ஆசிரியையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது பிரதேசவாசிகள் சந்தேக நபரின் வீட்டின் மீது தாக்குதல்
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_27.html
பசறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியையின் சடலம் நேற்றுதோண்டி எடுக்கப்பட்டது. பதுளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மகேஷி பிரியதர்சினி த சில்வா மற்றும் பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி, இ.தொ.கா உபதலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் முன்னிலையிலேயே சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஆத்திரம் கொண்ட பிரதேச மக்கள் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் பூசாரின் வீட்டை தாக்கிச் சேதபப்டுத்தியதாக கூறப்படுகிறது.
பசறை பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் பாடசாலை முடிந்தும் வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பசறைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து காணாமல் போன ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை அறிந்து அதனுடன் இறுதியாக தொடர்பு கொண்ட இலக்கத்தை கண்டுபிடித்து உரிய நபரை இனம் கண்டு பிரதேச ஆலயம் ஒன்றின் பூசகர் ஒருவரைக் கைது செய்ய முயற்சித்த போது அவர் பஸ் ஒன்றின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோதிலும் அம் முயற்சி பயனனிக்காமல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக இ.தொ.கா வின் உபதலைவரும். வேட்பாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதும் அவர் பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு ஏற்பட்டிருந்த பதட்ட நிலையினை தனிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பூசகர் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஒப்புதல் வாக்கு மூலத்தில் சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்தினைத் தெரிவித்துள்ளார் பூசாரி இதனையடுத்தே ஆசிரியையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பதுளை அரசினர் மருத்துவமனையில் விலங்கிடப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவரை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பதுளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.