கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம்
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_61.html
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டி பிரதான வீதியின் கொடக்கவெல மல்வத்தை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையால் அந்தவீதியூடான வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இறக்குவானை மத்திம்புல வீதியிலும் பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், சிறு சிறு மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
இந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தின் கண்டி – ராகல ஊடாக வலப்பனை வீதி, நுவரெலியா – ஹட்டன் வீதி மற்றும் கண்டி – பதுளை ஊடாக ரந்தெனிகல வீதிகளிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி, மாவட்டத்தில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தை மேற்கோள்காட்டி இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. - NewsFirst