பெளத்த குருமாரை விமர்சிக்கும் அமைச்சர்களை ஜனாதிபதி கட்டிப்போட வேண்டும்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_983.html
பெளத்த குருமாரை விமர்சிக்கும் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டிப்போட வேண்டும். இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் 'சாவு மணியாக'' அமையும் என எச்சரிக்கை விடுத்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நோர்வேயிடம் பணம் வாங்கியதாக எம்மீது குற்றம் சாட்டும் அமைச்சரொருவர் அதனை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் அமைச்சரது ஊழல், மோசடிகள், முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் பணம்பெற்றுக்கொண்ட அனைத்து தகவல்களையும் சாட்சியங்களுடன் வெளிப்படுத்துவோமென்றும் தேரர் சவால் விடுத்தார்.
பெளத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை எதிர்த்து ''சிங்கள பெளத்த குருமாரின் முன்னோக்கிய பயணம்'' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு பெளத்த மகா சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவ் அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தலைமையில் இம் மாநாடு இடம்பெற்றது.
இம் மாநாட்டில் ஞானசார தேரர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1988 - 89ஆம் ஆண்டுகளில் ஐ.தே.கட்சியில் இருந்து கொண்டு ப்ரா அமைப்பை உருவாக்கி சிங்கள இளைஞர்களை கொன்று குவிக்க துணை போனவர்.
பிரபாகரனை யுத்தத்தால் அழிக்க முடியாது புலிகளோடு பேச வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையை தீர்க்க முடியாது என ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் புலிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு தாலாட்டியவர்கள்.
இப்பிரச்சினையை தீர்க்க ரணிலே சிறந்த தலைவர் என புகழ்பாடியவர்கள்.
இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புத்தியில்லாதவர் யுத்தத்தால் புலிகளை அழிக்க முடியுமென நினைக்கின்றார் என விமர்சித்தவர்கள் அக்கூட்டத்தில் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகொண்டதால் அப் பெயரை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று இன்று அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
இன்றும் இந்த அமைச்சர் புலிகளின் உறுப்பினர்களை பாதுகாக்கின்றார். பேருவளை, அளுத்கமையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிங்கள பெளத்தத்தை ஒழிக்கும் திட்டங்களை குறிப்பிட்ட இந்த அமைச்சர் முன்னெடுத்து வருகின்றார்.
27000 படையினர் உயிர் அர்ப்பணிப்பு செய்து பாதுகாத்த நாட்டில் சிங்கள பெளத்தர்களை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் இவருக்கு இடமளிக்க முடியாது.
பொதுபலசேனா நோர்வேயிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பெளத்தர்களை அழித்து அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்த அமைச்சர் கூறுகின்றார்.
பெளத்த குருமாரை இழிவாகப் பேசுகின்றார். அரசாங்கத்திலுள்ள இந்த அமைச்சரையும் இதுபோன்று குருமாரை விமர்சிக்கும் வேறு சில அமைச்சர்களையும் ஜனாதிபதி கட்டிப்போட வேண்டும்.
அதனை செய்யாது இது தொடருமானால் அங்கு இந்த அரசாங்கத்திற்கு சாவு மணியாக அமையும்.எந்தவொரு பெளத்த குருமாரையும் விமர்சிக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு கிடையாது.
அதற்கு மகாநாயக்க தேரர்கள் உள்ளனர். எமது பொறுமைக்கும் எல்லையுண்டு.காவியுடையை சீண்டினால் அதன் பிரதிபலன்கள் பாரிய பாதகமாக அமையும்.
யுத்தத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்து கட்டிய ஜனாதிபதி மீது சிங்கள பெளத்த மக்கள் அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.
ஆனால் ஜனாதிபதியை சுற்றியுள்ள சில நயவஞ்சகர்கள் இதனை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.