காஸாவை புறக்கணித்த காஸா நேசர்கள்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_606.html
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உதவியை மிகவுமே எதிர்பார்ப்பது இக்கட்டானதும், பலவீனமானதும் நேரத்திலேயே ஆகும். காலம் காலமாக பாலஸ்தீனத்தினதும், காஸாவினதும், ஹமாசினதும் பெயரால் மக்களை தம் பக்கம் கவர்ந்தவர்கள், இக்கட்டான நேரத்தில் எப்படி நழுவினார்கள் என்று அறியும் பொழுது ஆச்சரியமாகவும், நம்பமுடியாமலும் உள்ளது.
ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியைப் பொறுத்தவரை, ஏனைய இயக்கங்கள் போன்று அமல், இபாதத், பிக்ஹு, பித்அத், தொழுகை, ஹஜ்ஜு என்று மார்க்க விடயங்களுக்குள் தம்மை வரையறுத்துக் கொண்ட இயக்கமாக காட்டிக் கொள்ளமால், மிகப் பாரிய சமூக சிந்தனையும், சர்வதேச இஸ்லாமியப் பார்வையும் கொண்ட தூரநோக்குள்ள ஒரு இயக்கமாகவே தன்னை அது வெளிப்படுத்தி வந்துள்ளது.
இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமியின் வளர்ச்சி என்பது, பெரும்பாலும் அந்த இயக்கம் முன்னெடுத்த ஆப்கானிஸ்தான், கஷ்மீர், பாலஸ்தீன், பொஸ்னியா, செச்னியா போன்ற சர்வதேச விவகார ஆதரவுப் பிரச்சாரத்தினாலே கவரப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் அந்த இயக்கத்தில் இணைந்ததாலேயே சாத்தியமாகியது. எனினும் இன்று, காஸா மக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், குறித்த இயக்கம் என்ன செய்தது என்பது பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.
ஹமாஸ், ஹனியா, ஷேய்க் யாசீன், அய்யாஷ் என்று உணர்ச்சி பொங்கப் பேசியது மட்டுமின்றி அய்யாஷ் பெயரில் புத்தகம் கூட வெளியிட்டு, விற்பனையில் சாதனை படைத்தது ஜமாத்தே இஸ்லாமி.
இரண்டாம் உலக மாக யுத்தத்திற்குப் பின்னர் முதல் தடவையாக யூத சியோனிஸ்டுகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பலைகள் உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான சூழலில், பிக்ஹு விடயங்களுக்காக போர்க்கொடி தூக்கும் SLTJ மட்டுமின்றி, மார்க்சிஸ சிந்தனை கொண்ட இடதுசாரிக் கட்சியான JVP கூட இஸ்ரவேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுத்து காஸாவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், காலம் காலமாக காஸாவை முதலீடாக பயன்படுத்தி இயக்கத்தை வளர்த்துக்கொண்ட ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி தந்திரமாக நழுவிக் கொண்டது.
சமூக சிந்தனையும், சர்வதேச இஸ்லாமியப் பார்வையும் கொண்ட தூரநோக்குள்ள ஒரு இயக்கம் என்ற மாயயை, பிரமிப்பை ஏற்படுத்தி, அதையொட்டி பிரச்சாரங்களை முன்னெடுத்து, அதன் மூலம் தனது வளர்ச்சியை திறமையாக திட்டமிட்டுக் கொண்ட ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி, இக்கட்டான சூழ்நிலையில் காஸாவை மட்டுமின்றி, இந்நாட்டு முஸ்லிம்களையும் கைவிட்டு நழுவியுள்ளது.
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், அளுத்கமை, பேருவளை வன்முறை இடம்பெற்றது வரை ஜமாத்தே இஸ்லாமி ஒருவித நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது, காஸா விவகாரத்திலும் இதுதான் நிலைமை. எனினும் மிகவுமே கவலையான விடயம், காஸாவைக் காட்டி தம்மை வளர்த்தவர்கள், காஸாவிற்காக எதுவும் செய்யவில்லை என்பதுடன் ஒதுங்கியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தமது அல்ஹசநாத் சஞ்சிகையின் இம்மாத வெளியீட்டில்
காஸாவின் குருதி தேய்ந்த போராட்டத்தை அட்டகாசமான முன் அட்டைப்படமாகப் போட்டு அதன் மூலம் சஞ்சிகை விற்பனை அதிகரிப்பை தந்திரமாக குறி வைத்துள்ளனர் என்பது மிகவும் கவலையானதும், வெட்கக் கேடானதும் ஆகும்.
உண்மையான நண்பனை இக்கட்டான நேரத்தில் கண்டுகொள்ளலாம் என்பார்கள், உண்மையில்லாத நண்பனை கண்டுகொண்டது காஸா மட்டுமல்ல, நாமும்தான்.
இக்கட்டுரக்கான முழுப் பொறுப்பும் இதனை அனுப்பியவரையே சாறும். வெலிகம நியூஸ் இதற்கு எந்த வகையிலும் பொறுப்பானதல்ல.
இக்கட்டுரக்கான முழுப் பொறுப்பும் இதனை அனுப்பியவரையே சாறும். வெலிகம நியூஸ் இதற்கு எந்த வகையிலும் பொறுப்பானதல்ல.