முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தின் ஆதரவுடனா..??
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_565.html
இரட்டை இலைச் சின்ன முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தின் ஆதரவுடன்,முஸ்லிம் மக்கள் வாக்குகளை வேட்டையாடி,அரசிடம் கொண்டு சேர்க்க களமிறக்கப்பட்ட அணியா?என்ற அச்சம் முஸ்லிம் மக்களிடம் எழுந்திருப்பதை யாவரும் அறிவர்.அரசாங்கம் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் எவரையும் களமிறக்காததானது சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
எனினும்,அரசாங்கம் இந்த வேலையைச் செய்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொள்ளுமா??எனச் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இவ் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க "நாங்கள் வெற்றி பெறுவோம்"என தனது ஆதரவாளர்களின் உளவியலை பாதிக்காது தடுக்க கூறினாலும்,நாம் விரும்பினாலும் சரி,விரும்பாவிட்டாலும் சரி ஊவா மாகாண சபை வெற்றியைச் சுவைக்கப்போவது என்னவோ அரசாங்கம் தான்.ஐ.தே.க வெற்றிக்கனியைச் சுவைப்பதற்கான சாத்தியம் கிஞ்சித்தும் காணப்படவில்லை.
இத் தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதித்தேர்தல் நடை பெறுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதால்,அரசாங்கமானது தனது ஆதரவாளர்களை தன்னுடன் இணைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி நடை பயில
1) வடக்கு,கிழக்கு,தென்,மேல் மாகாண சபையில் சிறு பான்மை இன மக்களின் வாக்குகளை பெறாது புறக்கணிக்கப்பட்டதால்,இத் தேர்தலில் சிறு பான்மை இன மக்கள் தன்னுடன் உள்ளார்கள்.
2) தென்,மேல் மாகாண சபையில் அரசாங்கம் 18 ஆசன இழப்பைச் சந்தித்து அரசாங்கம் நலிவடைந்து கொண்டு செல்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் உளவியல் தாக்குதலுக்குள் அகப்பட்டமையால்,இத் தேர்தலில் ஆசன இழப்பு எதனையும் சந்திக்காமல் நாங்கள் முன்பிருந்த பலத்துடனேயே உள்ளோம்.
போன்ற கருத்துக்களை ஜனாதிபதித் தேர்தல் முன்பு மக்களிடையே நிருபிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.அதற்கு இத் தேர்தலை விட்டால் வேறு சந்தர்ப்பமும் இல்லை.இவ்வாறானவற்றை அரசு நிரூபணம் செய்ய வேண்டுமாக இருந்தால்,ஆதற்கு மு.கா,அ.இ.ம.கா ஆகியன அரசுடன் இருப்பதே சாலச்சிறந்ததே தவிர தனித்துப்போட்டி இடுவது அல்ல.
இவர்களின் கூட்டு தொடருமா?என்ற வினா தோற்றுவிக்கப்பட்டாலும், தற்கால நிலைமைகளின் அடிப்படையில் எதிர் வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இக் கூட்டைத் தொடர மக்களால் இவர்கள் உந்தப்படுவார்கள்.இதே கூட்டைப் பேணுவார்களாக இருந்தால் அரசாங்கம் முஸ்லிம்களின் சிறு பங்களிப்புடன் கைப்பற்றும் அம்பாறை,திருகோணமலை போன்ற பல மாவட்டங்களை சுயாதீனமாக இழக்க நேரிட்டு தனது போனஸ் ஆசனங்கள் பலவற்றையும் இழக்கும் சூழ் நிலை தோற்றுவிக்கப்படும்.
அதிலும் குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் அமைந்துள்ள எந்த பிரதேச சபையையும் அரசினால் கைப்பற்ற முடியாத சூழ் நிலை ஏற்படும்.
இதனை "தான்" என்ற அகங்காரம் கொண்டு பயணிக்கும் இவ் அரசால் ஒரு போதும் ஜீரணிக்க இயலாது என்பதே உண்மை.
மேலும்,மிகப் பெரிய பலமிக்கதாக திகழ்ந்த ஜே.வி.பி போன்ற கட்சிகளை இருந்த இடம் தெரியாது அளித்து அழகு பார்த்த இவ்வரசு காலத்தில்.சரியோ,பிழையோ முஸ்லிம்களை ஒன்றிணைத்து வாக்கு வேட்டைக்கு களமிறக்குமா?
இன்று அரசுக்கு எதிர்க்கட்சி சவாலாக அமைந்துள்ளதோ,இல்லையோ தமிழ் மக்கள் யாவரையும் ஒன்றிணைத்து அரசியல் நீரோட்டப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதை யாவரும் அறிவர்.
இப்படி இருக்க, முஸ்லிம் கட்சிகளின் ஒன்ரினைவிட்கான முதற் படியாக பார்க்கப்படும்,முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க விளையும் இவ்வாறான கூட்டிட்கான அத்திவாரத்தை அரசே அமைத்துக் கொடுக்குமா?
கொடுப்பதுதான் அரசின் சாணக்கியமா ??
எனவே,நிச்சயமாக இக் கூட்டிற்கு அரசின் அனுசரனை ஒரு போதும் இராது மாத்திரம் அல்ல ஒரு போதும் விரும்பாது என்பதே வெளிப்படை உண்மை.