முடிவுக்கு வந்தது விமலின் நாடகம் - ஆளுங்கட்சியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_6.html
ஆளுங்கட்சிக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்ச முன்னெடுத்த அரசியல் நாடகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச, தற்போது ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர். வீடமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்பி்ல் இருப்பவர்.
இவற்றுக்கு மேலதிகமாக ஆளுங்கட்சிக்குள் ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவின் செல்லப்பிள்ளை. அரசாங்கத்திற்குள் ஜனாதிபதிக்கு பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவதற்காகவே ராவண பலகாய என்றொரு கடும்போக்குவாத அமைப்பை உருவாக்கி, ஆளுங்கட்சியின் ஏவல் அடியாளாக இருப்பவர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக அரசாங்கம் தவறான வழியில் செல்வதாகவும், அதன் காரணமாக தாம் அமைச்சுப் பதவியை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச பாரிய அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
ஆளுங்கட்சியின் சார்பிலும் அதற்கான ஆதரவு வழங்கப்பட்டதுடன், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டிலும் விமல் வீரவன்ச உண்மையாகவே ஆளுங்கட்சியை விட்டு விலகப் போவதாக அமைச்சர் கெஹலிய உறுதிப்படுத்தினார்.
நிலைமை இவ்வாறிருக்க கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போன்று நேற்றுடன் அமைச்சர் விமல் வீரவன்சவின் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது. ஆளுங்கட்சிக்கும், விமலின் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த நாடகம் சுபமாக அரங்கேற்றப்பட்டது.
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பிலிம் காட்டிக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, நேற்றுடன் அந்தர்பல்டி அடித்து, ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் மட்டும் அவரது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.