புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் இடம்பிடித்த சந்தலி புன்சரணி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_696.html
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இருந்து முகம்கொடுத்த மாணவியொருவரின் செய்தி இன்று எமக்கு பதிவாகியது.
எ.எம்.சந்தலி புன்சரணி, இனாமலுவ வீரவிஜய விமலரத்ன வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியாவார்.
பல எதிர்பார்ப்புக்களுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்காக சந்தலி வீட்டில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.
அவர் பயணித்த தனியார் பஸ், தம்புள்ளை ஹபரண வீதியின் இனாமலுவ பிரதேசத்தில், இராணுவ உழவு இயந்திரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த நிலையில் சந்தலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரின் பரீட்சை கனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் துமிந்த டயஸ் தெரிவித்த கருத்து:-
“பரீட்சைகள் ஆணையாளருக்கு நாம் தொடர்பினை ஏற்படுத்தினோம். அந்த சந்தர்ப்பத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியுமா என அவர் கேட்டார். அதன் பிரகாரம் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்ததை அடுத்து, வைத்தியசாலை மட்டத்தில் அனைத்து விடயங்களையும் நாம் செய்துகொடுத்தோம்.”
வைத்தியசாலையில் இருந்து சந்தலி புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார முன்னெடுத்தார்.
விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ், பரீட்சை வினாத்தாளுடன் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு அதிகாரி ஒருவர் வருகை தந்ததுடன், வைத்தியசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய சந்தலி புன்சரணி மாணவி, புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் இடம்பிடித்தார்.
சந்தலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கான விபத்து இன்று காலை தம்புள்ளை ஹபரண வீதியின்
இனாமலுவ பகுதியில் இடம்பெற்றது.
இனாமலுவ பகுதியில் இடம்பெற்றது.
அவர் பயணித்த தனியார் பஸ் சிகிரியாவில் இருந்து ஹபரண நோக்கி பயணித்ததுடன், ஹபரணவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இராணுவ உழவு இயந்திரமொன்றுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இராணுவ உழவு இயந்திரத்தில் பயணித்த 27 வயதான சார்ஜன் மேஜர் ரஞ்ஜித் குமார உயிரிழந்தார்.
அவர் மொனராகலை – வெவிபிடிய பகுதியைச் சேர்ந்தவராவார்
மூன்று இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 27 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த சந்தலி உள்ளிட்ட சிலர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் துமிந்த டயஸ் குறிப்பிட்டார்.