இஸ்ரேலின் அஸ்தமனம் உதயமாகின்றது!!
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_81.html
தமிழில்- ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
“காஸா மீது நாம் தொடுத்திருக்கும் யுத்தமானது யூதர்களின் பிரதேசத்தை கட்டிக் காப்பதற்கும், அதன் இருப்பை உறுதி செய்வதற்குமான யுத்தமே ஆகும்” என இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெடன்யகு தனது நாட்டு மக்களுக்கு, தம் அரசினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பற்றி விவரிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் கூறியது முற்றிலும் உண்மையே. இருப்பினும் இஸ்ரேலினால் இறுதி வெற்றியை அடைந்துகொள்ள ஒருபோதும் முடியாது. ஒரு யுத்த வெற்றியை குறிப்பிடத்தக்க சில அடைவுகளை வைத்தே கணிப்பிட வேண்டும். சுரங்கப் பாதைகளை வெடி வைத்து தகர்த்ததை வைத்தோ, பலியான பொதுமக்களின் எண்ணிகையை வைத்தோ அல்லது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் நிர்மூலமாக்கப்பட்டதை வைத்தோ யுத்தமொன்றின் இறுதி வெற்றி கணிப்பிடப்படுவதில்லை.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடரவோ அல்லது நிறுத்தவோ முடியாதவாறு ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேல் அரசினை திண்டாட வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும். இறுதியில் இஸ்ரேல் அரசானது, யுத்த நிறுத்தத்திற்கு தாமாக விரும்பி வரவேண்டிய வலுக்கட்டாய நிலைக்கு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலினைத் தள்ளியுள்ளது என்பது வெளிப்படை உண்மை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஹமாஸ் தான் விரும்பிய வகையில் தமக்கு சாதகமாக யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை உறுதி செய்துகொள்ள முடியும். இதுவே ஹமாஸ் அமைப்பின் இராஜதந்திர யுத்த தந்திரோபாயமாகும். இந்த அடிப்படையில் இறுதி யுத்த வெற்றி இஸ்ரேலுக்கு அன்றி ஹமாஸ் அமைப்புக்கே என்பது திண்ணம்.
ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேல் தனது இராணுவப் படையை தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்வதிலிருந்தும் தவிர்த்துக்கொள்ள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தரைவழித் தாக்குதலில் தனது இராணுவம் தோல்வியுறுமானால் அது எஞ்சியிருக்கும் இராணுவ பலம் மற்றும் நாட்டின் இருப்புக்கு சாட்டையடியாக இருக்கும் என்பதை இஸ்ரேல் நன்கு உணர்ந்திருந்தது. இருப்பினும் இஸ்ரேலிய அரசு பலஸ்தீனத்தின் எதிர்ப்பை சமாளிக்கத்தக்க வகையில் இராணுவ பலத்தில் குன்றியுள்ளது எனும் அனுமானம் நாட்டு மக்களுக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ ஏற்பட்டு ஈற்றில் எதிர்க்கட்சிகளின் மத்தியில் அது ஒரு பேசுபொருள் ஆகிவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவும் தரைவழித் தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தியது.
இறுதியில் இஸ்ரேலிய அரசு தங்கள் மீது கரிசனை கொண்டுள்ள நாடுகளுக்கும் சர்வதேசத்திற்கும், ஹமாஸின் இடைவிடாத ஏவுகணைத் தாக்குதல்களால் தங்கள் பிரஜைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தம் பிரஜைகளைக் காப்பாற்றுவது தம் உரிமை எனவும் கூறி ஒரு மாயையை முன்வைத்து தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. ஆனால் அத்தீர்மானம் இறுதியில் தமக்கே வினையாகிப் போகும் எனவும் தரைவழித் தாக்குதல்கள் தமது கனவுகளை தரைமட்டம் ஆக்கப் போகின்றது எனவும் இஸ்ரேல் அறிந்திருக்கவில்லை. தமது ஏவுகணைத் தாக்குதல்களின் போது உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த ஆயுத பலம் பற்றிய கற்பனைச் சித்தரிப்பானது தரைவழித் தாக்குதல்களின் போது சிதறடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். தனது மிக முக்கிய இராணுவத் தளபதிகளை தரைவழித் தாக்குதல்களின் போது இழந்துள்ளதோடு, சர்வதேசத்தின் மத்தியில் பல்வேறு சர்வதேச போர்ச் சட்டங்களை மீறிய குற்றவாளியாக இஸ்ரேல் எஞ்சி நிற்கின்றது.
உண்மை நிலவரம் என்னவெனில், ஹமாஸினை முற்றாக நிர்மூலமாக்குவோம் எனும் உறுதியோடு இஸ்ரேலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தரைவழித் தாக்குதல்களில் ஹமாஸின் ஆக்கிரமிப்பே அதிகமாகக் காணப்படுவதோடு, ஹமாஸ் இஸ்ரேல் படைகளை காஸாவினை விட்டும் பின்வாங்கச் செய்து ஈற்றில் இஸ்ரேலுக்குள் புகுந்தும் தாக்குதல்களைப் புரியுமளவுக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ளது. டெல் அவிவ் பகுதியிலிருந்து சரமாரியாக காஸாவை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளால் கூட ஹமாஸின் சாமர்த்திய தரைவழி எதிர்த் தாக்குதல்களை நிறுத்த முடியவில்லை.
இஸ்ரேலிய இராணுப் படையின் தோல்வியானது, பலஸ்தீனை முழுமையாக ஆக்கிரமிக்கத் துடிக்கும் இஸ்ரேலிய அரசை முற்றிலும் நம்பிக்கையிழக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மாற்றான் நிலத்தில் வஞ்சகமாக உட்புகுந்து, கைப்பற்றி அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நாடும் இறுதியில் அப்பகுதிலேயே தம்மை அழிப்பதற்கு உரிமைக்காக போராடும் வலுவான ஒரு குழு தோன்றும் என்பதை உணரவேண்டிய தேவை இருக்கின்றது. ஹமாஸின் வீரியமிக்க எதிர்த் தாக்குதல் இஸ்ரேலுக்கு தக்கதோர் படிப்பினையாகும். இஸ்ரேலின் முக்கிய கட்டளைத் தளபதிகள் சவப் பெட்டிகளில் நாடு திரும்புவது, பலஸ்தீனத்தில் இனியும் இஸ்ரேல் காலடி எடுத்து வைப்பதற்கும் தயங்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் நிலைமை இவ்வாறு தொடருமெனில் எதிர்கால இஸ்ரேலிய இராணுவம் அனுபவமிக்க தளபதிகளற்ற, கற்றுக்குட்டிப் படைகளாக உருவெடுக்கும் என்பது திண்ணம். பலஸ்தீனத்தை கைப்பற்ற முயற்சிப்பதை கைவிட்டு, வேறெங்காவது முயற்சிக்க வேண்டிய நிலைமை எதிர்கால இஸ்ரேலுக்கு ஏற்படும் என்பது தெளிவு.
நன்றி:எங்கள் தேசம்