கொடிய பாவம் விபச்சாரம் இலங்கையில் சர்வசாதாரணமாகி போய் விட்டதா?
http://newsweligama.blogspot.com/2014/05/blog-post_949.html
இலங்கையில் இப்போதெல்லாம் விபச்சாரம் என்பது சர்வசாதாரணமாகி போய் விட்டதுபோலவே இருக்கின்றது அவ்வாறுதான் ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
இதுவரையில் தலைநகரில் மட்டும் நடந்துவந்த விபச்சாரம் இப்போது நாட்டின் நாலா பக்கங்களுக்கும் ஒரு புற்றுநோயை போல பரவி விட்டதை அவதானிக்க முடிகின்றது. விபச்சாரம் என்பது ஒரு கொடிய பாவச்செயல் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இருந்தபோதும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் செய்யும் இந்த செயலை எந்த காரணத்தை கொண்டும் நாம் நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் ஆண்களோ எந்த வித காரண காரியமும் இன்றி சூழ்நிலைகளும் இன்றி இயல்பாகவே விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இன்று கண்ணில் பட்ட ஒரு செய்தி காத்தான்குடியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவருக்கு மார்க்க அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது என்று இருந்தது.
மார்க்க அடிப்படையில் என்றால் என்ன தண்டனை வழங்கினார்கள் ? மணமான ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஆளுக்கு நூறு கசையடிகள் வழங்கி உயிர் பிரியும்வரை கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும், மணமாகாத இருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் நூறு கசையடிகள் வழங்கி நாடுகடத்தப்பட வேண்டும் என்று அண்ணல் நபிகளாரின் ஹதீஸ் இருக்கின்றது. அப்படியானால் ஒன்றை செய்துவிட்டு இன்னொன்றை செய்யாமல் விடுவதற்கு பெயர்தானா மார்க்க அடிப்படை.
அல்லாஹ் சூரத்துன் நிசாவில் இப்படி சொல்கிறான்
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
(அன்னிஸா 4:15)
இந்த வசனம், விபச்சாரக் குற்றத்திற்கு குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்படாமல் இருந்த இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இறக்கப்பட்டது. அதன்பிறகான கால கட்டத்தில் இறைவனின் தீர்ப்பு இவ்வாறு அமைந்திருந்தது.
சூரத்துன் நூரில் அல்லாஹ் அழகாக சொல்கிறான்
விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
(சூரத்துன் நூர் : 24:2)
இறைச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கும் இரக்கம் ஏற்படவேண்டாம் என்றும் விபச்சாரன், விபச்சாரி தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோர் பார்க்க வேண்டும் எனவும் மற்றவருக்குப் படிப்பினையாக்கியது இஸ்லாம்.
அல் குர் ஆனின் கட்டளைப்படி விபச்சாரி, விபச்சாரன் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடித்துத் தண்டிக்கும்படி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பு வருமாறு.
‘(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர் ! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி (உயிர் பிரியும்வரை) கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் – உபாதா பின் ஸாமித் (ரலி) நூல்கள் – முஸ்லிம் 3489,3490 திர்மிதீ 1354)
இதன் பிறகு, மணமாகாத ஆணோ – பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு கசையடிகளும், ஓராண்டு காலம் நாடுகடத்தலும் மணமான ஆணோ – பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களை உயிர் பிரியும் வரை கல்லெறிந்து கொல்வதும் சட்டமாகியது. தொடர்ந்து அச்சட்டம் கடைபிடிக்கப்பட்டது, அது குறித்த பல நபிவழிச் செய்திகளிலிருந்து ஒரு அறிவிப்பு.
கிராமவாசிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே ! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, – ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள்.
அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப் படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக ! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு லஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே ! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
இப்போது நீங்களே சொல்லுங்கள் முஸ்லீம்களான நமக்குக்குள் பிரிவினைகள் வேண்டாம்அல் குர்ஆன், அஸ்சுன்னா தான் ஒரு முஸ்லீமின் வாழ்க்கை நெறியாக இருக்கவேண்டும். இதைதவிர வேறு எதுவும் இல்லை, இந இரண்டையும் நமக்கு ஏற்றது போல வளைத்தெடுக்கும் சக்தியும் உரிமையும் நம்மிடத்தில் உண்டா ?