மருதானையில் கூட்டத்தை குழப்பிய பிக்குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வாசுதேவ
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_58.html
அமைப்புகள் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்தும் இடத்திற்குள் பலவந்தமாக எவர் நுழைய முயற்சித்தாலும் அது சட்டவிரோதமானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருதானையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பிக்குமார் சென்று தடையை ஏற்படுத்தியமை பாரதூரமான குற்றமாகும். பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸார் உரிய முறையில் செயற்படாதது குறித்து ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தடையேற்படுத்துவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு பதிலாக பொலிஸார், இடையூறுக்கு உள்ளானவர்களின் செயற்பாடுகளை நிறுத்த முயற்சித்து வருகின்றர்.
பொலிஸார் தமது பொறுப்புக்கு மாறாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பது தவறானதல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் அவர்கள் செயற்படும் போது நாட்டில் நடப்பவை மற்றும் நாட்டில் காணப்படும் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியமானது.
எனினும் அவர்கள் தமது வரையறையை மீறி சமூக அமைப்புகளின் பங்காளர்களாக மாறுவார்கள் எனில், அது இந்த நாட்டின் பிரச்சினைகளில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாக கருதப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் அல்லது சமூக தலையீடுகளுக்குள் அவர்கள் இருக்கக் கூடாது எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.