ஊவா தேர்தலும் இலங்கை முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையும்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_83.html
இலங்கையின் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியலில் இரு துருவங்களாக கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையில் பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் மட்டும் போட்டியிட தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகிவை, கூட்டாக ஜனநாயக ஐக்கிய முன்னனியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளனர.
பொதுச் சின்னமொன்றில் போட்டியிடுவது தொடர்பாக முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம் அமைப்பான மலையக முஸ்லிம் கவுன்சில்க்குமிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஹசன் அலி பிபிசி தமிழோசையிடம் உறுத்திப்படுத்தினார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை
இது தொடர்பாக பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகிய முத்தரப்பினருக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் கால அவகாசம் நாளை புதன் கிழமை நண்பகலுடன் முடிவடைகின்றது.
பதளை மாவட்டத்தில் மட்டுமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடிய வாப்புகள் இருப்பதால் அம் மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடுவதற்கு குறித்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஊவா மாகாண சபையில் கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவான முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருந்த போதிலும் 2004ம் ஆண்டு தேர்தலில் அந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் முஸ்லிம்கள் ஓரே சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே அந்த பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெறக் கூடியதாக இருக்கும் என அநேகமான முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையும் எதிர்பார்பாகவும் இருப்பதாக மலைய முஸ்லிம் கவுன்சில் தலைவர் அப்துல் மஜீத் முகமட் முஸாம்பில் கூறுகின்றார்.
தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் பலத்தையும் ஓற்றுமையையும் அரசாங்கத்திற்கு காட்டக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை முஸ்லிம் அரசியலில் இரு துருவங்களாக விளங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தேர்தலொன்றில் பொதுச் சின்னமொன்றில் முஸ்லிம்களின் தனித்துவத்திற்காக போட்டியிடுவது இதுவே முதற்தடைவையாகும்.
இந்த தேர்தலில் அடித்தளமிடப்பட்டுள்ள இந்த தேர்தல் கூட்டு எதிர்கால முஸ்லிம் அரசியலில் திருப்புமுனையாக அமையலாம் என்ற எதிர்வு கூறல்களும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக நிலவுகின்றது.
ஹரீன் பெர்ணாண்டோ பதவி விலகல்
இதே வேளை ஊவா மாகாண சபைத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினால் முதலமைச்சர் வேட்பாளராக முன் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வின் போது சமூகமளித்திருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்பித்துள்ளார்.
இவரது இராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்பு தெரிவு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள கே. வேலாயுதம் நியமனம் பெறுவார். என எதிர்பார்க்கப்படுகின்றது.