அமைச்சரவை நியமனம் தள்ளிப் போகும் சாத்தியம்?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_11.html
மைத்திரி பக்கம் 98 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அதேவேளை மகிந்த ராஜபக்ச பக்கம் 118 உறுப்பினர்கள் இருப்பதனாலும் ஆட்சியமைப்பதற்கு 115 உறுப்பினர்கள் தேவைப்படுவதனாலும் இன்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை நியமனம் தள்ளிப்போவதோடு ஏற்கனவே அறிவித்ததற்குப் புறம்பாக அமைச்சர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 40ஆக உயரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில். தொண்டமான், பிரபா கணேசன், வாசுதேவ, பேராசிரியர் திஸ்சவிதாரண, டி.யு. குணசேகர,திலான் பெரேரா, மற்றும் ஜ,தே.கட்சியில் இருந்து சென்ற அதவுல்லா, ஹிஸ்புல்லா, காதர் மற்றும் சிலருடன் சந்திரிக்கா, ராஜித்த பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக தகவல் அறிய முடிகின்ற அதேவேளை, ஏப்ரல் 20ம் திகதி வரையான நூறு நாட்கள் மாத்திரமே புதிய அமைச்சரவையும் இயங்கும் என்பதும் இக்கால இடைவெளியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் செயற்ப் அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்ட்டுள்ள நிலையில் பாராளுமன்றப் பெரும்பான்மை தொடர்பான சவால் ஒன்றினை புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளவுள்ளமையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க செயற்படுவதற்கும் பாராளுமன்றப் பெரும்பான்மை தேவையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எனவே முன்னர் குறிப்பிட்டபடி 25 அமைச்சர்களுடனான அமைச்சரவையை அமைத்து முன்செல்ல முடியுமா என அரசியல் அரங்கில் கேள்வியெழுந்துள்ளதோடு எதிர்வரும 19ம் திகதி பாராளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சியில் உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் புதிய ஜனாதிபதி ஆட்சியமைக்க முடியாத நிலை தோன்றும்.
ஆட்சி மாற்றத்தோடு மேலும் பல உறுப்பினர்கள் தம் பக்கம் சேர்வார்கள் என்றே பொது எதிரணி ஆரம்பம் முதற்கொண்டு எதிர்பார்தது வந்ததும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பியிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை ஆளுங்கட்சியிலிருந்து மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்குப் பகரமாக மேலும் அமைச்சர்கள் நியமனம் வழங்கும் இக்கட்டான நிலை உருவாகியிருப்பதோடு ஏற்கனவே த.தே.கூ மற்றும் ஜே.வி.பி ஆளுங்கட்சி வரிசையில் அமர மாட்டாது எனும் நிலைப்பாடே அறிவிக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மைத்ரியின் வெற்றிக்காக உழைத்த அசாத் சாலி, மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், ஹிருனிகா, சரத் பொன்சேகா உட்பட பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையெனும் நிலையில் மேலதிக உறுப்பினர் தேவையை நிரப்ப எவ்வகையான முன்னெடுப்புகள் அறிவிக்கப்படும் எனும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருப்பதோடு இதனடிப்படையில் அமைச்சரவை நியமனம் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இல்லையெனின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலைக்கு புதிய ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதும் எனினும் புதிய ஜனாதிபதி இவ்விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறார் எனும் எதிர்பார்ப்பு அரசியல் மட்டத்தில் எகிறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.