சென்ற வருடம் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜேகொப் சூமா அந்நேரமும் இதே கதையை நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாகக் கேட்கும் வண்ணம் சொன்னார். அவ்வாறு உரத்துச் சொல்லிவிட்டு நின்றுவிடவில்லை. தான் தென்னாபிரிக்காவுக்குச் சென்றதும் தனது விசேட பிரதிநிதியாக உப ஜனாதிபதி சிரில் ரெம்போசாவை நியமித்தார்.
“ரெம்போசா இலங்கைக்கு வந்தால் அவ்வளவுதான். அதற்கெதிராக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். அப்படி வந்து தேவையானால் தேநீர் பருகி, கிரிக்கட் விளையாட்டைப் பார்த்துவிட்டு அதே கையோடு செல்லட்டும்…. அதற்குப் பரவாயில்லை. ஆனால், அரசியல் மட்டும் பேசுவதற்கு முயற்சிக்க வேண்டாம்…”
ரெம்போசா இலங்கைக்கு வருகின்றார் எனச் சொன்னதுதான் தாமதம், அரசாங்கத்தின் பங்காளியான விமல் அப்படித்தான் சொன்னார்.
“நாங்களும் ரெம்போசா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பிரச்சினையை எங்களால் தீர்த்துக்கொள்ள முடியும். பிறநாடுகளின் தலையீடு எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை…”
விமல் வாயைப் பொத்தியதும், அரசாங்கத்தின் மற்றொரு பங்காளியான ஹெல உறுமய அவ்வாறு சொன்னது.
என்றாலும், அரசாங்கத்தின் உள்ளே இருக்கின்ற விமல், சம்பிக்க போன்றோர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்களே என்று மகிந்த ரெம்போசாவின் வருகையைத் தடை செய்யவில்லை. ரெம்போசா வடக்கிற்குச் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களைச் சந்திப்பதையோ, வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனைச் சந்திப்பதற்குச் செல்வதையோ ஜனாதிபதி மகிந்த தடைசெய்யச் செல்லவில்லை. ஏன் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து அவர்களுடன் நேருக்கு நேர் கதைத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, தமிழ் மக்கள் விருப்போடு ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே மகிந்தரின் விருப்பமாக இருந்தது.
அவ்வாறன்றி, போர் செய்வது போல அடித்துக் கொண்டு அடித்துக் கொண்டே முன்னுக்குச் சென்று அரசியல் தீர்வு வழங்க முடியாது என்பதை மகிந்தர் நன்கறிவார். இலங்கைக்கு வருகை தந்த ரெம்போசா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வடக்கிற்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தது அதுதான்.
“அதாவது, ரெம்போசா மூலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், வடக்கு மக்களின் வாக்குகளையும் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் மடியில் கொட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய்கின்றாரோ….?”
தற்போதைக்கு அதுதொடர்பில் ஒன்றும் சொல்ல முடியாதுள்ளபோதும் நடைபெறவிருப்பது அதுதான் என ஊகிக்கலாம்.
“சரி. ரெம்போசா மூலமாக வடக்கிலுள்ள வாக்குகளை மகிந்தர் பெற்றுக் கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின், முஸ்லிம்களின் வாக்குகளை மகிந்தருக்கு யார் பெற்றுக் கொடுப்பது? மகிந்த கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தனக்கு முஸ்லிம்களின் 20% வாக்குகள்தான் இருப்பதாகச் சொன்னாரே. அந்த வாக்குகளும் பேருவளை - அளுத்கம நிகழ்வின் மூலம் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் நிலவுவதாகச் சொன்னாரே…”
சிலர் மேற்கண்டவாறும் சொல்வர்.
அதாவது, அவர்களின் கருத்துப்படி மகிந்த பேருவளை, அளுத்கமை நிகழ்வை ஒரு கண்கொண்டு கூட பாராதிருந்திருந்தால் அது நடைபெறத்தான் செய்யும். ஆனால், பொலீவியாவில் நின்றிருந்த மகிந்த இலங்கைக்கு வந்தவுடனேயே நேராக பேருவளைக்குச் சென்றார். அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உறவாடி, அழித்தொழிக்கப்பட்டுள்ள அனைத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆவன செய்வதாக வாக்களித்தார். கொடுத்த வாக்குறுதியை மீறாமல் அங்கு இராணுவத்தினரை அனுப்பி புனரமைப்புக்குத் தேவையான வசதிகளைச் செய்யுமாறு பணித்தார்.
அதேபோல, மகிந்த பேருவல அசம்பாவிதம் பற்றி, மனித உரிமைப் பிரச்சினை பற்றி ஜெனீவாவுக்குச் சொன்னதைப் போலவே முஸ்லிம் நாடுகளுக்கும் அறியக் கொடுத்த ஹக்கீம் பற்றி ஜனாதிபதி அமைச்சரவையில் மாத்திரம்தான் கதைத்தாரே தவிர, அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து மகிந்தரிடம் சென்று ஹக்கீமை விரட்டிவிடுங்கள் என்று சொன்னபோதும், அப்படித் தேவையில்லை என்று சொன்னார் மகிந்தர். இது ஒரு கூட்டணி அரசாங்கம் எனவும், எல்லோரும் கூட்டணி அரசாங்கத்தினுள் ஒன்றானகச் செயற்பட வேண்டும் எனவும் சொன்னாரே தவிர, அதற்கப்பால் செல்லவில்லை.
முஸ்லிம்களின் வாக்குகளை அவ்வாறுதான் அவர் சமப்படுத்தினார்.
அதன்பின் கத்தோலிக்க வாக்குகளைப் பெறுவதற்காகவும் அவ்வாறானதொரு நாடகம்தான் ஆடினார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதும் நன்மை பயப்பதாக இருந்தாலும், பாப்பரசரின் வருகை ஜனவரி மாதம் ஆதலால், அவர் ஜனாதிபதித் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குக் கொண்டு செல்லத் தீர்மானித்தார். தேவையாயின் பாப்பரசரின் வருகையை நிறுத்தி ஜனவரி மாதமே தேர்தலை நடாத்த முடியும். என்றாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கான காரணம் ஏன் தெரியுமா? கத்தோலிக்கர்களுக்கு அநீதியிழைக்கக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யவில்லை. மகிந்தருக்கு தேவையாயிருந்தது என்னவென்றால், கத்தோலிக்கர்களையும் மகிழ்வடையச் செய்து, அதே மகிழ்வுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது.
“அதாவது, கத்தோலிக்கர்களின் வாக்குகளும் அவருக்குக் கிடைக்கும் என்பதுதானே பொருள்…”
“அவ்வாறாயின், மகிந்தர் எவ்வாறு தோற்பார் என்று சொல்வது? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மகிந்தரின் மேடையில்தானே சம்பந்தனும், ஹக்கீமும் இருக்கப் போகிறார்கள்….”
“அவ்வாறாயின் பொதுஅபேட்சகர் மகிந்தரோ…?”
அவ்வாறானால் எதிர்க்கட்சி பாடகி நந்தா மாலினியின் பாட்டைப் பாட்டைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டிவரும்.
“எனது கனவை நான் கண்டிட இடம்தாருங்கள்…
அந்தக் கனவிலிருந்து எனை மீட்க அருகினில் வாராதிருங்கள்”
(මගේ සිහිනය මට දකින් ඉඩ හරින්න
ඒ සිහිනෙන් මා මුදන්න ළං නොවන්න)
நன்றி - மவ்பி
சிங்களத்தில் - கீர்த்தி ராஜசிங்க (කීර්ති රාජසිංහ)
தமிழில் - கலைமகன் பைரூஸ்