மஹிந்தவே ஐ.ம.சு.முன்னணியின் சிறந்த பொதுவேட்பாளர்: பொதுபல சேனா
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_28.html
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என தாம் கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தேர்தலின் போது இன்னும் சிறப்பான வேட்பாளர் ஒருவர் போட்டியிட முன்வருவாரானால், அவர் எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அவருக்கு நாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் சாயம் வெளுத்தது! மஹிந்தவே மிகச்சிறந்த பொதுவேட்பாளராம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மிகச்சிறந்த பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்ததான் அந்த வேட்பாளர்.
ஏனைய கட்சிகள் ஒன்று சேர்ந்த கொண்டுவர இருக்கும் பொது வேட்பாளர் யார், எப்படிப்பட்டவர் என்று தெரியாது. அவரது குறை, நிறைகள் எதுவும் தெரியாது.
ஆனால் மஹிந்தவைப் பற்றி நாட்டு மக்களுக்கு முழுமையாக எல்லாம் தெரியும். அந்த வகையில் பார்க்கும் போது மிகச்சிறந்த பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.
அவரைத் தவிர்த்து இன்னொரு பொதுவேட்பாளர் வருவார் என்று இரண்டு பக்கமும் சாராமல் காத்திருப்பதில் இனியும் பலனில்லை. அதன் காரணமாக ஜனாதிபதிக்கே இந்தத் தேர்தலில் ஆதரவு வழங்க பொதுபல சேனா தீர்மானித்துள்ளது.
சிங்கள, பௌத்த மக்கள் தற்போது சர்வதேச அழுத்தமொன்றுக்கு உட்பட்டுள்ளனர். அதன் தாக்கம் இப்போது அனைவராலும் உணரப்படுகின்றது. அமெரிக்காவில் கடன் வாங்கி, அவுஸ்திரேலியாவில் ஆப்பிள் வாங்கும் பொருளாதார நிலைமையை நாம் ஆதரிக்க முடியாது.
அவ்வாறான பொருளாதார நிலையிலிருந்து விடுடக் கூடிய ஆற்றலும், சர்வதேச சக்திகளின் அழுத்தத்திலிருந்து நாட்டை பாதுகாக்கும் ஆற்றலும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மட்டுமே உள்ளது.
எனவே இனியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை.பொதுபல சேனா பகிரங்கமாகவே ஜனாதிபதிக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கும் ஞானசார தேரருக்கும் இருந்து வந்த தொடர்பு குறித்து அவர் இதுவரை மறுத்தே வந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிராகவே தாம் செயற்படுவதாக பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இன்றைய அறிவிப்பின் மூலம் பொதுபல சேனாவின் சாயம் வெளுத்துள்ளதாக நடுநிலை சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.